இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-47
(சுவாமி விவேகானந்தர்)
-
மனிதனாகத் தோன்றுகின்ற அந்த ஆன்மாவின் சிறப்பை எந்தப் புத்தகத்தாலும், எந்த சாஸ்திரத்தாலும், எந்த விஞ்ஞானத்தாலும் கற்பனைகூடச் செய்ய முடியாது. அந்த ஆன்மா ஒன்றுதான் என்றும் சிறப்பு வாய்ந்ததாக இருந்த ஒரே தெய்வம். முன்பு இருந்த, இப்போது இருக்கின்ற, இனிமேல் இருக்கப்போகின்ற ஒரே கடவுள் அதுதான்.
-
ஆகவே நான் வழிபட வேண்டியது என் ஆன்மாவைத் தவிர வேறு யாரையும் அல்ல. நான் என் ஆன்மாவையே வழிபடுகிறேன் என்று அத்வைதி கூறுகிறான்.
-
நான் யாருக்கு அடிபணிய வேண்டும்? எனது ஆன்மாவிற்கு மட்டுமே. உதவி தேடி யாரிடம் செல்வேன்? எல்லையற்ற ஆன்மாவாகிய எனக்கு யாரால் உதவி செய்ய முடியும்? இவையெல்லாம் முட்டாள்தனமான கனவுகள்! பொய்த் தோற்றங்கள். இதுவரை யாராவது யாருக்காவது உதவி செய்திருக்கிறார்களா? இல்லை.
-
ஒரு துவைதி, பலவீனமான மனிதன், விண்வெளிக்கு அப்பாலுள்ள ஏதோ ஒன்றிடமிருந்து உதவியை எதிர்பார்த்து, அழுது கதறுகிறான். தனக்குள்ளேயே அந்த விண்வெளி இருப்பதை உணராததாலேயே அவன் அவ்வாறு செய்கிறான்.
-
அவன் வானத்திலிருந்து உதவியை எதிர்பார்க்கிறான். உதவி வருகிறது. அது வருவது நமக்குத் தெரிகிறது, ஆனால் அது அவனுள்ளிருந்தேதான் வருகிறது. வெளியிலிருந்து வருவதாக அவன் தவறாக நினைத்துக் கொள்கிறான்.
-
தனக்கு வெளியே பல தெய்வங்கள் இருப்பதாக நினைத்து, வீணாகத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மனிதன், எங்கே ஆரம்பித்தானோ அங்கேயே திரும்பி வருகிறான். அதுதான் மனித ஆன்மா.
-
மலைகளிலும் காடுகளிலும் அருவிகளிலும் அவன் தேடிய, கோயில்கள் தோறும் தேடிய, சர்ச்சுகளில் தேடிய, சொர்க்கங்களில் அவன் தேடிய கடவுள், சொர்க்கத்தில் அமர்ந்துகொண்டு உலகை ஆள்வதாக அவன் கற்பனை செய்துகொண்டிருந்த கடவுள், உண்மையில், அவனுடைய ஆன்மாவேதான் என்பதை உணர்கிறான்.
-
நானே அவன்; அவனே நான் நானே தான் கடவுளாக இருந்தேன். அற்ப மனிதனான நான் எப்போதுமே இருக்கவில்லை.
-
அது சரி. அந்தப் பூரணப் பரம்பொருள் எப்படி மனமயக்கத்திற்கு உட்பட்டார்?
-
தொடரும்...
No comments:
Post a Comment