Friday, 13 January 2017

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-53


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-53
(சுவாமி விவேகானந்தர்)
----
மலை, மணலிலிருந்து தோன்றி மறுபடியும் மணலாக மாறுகிறது. ஆறு, நீராவியிலிருந்து தோன்றி மீண்டும் நீராவியாக மாறுகிறது. தாவரம் விதையிலிருந்து தோன்றி விதையிலேயே முடிகிறது. மனித உயிர், மனித உயிரணுக்களிலிருந்து தோன்றி மனித உயிரணுக்களாக முடிகிறது.
இந்தப் பிரபஞ்சம், எங்கிருந்து தொன்றியதோ அங்கேயே மீண்டும் முடிவடைகிறது..
இதிலிருந்தெல்லாம் நாம் அறிவது என்ன?
இதோ, இங்கே இருக்கும் மேஜையை உடைத்து, அழித்துவிட்டால், அது, நாம் மேஜை என்று சொல்லும் இந்த உருவத்தை அமைப்பதற்குக் காரணமாக இருந்த அதன் நுட்பமான துகள்களாகிய காரண நிலையை அடைந்துவிடுகிறது.
மனிதன் இறக்கும்போது, அவனது உடலை உருவாக்கக் காரணமாக இருந்த மூலங்களின் நிலையை அடைகிறான். இந்தப் பூமி அழிந்தால், அதற்கு உருவம் அளித்த மூலகாரணத்தை அடைந்துவிடுகிறது. மூலகாரண நிலையை அடைவதையே நாம் அழிவு என்கிறோம்.
ஆகவே காரணம் காரியத்திலிருந்து வேறுபடுவதில்லை என்பதைக் காண்கிறோம். காரணம் இன்னும் அதிகமான தூலத் தன்மை அடைவதே காரியமாகும். மேலும்,
தாவரங்கள், மிருகங்கள், மனிதர்கள் என்று நாம் அழைக்கின்ற உருவங்கள் எல்லாமே முடிவில்லாமல் எழுவதும் விழுவதுமாகச் சுழன்று கொண்டிருப்பதை அறிகிறோம். விதை மரத்தை உண்டாக்குகிறது. மரம் விதையை உண்டாக்குகிறது. இப்படியே மாறிமாறி நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முடிவே இல்லை.
நீர்த்துளிகள், அருவிகளாக மலைகளிலிருந்து இறங்கி ஓடி, கடலில் கலக்கின்றன. அங்கிருந்து நீராவியாக மேலே போய், மறுபடியும் மழையாக மலை உச்சியில் பொழிகின்றன. இதுவும் மாறிமாறி நடந்து வருகிறது. இப்படி எழுவதும் விழுவதுமாக இந்தச் சுழற்சி நடந்துகொண்டே இருக்கிறது.
பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாமே இப்படித்தான் நடைபெறுகின்றன. நம்மால் காணமுடிந்த, உணரமுடிந்த, கேட்கமுடிந்த, கற்பனை செய்யமுடிந்த என்று நம் அறிவுக்கு உட்பட்ட எல்லாமே இப்படித்தான் நடைபெறுகின்றன. இது, மனிதர்கள் மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுவது போலிருக்கிறது. படைக்கப்பட்ட எல்லாமே இப்படித்தான் சுழன்று கொண்டிருக்கின்றன.
அலை எழுகிறது, விழுகிறது. இவ்வாறே எல்லா செயல்களும் நடைபெறுகின்றன. ஒவ்வோர் உயர்வுக்கும் ஒவ்வொரு தாழ்வும், ஒவ்வோர் தாழ்வுக்கும் ஒவ்வொரு உயர்வும் உண்டு. பிரபஞ்சம் ஒரே திட்டத்தில் நடைபெறுவதால், இதே விதி பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றிற்கும் பொருந்த வேண்டும்.
--
தொடரும்....
--

No comments:

Post a Comment