சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-35


சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-35
--
கேள்வி..எந்த வழியில் சென்று நமது மதத்தை பரப்ப வேண்டும்?
-
சுவாமி விவேகானந்தர்
-
மதத்தை பரப்புவது என்றால ஒவ்வொருவர் மீதும், வொவ்வொன்றின்மீதும் குறைசொல்வதே என்று நினைத்துக்கொள்ளாதே.உடல்,மனம்,ஆன்மீகம் ஆகிய ஒவ்வொரு நிலையிலும் மனிதர்களுக்கு உடன்பாட்டுக் கருத்துக்களை தரவேண்டும்.யாரையும் வெறுக்கக்கூடாது.
-
நீங்கள் ஒருவரை ஒருவர் வெறுத்ததால்தான் இவ்வளவு இழிநிலையை அடைநதிருக்கிறீர்கள்.இப்போது உடன்பாட்டுக் கருத்துக்களை மட்டுமே பரப்பி மனிதர்களை உயர்த்த வேண்டும்.
-
முதலில் இந்த வகையில் இந்துக்களை எழுச்சி பெறச்செய்ய வேண்டும். பிறகு உலகம் முழுவதையுமே விழிப்புற செய்ய வேண்டும். அதற்காகத்தான் ஸ்ரீராமகிருஷ்ணர் அவதாரம் செய்தார். யாருடைய கருத்தையும் அவர் அழித்ததில்லை.மிகமிகக் கீழ்நிலையில் உள்ள மக்களுக்கு கூட அவர் நம்பிக்கையும் உற்சாகமும் தந்து உயர்த்தி இருக்கிறார். நாம் அவரது வழியை பின்பற்றி அவர்களை மேலே தூக்கி உற்சாகப்படுத்தவேண்டும்.புரிகிறதா?
-
உங்கள் வரலாறு,இலக்கியம்,புராணங்கள் என்று எல்லா சாஸ்திரங்களுமே மக்களைப் பயமுறுத்த மட்டுமே செய்கின்றன. ”நரகத்திற்குத்தான் போவாய்.உனக்கு கதியே இல்லை” என்றே அவை மனிதர்களிடம் சொல்கின்றன.அதனால் தான் இந்தியாவில் இந்தவிதமான மந்தநிலை நாடி நரம்புகளில் புகுந்துவிட்டது. எனவே வேதவேதாந்தத்தின் உயர்ந்த கருத்துக்களை எளிய மொழியில் எல்லோருக்கும் எடுத்துச்சொல்லவேண்டும்.
-
ஒழுக்கம்,நன்னடத்தை,கல்வி முதலியவற்றை அளித்து அனைவரையும் பிராமணர்களின் நிலைக்கு உயர்த்தவேண்டும். இதை உன்னால் செய்ய முடியுமா?
----
-----
பிரார்த்தனை மூலம் இறைவனை நெருங்குவதைவிட உற்சாகத்தாலும் புன்முறுவலாலும் இன்னும் அதிகமாக நெருங்கிச்செல்ல முடியும்.
சோர்ந்திருக்கும் சோம்பல் மனத்தால் எப்படி அன்புகாட்ட முடியும்?அவர்கள் அன்பைப்பற்றி பேசினால் அது பொய்யே தவிர வேறில்லை.அவர்கள் மற்றவர்களை புண்படுத்தவே விரும்புகிறார்கள்.
-
கொள்கைவெறியர்களை நினைத்துப்பாருங்கள்,அவர்கள் தங்கள் முகங்களை எவ்வளவு சோகமாக வைத்துக்கொள்கிறார்கள்.சொல்லிலும் செயலிலும் மற்றவர்களிடம் சண்டையிடுவது தான் அவர்களது மதம்.அவர்கள் விருப்பப்படியே அவர்களை வேலை செய்யவிட்டால்,நாளை உலகம் முழுவதையுமே ரத்தவெள்ளத்தில் ஆழ்த்திவிடுவார்கள்.அவர்கள் யார்மீதும் அன்புகாட்டுவதில்லை.
--
ஆகவே எப்போதும் சோகமாக இருப்பவன் இறைவனை அணுகமாட்டான். நீங்கள் சோகமாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள்.உங்கள் துக்கத்தை வெற்றிகொள்ள முயலுங்கள்.பலவீனர்களால் ஆண்டவனை அடைய முடியாது.ஒருபோதும் பலவீனர்களாக இருக்காதீர்கள்.வலிமைபடைத்தவனாக இருங்கள்.நீங்கள் பலசாலியாக இல்லாவிட்டால் எப்படி கடவுளை நெருங்க முடியும்?
-
நீ உன் வாழ்க்கையைப் பிறருக்காகத் தியாகம் செய்யத்தயாரானால், உன்னை சார்ந்தவர்களுக்குக் கடவுள் நிச்சயமாக வழிசெய்வார். உன் வாசற்படியில் இறைவனே பிச்சைக்காரன் வடிவில் வந்து நிற்கிறான் அவனுக்கு முதலில் சேவை செய்.வாழ்க்கை தான் எத்தனை நாள்! நீ இந்த உலகிற்கு வந்துள்ளாய்.ஓர் அடையாளத்தை விட்டுச்செல்.இல்லையென்றால் உனக்கும் இந்த மரங்களுக்கும்,கற்களுக்கும் என்ன வித்தியாசம்?அவையும் தோன்றுகின்றன,வாழ்கின்றன,சாகின்றன.அதுபோல பிறந்து சாகவா விரும்புகிறாய்?
-
-- விவேகானந்தர் விஜயம் --

Comments

Popular posts from this blog

அன்னை சாரதாதேவியின் வாழ்க்கை வரலாறு

விவேகானந்தரின் மரணத்தில் உள்ள ரகசியம் என்ன?