Friday, 13 January 2017

சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-40


சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-40
---
-
சீடர்: சன்னியாசத்திற்கென்று ஏதாவது சிறப்பான நேரம் இருக்கிறதா? பல்வேறான சன்னியாசங்கள் உள்ளனவா?
-
சுவாமிஜி : சன்னியாச வாழ்க்கைக்கென்று குறிப்பிட்ட நேரம் எதுவும் இல்லை .”யதஹரேவ விரஜேத் ததஹரேவ ப்ரவ்ரஜேத் ”- துறவு மனப்பான்மை வந்தவுடனேயே சன்னியாச வாழ்வை ஏற்றுக்கொள் என்று வேதங்கள் கூறுகின்றன.
-
யோக வாசிஷ்டத்திலும்
”யுவைவ தர்மசீல:ஸ்யாத் அனித்யம் கலு ஜீவிதம்!
கோ ஹி ஜானாதி கஸ்யாத்ய ம்ருத்யுகாலோ பவிஷ்யதி? ”
வாழ்க்கை நிலையற்றதாக இருப்பதால் ஒருவன் இளமையிலேயே ஆன்மீக வாழ்விற்குத் தன்னை அர்ப் பணித்துக் கொள்ள வேண்டும். இந்த உடம்பு எப்போது விழும் என்பது யாருக்குத் தெரியும் ? என்று கூறப்பட்டுள்ளது.
-
சாஸ்திரங்களில் நான்கு வகையான சன்னியாசங்கள் கூறப்படுகின்றன. அவை 1 வித்வத் 2 விவிதிஷா 3 மர்க்கடம் 4 ஆதுரம்.
-
திடீரென்று தீவிர வைராக்கியம் உண்டாகி சன்னியாசம் பெறுவது வித்வத் சன்னியாசம் முற்பிறவி சம்ஸ்காரங்கள் இல்லாமல் இது ஒரு போதும் ஏற்பட முடியாது.
-
ஆன்மாவை உணர வேண்டும் என்ற பேரார்வத்தால் உந்தப்பட்டு சாஸ்திர பாராயணம் மற்றும் சாதனைகள் வாயிலாகத் தனது சொந்த இயல்பை உணர்வதற்காக பிரம்மஞானியான ஒருவரிடமிருந்து சன்னியாசம் பெற்று பாராயணம் சாதனை என்று வாழ்வது விவிதிஷா சன்னியாசம்.
-
வாழ்க்கையில் பெறுகின்ற அடிகள் மிக நெருங்கியவரின் மரணம் போன்ற ஏதோ காரணங்களால் ஏற்றுக் கொள்வது மர்க்கட சன்னியாசம் இந்த வைராக்கியம் நெடுநாட்கள் நிலைக்காது. இத்தகைய சன்னியாசத்தைப் பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர், இப்படிப்பட்டவன் வீட்டை விட்டு நெடுங்தொலைவு போய்விடுவான் அங்கே என்ன ஒரு நல்ல வேலை கிடைத்துவிடும் பிறகு மனைவியைத் தன்னிடம் சேர்ப்பதற்கான ஏற்பாடு நடக்கும் இல்லையென்றால் புதிதாகக் கல்யாணம் செய்து கொள்வான் என்று கூறுவார்.
-
தீராத நோய் காரணமாகப் படுத்த படுக்கையில் இருக்கிறான் ஒருவன். பிழைப்பதற்கான வழியே இல்லை அவனுக்குச் சாஸ்திரங்கள் விதித்துள்ளது ஆதுர சன்னியாசம் அந்த சன்னியாசப் பிரமாணத்தை எடுத்துக் கொண்டு அவன் இறந்துபோனால் அந்தப் புண்ணியத் தால் அடுத்தது அவனுக்கு நற்பிறவி வாய்க்கும் ஒரு வேளை பிழைத்துக் கொள்வானானால் ,அவன் பழைய வாழ்க்கைக்குத் திரும்ப மாட்டான். எஞ்சிய வாழ்நாளை பிரம்மஞானத்தை அடையும் முயற்சியிலேயே செலவிடுவான்
-
ஆன்ம ஞானம் பெற சன்னியாசத்தைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை.
-
சீடர் :அப்படியென்றால் இல்லறத்தார்களின் கதி என்ன ?
-
சுவாமிஜி: ஏன் அவர்கள் செய்யும் நற்செயல்களின் பலனாக அடுத்த ஏதாவது பிறவியில் வைராக்கியம் பெறுவார்கள். வைராக்கியம் வந்தால் எல்லாம் வந்துவிடும். பின்னர் தாமதமின்றி பிறப்பு இறப்பு என்னும் புதிருக்கு விடை கிடைத்துவிடும், ஆனால் எல்லா விதிகளுக்கும் விலக்குகள் உண்டு. இல்லற தர்மத்தை நிறைவு செய்தவாறே ஓரிருவர் முக்த புருஷர்களாகவும் செய்கிறார்கள்
-
சீடர்: சுவாமிஜி, உபநிடதங்கள் முதலான நூல்கள் கூட வைராக்கியம் ,சன்னியாசம் போன்றவைபற்றித் தெளிவாகக் கூறவில்லையே?
-
சுவாமிஜி: என்ன பைத்தியக்காரனைப்போல் உளறுகிறாய். உபநிடதங்களின் சாரமே வைராக்கியம் தான் . விவேகத்தால் வரும் ஆன்ம ஒளியே உபநிடதங்களின் அறுதி லட்சியம். மனித வாழ்வின் லட்சியம் இந்தக் தியாகப் பாதையை ஏற்றுக் கொண்டு பிரம்ம ஞானியாவதே. வாழ்வில் அடைய வேண்டிய மிக மேலான நிலை சன்னியாசம்தான் . வைராக்கியம் உதித்த பிறகு யார் உலக வாழ்வைத் துறக்கிறார்களோ அவர்களே பேறு பெற்றவர்கள்.
-
---விவேகானந்தர் விஜயம்----

No comments:

Post a Comment