Friday, 13 January 2017

கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-6




கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-6
(சுவாமி விவேகானந்தர்)
-
உழைக்காமல் யாரும் எதுவும் பெற முடியாது. இது மாறாத நியதி.
-
அப்படியில்லை என்று சில நேரங்களில் நாம் நினைக்கிறோம். ஆனால் காலப்போக்கில் இதைப் புரிந்து கொள்கிறோம்.
-
பணக்காரன் ஆவதற்காக ஒரு மனிதன் வாழ்நாள் முழுவதும் பாடுபடலாம். ஆயிரக் கணக்கானோரை ஏமாற்றலாம். ஆனால் கடைசியில், பணக்காரன் ஆவதற்கான தகுதி எனக்கு இல்லை என்பதை அவன் காண்கிறான். வாழ்க்கையே அவனுக்குத் துன்பமாகவும் தொந்தரவாகவும் போய்விடுகிறது.
-
இன்பத்திற்காக நாம் பொருட்களைச் சேர்த்துக் கொண்டே போகலாம். ஆனாலும் நாமே உழைத்துச் சம்பாதித்தவை மட்டுமே உண்மையில் நமக்குச் சொந்தமானவை.
-
ஒரு முட்டாள், உலகத்தில் உள்ள எல்லா நூல்களையும் வாங்கித் தனது நூல்நிலையத்தில் அடுக்கி வைக்கலாம். ஆனால் அவற்றுள் அவனது தகுதிக்கு ஏற்றவைகளை மட்டுமே அவனால் படிக்க முடியும். இந்தத் தகுதியைச் செயல்தான் உருவாக்குகிறது.
-
நமது தகுதி என்ன, நம்மால் எதை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதை நமது செயல்தான் நிர்ணயிக்கிறது.
-
நாம் இன்று இப்படி இருப்பதற்கு நாமே பொறுப்பு. இனி எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அப்படி நம்மைச் செய்துகொள்வதற்கான ஆற்றலும் நம்மிடம் உள்ளது.
-
இப்போதைய நமது நிலைக்கு முன்வினைப் பயன்களே காரணம் என்றால், எதிர்காலத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும் என்பது ,இப்போதைய நமது செயல்களுக்கு ஏற்பவே அமையும் என்பதும் உறுதி.
-
எனவே செயல்புரிவது எப்படி என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்று தெரிந்துகொள்வதால் என்ன பயன்?
-
ஒவ்வொருவரும் இந்த உலகத்தில் ஏதாவது ஒரு வழியில் வேலைகள் செய்துகொண்டுதானே இருக்கிறார்கள்! என்று கேட்கலாம்
-
ஆனால் ஆற்றல்களை வீணடிப்பது என்று ஒன்று இருக்கிறது. சாதுரியமாகவும் ஒரு விஞ்ஞானம் போல் நுணுக்கமாகவும் செயல்புரிவதே கர்மயோகம் என்று பகவத்கீதை கூறுகிறது.
--
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்-

No comments:

Post a Comment