Tuesday, 3 January 2017

சுவாமி விவேகானந்தரும் அவரது குரு- ஸ்ரீராமகிருஷ்ணரும்-பாகம்-2


சுவாமி விவேகானந்தரும் அவரது குரு- ஸ்ரீராமகிருஷ்ணரும்-பாகம்-2
-
1880 ஜனவரியில் தனது பதினேழாம் வயதில் நரேந்திரர் கல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் முதற்கலை(First Art)பிரிவில் சேர்ந்தார். வாலிபம் அவரிடம் துளிர்விடத் தொடங்கியிருந்தது.அழகிய முகம், பரந்த விழிகள், கட்டான உடம்பு என்று யாரையும் ஒரு கணம் நின்று பார்க்கச்செய்யும் வாலிபனாக திகழ்ந்தார் அவர். பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்திய கல்லூரி அது. ஆசிரியர்கள் பெரும்பாலோர் ஜரோப்பியர்கள். எனவே மாணவர்கள் ஜரோப்பிய உடைதான் அணிந்து செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. நரேந்திரனும் ஜரோப்பிய உடையணிந்து கையில் கடிகாரம் அணிந்துகொண்டார்.
-
முதலாம் ஆண்டு கல்லூரிக்கு தொடர்ந்து சென்றார்,ஆனால் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது மலேரியாவால் பாதிக்கப்பட்டார் எனவே பல நாட்கள் வீட்டிலேயே தங்கி ஓய்வெடுக்க வேண்டியிருந்தது.பல நாட்கள் தொடர்ந்து விடுப்பு எடுத்ததால் அந்த ஆண்டு அவரால் அந்த கல்லூரியில் தேர்வு எழுத முடியவில்லை.
-
ஸ்காட்டிஷ் ஜெனரல் மிஷனரி போர்ட் கல்லூரி அவரை ஏற்றுக்கொண்டு, தேர்வு எழுத அனுமதித்தது.1881ல் தேர்வில் இரண்டாம் வகுப்பில் தேறினார். அதே கல்லூரியில் 1884 ல் பி.ஏ. படிப்பில் தேர்ச்சியடைந்தார்.
-
ஆங்கிலம், வரலாறு, கணக்கு, நியாயம், மனஇயல், தத்துவம் போன்றவை அவரது பாடங்களாக இருந்தன.நியாயத்திலும், தத்துவத்திலும், உயர்கணிதத்திலும் அவர் மிகுந்த ஆர்வம் காட்டினார். இலக்கியத்தில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது.ஆங்கிலத்தில் பேசுவதற்கும், வாதங்கள் புரிவதற்கும் மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டார்.கல்லூரியில் ஆங்கில சொற்பொழிவாற்றினார்.
-
பி.ஏ. மூன்றாம் ஆண்டு படிக்கும்போது, அதே கல்லூரியில் சட்டத்துறையிலும் நரேந்திரனை சேர்த்தார் தந்தை விசுவநாதர், கூடவே நிமாய்சரண் போஸ் என்ற பிரபல வழக்கறிஞரிடம் உதவியாளராகவும் ஆக்கினார். எதிர்காலத்தில் தம்மைப்போல சிறந்த வழக்கறிஞராக நரேந்திரர் வரவேண்டும் என்பது அவரது ஆவலாக இருந்தது. தந்தையுடன் உயர்நீதி மன்றத்திற்கும் நரேந்திரர் சென்று வர ஆரம்பித்தார். அவரை மேற்படிப்புக்காக இங்கிலாந்திற்கு அனுப்ப அவரது தந்தை திட்டமிட்டிருந்தார்.
-
சிறுவயது திருமணங்கள் நடந்த காலம் அது. இந்த நாட்களில் நரேந்திரரின் திருமண பேச்சுகள் தொடங்கின. சிலர் அதிகமாக வரதட்சிணை தர முன்வந்தனர். சிலர் நரேந்திரர் மேற் படிப்புக்காக இங்கிலாந்து செல்ல தேவையான செலவை செய்ய தயாராக இருந்தனர்.
-
ஆனால் பிறரது வற்புறுத்தல் எதற்கும் கட்டுப்பட விரும்பாத நரேந்திரர் , அவர்களது திருமண பேச்சை விரும்பவில்லை. அதற்கு காரணம், சிறுவயதிலிருந்தே சிவபெருமானைப்போல தானும் ஒரு துறவியாக வாழவேண்டும் என்று விரும்பியது தான்.(வங்காளத்தில் சிவபெருமானை துறவிகளின் தலைவனாக வழிபடுவது வழக்கம்)
--

Cont..
-
-- விவேகானந்தர் விஜயம் --

No comments:

Post a Comment