Thursday, 19 January 2017

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-42


#தமிழ்நாட்டில் #சுவாமி #விவேகானந்தர்-பாகம்-42
-
#கும்பகோணத்தில் சுவாமி விகோனந்தர் பேசியது-பாகம்-9
-
நம்பிக்கை, நம்பிக்கை, நம்மிடம் நம்பிக்கை, நம்பிக்கை ,இறைவனிடம் நம்பிக்கை இதுவே மனோன்னதத்தின் ரகசியம்.
உங்களுடைய புராண தெய்வங்கள் முப்பத்து முக்கோடிபேரிடமும், வெளிநாட்டினர் அவ்வப்போது உங்களிடமே திணிக்கின்ற அனைத்து தெய்வங்களிடமும் நம்பிக்கை வைத்து, அதே வேளையில் உங்களிடத்தில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் உங்களுக்குக் கதிமோட்சமில்லை
உங்களிடம் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நம்பிக் கையை ஆதாரமாகக் கொண்டு எழுந்து நில்லுங்கள் வலிமை உடையவர்களாக இருங்கள். நமக்குத் தேவைப்படுவது இதுதான் .
வருவோரும் போவோருமான விரல்விட்டு எண்ணக்கூடிய அன்னியர் முப்பத்து மூன்று கோடி மக்களாகிய நம்மை மதித்து அரசாளக் காரணம் என்ன? அவர்களுக்குத் தன்னம்பிக்கை இருந்து, நமக்கு இல்லை.
மேலைநாட்டில் நான் என்ன கற்றுக்கொண்டேன்? மனிதன்பாவி, இழிந்தவன் என்று திருப்பித்திருப்பிச்சொல்கின்றன கிறிஸ்தவ மதப் பிரிவுகளின் வெற்று உபதேசங்களுக்குப் பின்னால் நான் கண்டது என்ன? மனிதர்கள் தங்களிடமே கொண்டுள்ள நம்பிக்கையாகிய மாபெரும் சக்தி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவின் தேசிய நீரோட்டத்தின் மையத்தில் ததும்பி நிற்பது தான் எனக்குத் தெரிந்தது.
நான் ஆங்கிலேயன் என்னால் எதையும் செய்ய முடியும் என்றே ஆங்கிலேயச் சிறுவன் ஒருவன் சொல்வான், அமெரிக்கச் சிறுவனும் இதையே சொல்வான், ஐரோப்பாவிலுள்ள எந்தச் சிறுவனும் இதையே தான் சொல்வான் . ஆனால் இங்குள்ள நம் சிறுவர்கள் இதைச் சொல்வார்களா ? மாட்டார்கள். சிறுவர்கள் ஏன் அவர்களின் தந்தையரே சொல்ல மாட்டார்கள். நாம் தன்னம்பிக்கையை இழந்து விட்டோம்.
எனவே தங்கள் சொந்த ஆன்மாவின் மகிமையை மக்களுக்குக் காட்டுவதற்கும் அவர்களுடைய இதயத்தில் உறைந்துள்ள ஆற்றலைக் கிளார்ந்தெழ செய்வதற்கும் வேதாந்தத்தின் அத்வைதக் கருத்தை உபதேசித்தேயாக வேண்டும், அதனால் தான் நான் அத்வைதத்தை எடுத்துக் கூறினேன்.
#வேதாந்த மதத்தைச் சாந்தவன் என்ற ஒரு பிரிவு மனப்பான்மையுடன் அதை நான் கூறவில்லை. அது மிகப்பரந்த அளவில் உலகம் முழுவதிலும் ஒப்புக்கொள்ளப்படுவதான ஒன்று என்பதால் தான் அதை நான் கூறினேன்.
துவைதியையோ விசிஷ்டாத்வைதியையோ வருத்த முறச் செய்யாமல் எளிதாக ஓர் இணைப்பு வழியைக் கண்டறிய முடியும். கடவுள் நம்முள் இருக்கிறார், எல்லாவற்றிலும் தெய்வீகம் உறைகிறது என்ற கொள்கை இல்லாத ஒரு நெறிகூட இந்தியாவில் இல்லை. தூய்மையும் பூரணத்துவமும் வலிமையும் எல்லாமே நம் ஆன்மாவில் முழுமையாக இருக்கிறது என்பதை எல்லா வேதாந்த நெறிகளும் ஏற்றுக் கொள்கின்றன
. இந்தப் பூராணத்துவம் சில வேளைகளில் சுருங்குவது போலவும் சில நேரங்களில் விரிவது போலவும் ஆகிறது, ஆனாலும் அது இருக்கவே செய்கிறது என்று வேதாந்தத்தின் சில நெறிகள் கூறுகின்றன.
அத்வைதத்தின்படி அது சுருங்குவதும் இல்லை விரிவதும் இல்லை; அவ்வப்போது மறைக்கப்படவும் மீண்டும் மறைப்பு விலக்கப்படவும் செய்கிறது.
ஏறக்குறைய விஷயம் ஒன்றுதான். ஒன்று மற்றொன்றை விடச் சற்று தர்க்கரீதியானதாக இருக்கலாம், ஆனால் விளைவும் நடைமுறை விளக்கங்களும் ஒன்றுபோலவே உள்ளன இந்த ஒரு முக்கியக் கருத்தே இப்போது உலகத்திற்குத் தேவையாக உள்ளது; மற்ற இடங்களைவிட நம் தாய் நாட்டிற்குத்தான் இதன் தேவை அதிகமாக உள்ளது.
-தொடரும்----

No comments:

Post a Comment