Friday, 13 January 2017

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-54


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-54
(சுவாமி விவேகானந்தர்)
----
சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், பூமி, உடல், மனம் மற்றும் பிரபஞ்சத்திலுள்ள எல்லாமே மறைந்து, அழிந்ததுபோலாக வேண்டுமானால் தங்கள் நுட்பமான மூல காரணநிலையை அடைய வேண்டும். ஆனால் அவை மூல காரணங்களில் நுட்ப உருவத்துடன் இருக்கவே செய்யும். இந்த நுட்ப உருவங்களிலிருந்து மறுபடியும் அவை, புதிய பூமிகள், சூரிய சந்திரர்கள், மற்றும் நட்சத்திரங்களாகத் தோன்றுகின்றன.
மரம் , விதையை கொடுத்துவிட்டு அழிந்துவிடுகிறது. விதைக்குள் மரம் இயங்காத நிலையில் உள்ளது. புதிய மரமாக வளர்வதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் அங்கே வெளிப்படாமல் மறைந்திருக்கிறது.
மரத்திலிருந்து விதை வருகிறது. அது உடனே மரமாக மாறுவதில்லை. அது சிலநாள் இயக்கமில்லாமல் இருக்கிறது. இதையே வேறுவிதமாகச் சொன்னால், வெளிப்படையாகத் தெரியாத ஒரு நுட்பமான இயக்கத்தில் அது ஈடுபட்டிருக்கிறது. விதை மண்ணுக்கு அடியில் தான் சிலகாலம் இயங்க வேண்டும். அங்கே அது பல துண்டுகளாக உடைந்து, சிதறி, அனேகமாக உருத்தெரியாமல் அழிகிறது. அந்த அழிவிலிருந்துதான், புத்துயிர் பெற்ற தாவரம் உற்பத்தியாகிறது.
பிரபஞ்சமும் ஆரம்பத்தில் சிலகாலம் இதேபோல் தான் நுட்பமான உருவத்துடன் வெளியில் தெரியாமலும் வெளிப்படாமலும் இயங்க வேண்டும். அந்த நிலையையே குழப்ப நிலை என்று சொல்கிறோம். அந்த நிலையிலிருந்துதான் புதிய படைப்பு தோன்றுகிறது. பிரபஞ்சம் நுட்பமான உருவத்துடன் சிலகாலம் இருந்து, பின்னர் வெளித் தோன்றும் இந்தக் கால அளவு சமஸ்கிருதத்தில் ஒரு கல்பம் அதாவது சுழற்சி என்று சொல்லப்படுகிறது.
அடுத்து, குறிப்பாகத் தற்காலத்திற்கு மிகவும் அவசியமான ஒரு கேள்வி எழுகிறது. நுட்பமான உருவங்கள் சிறிதுசிறிதாக வளர்ச்சியடைந்து கண்களால் காணும் தூலத்தன்மை பெறுகின்றன என்பதைக் காண்கிறோம்.
காரணமும் காரியமும் ஒன்றுதான், காரியம் காரணத்தின் வேறு உருவம் என்பதைக் கண்டோம். ஆகவே இந்தப் பிரபஞ்சம் முழுவதும் சூன்யத்திலிருந்து வெளிவந்திருக்க முடியாது. காரணமில்லாமல் எதுவும் தோன்ற முடியாது; காரணம் காரியத்தின் வேறு உருவம்.
அப்படியானால் எதிலிருந்து இந்தப் பிரபஞ்சம் தோன்றியது? அதற்கு முன்னால் இருந்த நுட்பமான பிரபஞ்சத்திலிருந்துதான்.
மனிதன் எதிலிருந்து தோன்றினான்? முன்னால் இருந்த நுட்பமான உருவத்திலிருந்துதான்.
மரம் எதிலிருந்து தோன்றியது? விதையிலிருந்துதான். மரம் முழுவதுமே விதைக்குள் இருந்தது. இப்போது அது வெளிவந்து, தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. ஆகவே நுட்பமான உருவில் இருந்த பிரபஞ்சத்திலிருந்து தான் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே தோன்றியிருக்கிறது. அது இப்போது வெளிப்பட்டிருக்கிறது; பின்னர் தன்னுடைய நுட்பமான உருவத்திற்குத் திரும்பிச் சென்றுவிடும், மறுபடியும் வெளிப்படும்.
--
தொடரும்....
--

No comments:

Post a Comment