Thursday, 19 January 2017

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-46


தமிழ்நாட்டில் #சுவாமி #விவேகானந்தர்-பாகம்-46
-
கும்பகோணத்தில் சுவாமி விகோனந்தர் பேசியது-பாகம்-13
--
அவ்வப்போதைய தேவைகளை மட்டும் நிறை வேற்றுவதான சமூகச் சீர்த்திருத்தத்தைப் போதிக்கின்ற பிரச்சாரகன் அல்ல நான். தீமைகளை நீக்குவதற்கும் நான் முயலவில்லை , ஆனால் மனித இனத்தின் முன்னேற்றத்திற்காக நமது முன்னோர்கள் மிகவும் சிறப்பாக வகுத்துத் தந்துள்ள திட்டத்தைச் செயல்படுத்த முனைந்து முன் செல்ல வேண்டும் என்று மட்டும் கேட்டுக் கொள்கிறேன்.
மனிதனின் சார்புத்தன்மை மற்றும் அவனது தெய்வீக இயல்பு போன்ற வேதாந்த லட்சியத்தை உணர்ந்துகொள்ளப் பாடுபட வேண்டும் என்று மட்டும்தான் கூறுகிறேன்.
எனக்கு நேரம் இருந்திருந்தால், நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் என்பதைச் சட்டங்களை வகுத்துத் தந்த நமது முன்னோர்கள் எப்படி பல்லாண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்துள்ளார்கள், நமது தேசிய அமைப்புகளில் இதுவரை நிகழ்ந்துள்ள மாற்றங்களையும் இனி வரப் போகின்ற மாற்றங்களையும் எப்படி அன்றே உணர்ந்திருக்கிறார்கள் என்பதையெல்லாம் மகிழ்ச்சியுடன் எடுத்துச் சொல்லியிருப்பேன்.
அவர்களும் ஜாதியை ஒழிக்வே விரும்பினார்கள். ஆனால் அவர்கள் தற்கால மனிதர்களைப் போன்றவர்கள் அல்ல. ஜாதியை ஒழிக்க வேண்டும் என்றால் அதற்காக, நகர மக்கள் அனைவரும் ஓர் இடத்தில் திரண்டு, எல்லோரும் மதுவும் மாட்டிறைச்சியுமாக விருந்துண்டுகளிக்க வேண்டும்; முட்டாள்களும் பைத்தியங்களும், அவர்கள் யாரை விரும்புகிறார்களோ அவர்களை எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் திருமணம் செய்துகொண்டு இந்த நாட்டை ஒரு பைத்தியக்கார விடுதியாக மாற்ற வேண்டும் என்றெல்லாம் அவர்கள் கூறவும் இல்லை.
நம் முன்னோர்களின் லட்சிய மனிதனாகத் திகழ்ந்தவன் பிராமணன். நம் சாஸ்திரங்களிலும் இந்த பிராமண லட்சியம் சிறப்பாகக் காணப்படுகிறது.
ஐரோப்பாவின் கார்டினல் பிரபு தன் முன்னோர்கள் கொள்ளையர் பரம்பரையிலிருந்து வந்தவர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறார். . மாறாக இந்தியாவிலோ, கோவணம் அணிந்து, காடுகளில் வாழ்ந்து, கிழங்குகளை உண்டு, வேதங்களை ஓதிய ஏதோ ஒரு ரிஷியின் சந்ததியாக இருப்பதையே பேரரசர்களும் விரும்புவார்கள். அங்கு தான் இந்திய மன்னர்கள் தங்கள் பாரம்பரியத்தை தேடினார்கள். உங்கள் பரம்பரை ஒரு ரிஷியிடமிருந்து தொடங்குமானால் நீங்கள் உயர்ந்த ஜாதியினர், இல்லை யென்றால் உயர்ந்த ஜாதியினர் அல்ல.
எனவே உயர்குலப் பிறப்பைப் பற்றிய நமது லட்சியம் மற்றவர்களிலிருந்து வேறானது. ஆன்மீகப் பண்பாடும் துறவும் கொண்ட பிராமணனே நமது லட்சியம்.
பிராமண லட்சியம் என்று நான் எதைக் குறிப்பிடுகிறேன்? உலகியல் சிறிதும் இல்லாத உண்மை அறிவு வளம் மிக்க பிராமணத்துவத்தையே நான் கூறுகிறேன். இதுதான் இந்து இனத்தின் லட்சியம்.
பிராமணன் சட்டத்திற்குக் கட்டுபட்டவனல்ல அவனுக்கு சட்டமே இல்லை, அவன் அரசனுடைய ஆளுகைக்கு உட்பட்டவனல்ல, அவனை யாரும் துன்புறுத்தக் கூடாது என்றெல்லாம் நமது நீதி நூல்கள் கூறுவதை நீங்கள் கேட்டதில்லையா? அது முற்றிலும் உண்மை .
சுயநலமிக்க முட்டாள்களின் விளக்கத்தின்படி இதனை நீங்கள் புரிந்து கொள்ளக் கூடாது, வேதாந்தத்தின் உண்மையான ஆதாரபூர்வமான விளக்கத்தின்படி புரிந்துகொள்ள வேண்டும் அறிவையும் அன்பின் ஆற்றலையும் பெறுவதிலும், அதைப் பரப்புவதிலும் முனைந்து ஈடுபடுபவனாகவும், சுயநலம் என்பதே இல்லாதவனாகவும் இருப்பவனே பிராமணன்
பொதுநலமும் ஆன்மீகமும் நல்லொழுக்கமும் நற்பண்புகளும் மிக்க இத்தகைய ஆண்களும் பெண்களுமாகிய பிராமணர்கள் மட்டுமே ஒரு நாட்டில் வாழ்வார்கள் என்றால், அந்த நாட்டைச் சட்டங்களுக்குக் கட்டுப்படாததாகவும் கருதுவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்? அவர்களை ஆள போலீசோ ராணுவமோ எதற்கு? அவர்களை ஏன் ஒருவர் ஆட்சி செய்ய வேண்டும்? அவர்கள் நல்லவர்கள், சான்றோர்கள், மனித தெய்வங்கள். இவர்கள்தான் நமது லட்சிய பிராமணர்கள்.
--
-தொடரும்----
-
#விவேகானந்தர்விஜயம்

No comments:

Post a Comment