Tuesday, 3 January 2017

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-45


இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-45
(சுவாமி விவேகானந்தர்)
-
அறியாமை மிக்கவர்கள் எதைப் பிரபஞ்சமாகப் பார்க்கிறார்களோ, அது உண்மையில் இல்லை. நீங்கள், நான், நாம் பார்க்கும் பொருட்கள் இவையெல்லாம் என்ன? எல்லாம் சுய மனோவசியம் தான். 
-
இருப்பது ஒன்றே. அது எல்லையற்றது; எப்போதும் ஆனந்தமயமானது. இருக்கின்ற அந்த ஒரு பொருளிலேயே நாம் இந்தப் பல்வேறு கனவுகளையெல்லாம் கண்டு கொண்டிருக்கிறோம்.
-
உள்ளது ஆன்மா ஒன்றுதான். அது எல்லாவற்றையும் கடந்தது, எல்லையற்றது. நாம் அறிந்த, அறியக்கூடிய எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டது.
-
அதிலேயே, அதன் மூலமாகவே நாம் பிரபஞ்சத்தைக் காண்கிறோம்.
-
கண்முன் உள்ள மேஜை என்ற பெயரையும் மேஜை உருவத்தையும் எடுத்து விட்டால் எஞ்சுவது அதுதான்.
-
வேதாந்தி அதை அவன் என்றோ அவள் என்றோ அழைப்பதில்லை. இவையெல்லாம் கட்டுக்கதைகள்; மனித மூளையின் மயக்கங்கள்.
-
ஆன்மாவில் பால்வேறுபாடு இல்லை. மன மயக்கத்திற்கு அடிமையாகி, மிருகங்கள்போல் ஆகிவிட்டவர்கள் தான் ஆணையோ பெண்ணையோ பார்க்கிறார்கள். மனித தெய்வங்கள் ஆணையோ பெண்ணையோ பார்ப்பதில்லை. எல்லாவற்றையும் கடந்தவர்களுக்குப் பால்வேறுபாடு பற்றிய எண்ணம் எப்படி வரும்?
-
ஜடப்பொருட்களான பெயர், உருவம், உடல் இவைதான் இந்த வேறுபாடுகளை ஏற்படுத்துகின்றன. பெயர், வடிவம் ஆகிய இரண்டு வேறுபாடுகளையும் நீக்கிவிட்டால், பிரபஞ்சம் முழுவதும் ஒன்றுதான்; இரண்டு என்பதே இல்லை; எங்குமே ஒன்றுதான்.
-
நீங்களும் நானும் ஒன்றே. இயற்கையோ கடவுளோ பிரபஞ்சமோ இல்லை. உள்ளது ஒன்றே. அது எல்லையற்றது.
-
அறிபவனை அறிவது எப்படி? அது அறிய முடியாதது; அறிவுக்கு எட்டாதது. நமது ஆன்மாவை நாமே எப்படிப் பார்க்க முடியும்? அதைப் பிரதிபலிக்கத்தான் முடியும்.
-
ஆகவே நிரந்தரமான பரம்பொருளின் பிரதிபலிப்பே பிரபஞ்சம்.
-
-
தொடரும்...

-

No comments:

Post a Comment