இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-39
(சுவாமி விவேகானந்தர்)
-
இந்தியாவிலுள்ள இந்தத் துவைதப் பிரிவினர் எல்லோருமே சைவ உணவு உண்பவர்கள்; தீவிர அஹிம்சாவாதிகள். ஆனால் அவர்களுடைய கருத்து பவுத்தர்களின் கருத்திலிருந்து வேறுபட்டது.
-
எந்த மிருகத்தையும் கொல்லக்கூடாது என்று ஏன் பிரச்சாரம் செய்கிறீர்கள்? என்று ஒரு பவுத்தனைக் கேட்டால், அவன், எந்தப் பிராணியையும் கொல்ல நமக்கு உரிமை இல்லை என்று சொல்வான்.
-
ஒரு துவைதியிடம் நீ எந்தப் பிராணியையும் ஏன் கொல்வதில்லை? என்று கேட்டால், அது கடவுளுக்குச் சொந்தமானதாக இருப்பதால்தான் என்று பதில் கூறுவான்.
-
ஆகவே, நான், எனது என்பதைக் கடவுளுடன், கடவுளுடன் மட்டுமே இணைத்துச் சொல்ல வேண்டும்.
-
நான், என்பது கடவுள் மட்டுமே.(என்னிடம் உள்ள நான் என்ற உணர்வு கூட கடவுளுக்கு சொந்தம்) எல்லாமே அவருக்குத்தான் சொந்தம்.
-
நான், எனது என்ற எண்ணங்கள் அடியோடு இல்லாமல் போய் எல்லாவற்றையும் கடவுளுக்குச் சொந்தமாக்கி, எல்லோரிடமும் அன்பு செலுத்தி, பலனை எதிர்பார்க்காமல், ஒரு பிராணிக்காகத் தன் உயிரை இழக்கவும் தயாராக இருப்பவனுடைய இதயமே பரிசுத்தமானது. அத்தகைய இதயத்தில்தான் இறையன்பு தோன்றும்.
-
ஒவ்வோர் ஆன்மாவையும் தன்னை நோக்கிக் கவர்ந்துகொள்வது கடவுள் தான்.
-
களிமண்ணால் மூடியுள்ள ஊசியைக் காந்தத்தால் கவர முடியாது. களி மண்ணை நீக்கிவிட்டால் காந்தம் ஊசியைச் சுலபமாகக் கவர்ந்துவிடும் என்று துவைதி சொல்வான்.
-
கடவுளே காந்தம், ஆன்மாவே ஊசி. அதன் தீய செயல்களே அதை மூடிக்கொண்டிருக்கும் மண்ணும் தூசியும். ஆன்மா தூய்மையடைந்த உடனே, இயல்பாகவே அது கடவுளால் கவரப்பட்டு, அவரை அடைந்து, அவரோடு எப்போதுமே இருக்கும். ஆனால் அவரிடமிருந்து நிரந்தரமாக வேறுபட்டே நிற்கும்.
-
-
தொடரும்....
No comments:
Post a Comment