சுவாமி விவேகானந்தரிடம் கேளுங்கள்-பகுதி-33
--
கேள்வி....இந்துமதத்தின் லட்சியத்தை சுருக்கமாக கூறமுடியுமா?
-
சுவாமி விவேகானந்தர் ..
-
இந்துமதம் தரும் உபதேசத்தின் சுருக்கம் இதுதான்
----
எப்படி வேலை செய்வது என்பதை அது முதலில் போதிக்கிறது.
--
எப்படி? துறப்பதன் மூலம், பொய்த் தோற்றமான இந்த உலகை விட்டுவிடுவதன்மூலம். இதன் பொருள் என்ன? எங்கும் இறைவனைக் காணல் என்பது தான். அப்படித்தான் நாம் செயல்புரிய வேண்டும்.
-
நூறுவருடங்களாக வாழ ஆசைப்படலாம். விரும்பினால் எல்லா உலக ஆசைகளுக்கும் நம் மனத்தில் இடம் கொடுக்கலாம். ஆனால் எல்லாவற்றையும் தெய்வீமாக்கி விடுங்கள், சொர்க்கமாக்கிவிடுங்கள், அவ்வளவுதான். பிறருக்கு உதவி செய்துகொண்டு ஆனந்தமான நீண்ட வாழ்க்கை வாழ வேண்டுமென்று நாம் ஆசைப்படலாம். இவ்வாறு செயல்புரிந்தபடிதான் முக்திக்கான வழியைத் தேட முடியும். இதைத் தவிர வேறு வழியே இல்லை.
--
உண்மையை அறிந்துகொள்ளாமல், ஒருவன் உலக போகங்களில் முட்டாள்தனமாக மூழ்கினால் அவ்ன வழிதவறிவிட்டான், அவனால் லட்சியத்தை அடைய முடியாது.
---
இனி, உலகைச் சபித்துக்கொண்டு அதை விட்டு விட்டுக் காட்டிற்குப்போய், உடலை ஒடுக்கி, பட்டினியால் உடலை அணு அணுவாகக் கொன்று, நெஞ்சை ஈரமற்ற கல்லாக்கிக் கொண்டு, கடின சித்தமுள்ளவனாக ஆகின்றவனும் வழி தவறியவனே. இவை இரண்டும் இரண்டு துருவங்கள். இரண்டுமே தவறான நோக்குடையவை. இருவரும் வழி தவறியவர்களே. இருவரும் லட்சியத்தை அடைய முடியாது.
--
எனவே எல்லாவற்றிலும் இறைவனை இணைத்துச் செயல்புரியுங்கள் என்று வேதாந்தம் சொல்கிறது. வாழ்க்கையைத் தெய்வீகமாக்கி, தெய்வமாக ஆக்கி, இடைவிடாமல் வேலை செய்யுங்கள்.
---
. எங்கும் இறைவன் இருக்கிறார். அவரைத் தேடி நாம் எங்கே போவது?
---
ஒவ்வொரு செயலிலும் ஒவ்வோர் எண்ணத்திலும் ஒவ்வோர் உணர்ச்சியிலும் அவர் ஏற்கனவே உள்ளார். இதை உணர்ந்து செயல்புரிய வேண்டும். அது ஒன்றுதான் வழி. வேறு வழியே இல்லை. அப்போதுதான் நமது கர்மபலன்கள் நம்மைக் கட்டுப்படுத்தாது.
--
போலி ஆசைகள் தான் நமது எல்லா தீமைகளுக்கும் துன்பங்களுக்கும் காரணம் என்பதைப் பார்த்தோம். அந்த ஆசைகளையே இறைவனின்மூலம் தெய்வீகமாக்குங்குகள், தூய்மைப்படுத்துங்கள். அதன் பின் அவை துன்பத்தையோ தீமையையோ கொண்டு வராது.
-
இந்த ரகசியத்தை அறியாதவர்களுக்கு, அதை அறிந்துகொள்ளும்வரை, உலக வாழ்க்கையே நரகமாகத்தான் இருக்கும்.
-
தங்களுக்கு உள்ளும், தங்களைச் சுற்றியும், எல்லா இடங்களிலும் எல்லையற்ற ஆனந்தச் சுரங்கம் இருக்கிறது என்பது பலருக்குத் தெரியாது. அவர்கள் இன்னும் அதைக் கண்டு பிடிக்கவில்லை. நரக வாழ்க்கை என்பது என்ன? அறியாமைதான் நரகம் என்கிறது வேதாந்தம்.
--
மதத்தின் ஒரே லட்சியம் இதுதான். இந்த லட்சியம் , வெவ்வேறு மதங்களில், வெவ்வேறு விதமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
--
அஞ்ஞானத்திலிருந்து தோன்றிய இந்த அஞ்ஞான உலகை எல்லாமாக நினைத்துக்கொண்டு, அதிலேயே மூழ்கியிருப்பவர்கள் இருளில் தடுமாறுபவர்கள். இனி, இந்த உலக வாழ்க்கையைத் தவிர வேறு உயர்ந்த வாழ்க்கையைப்பற்றி நினைக்காதவர்ளோ அதைவிடக் காரிருளில் தட்டுத்தடுமாறி கொண்டிருக்கிறார்கள்.
--
இயற்கையின் ரகசியத்தை அறியும்போது, மனிதன் இயற்கையின் உதவியாலேயே இயற்கைக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை உணர்கிறான். அவன் மரணத்தை வெல்கிறான். இயற்கையைக் கடந்த அந்தப் பொருளின் உதவியால் அவன் எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.
--
நாம் காலங்காலமாகத் தேடிக் கொண்டிருக்கும் உண்மை எப்போதும் நமக்குள்தான் இருக்கிறது, எப்போதும் நம்முள்தான் இருந்தது என்பதை வேதாந்தம் நிரூபிக்கிறது. அறியாமை காரணமாக நாம் அதை இழந்துவிட்டதாக நினைத்து, அழுது, கதறி, உலகமெங்கும் அலைந்து திரிந்து, இந்த உண்மையைக் கண்டுபிடிப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தோம். ஆனால் அது எப்போதும் நம் இதயத்திலேயே இருந்திருக்கிறது. நம் இதயத்தில் மட்டுமே அந்த உண்மையை நாம் காண முடியும்.
--
இருந்தது கடவுள் மட்டுமே. குழந்தையில், மனைவியில், கணவனில் எல்லாவற்றிலும் இருப்பவர் அவரே. நல்லவரில் இருப்பதும் அவரே, தீயவரில் இருப்பதும் அவரே, பாவத்தில் இருப்பதும் அவரே, பாவியாக இருப்பதும் அவரே. வாழ்விலும் அவரே இருக்கிறார். சாவிலும் அவரே இருக்கிறார்.இருந்தது கடவுள் மட்டுமே.
--
-- விவேகானந்தர் விஜயம் --
No comments:
Post a Comment