இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-46
(சுவாமி விவேகானந்தர்)
-
பவுதீகரீதியாக, மனரீதியாக, தார்மீகரீதியாக, ஆன்மீக ரீதியாக இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே தனி ஒருமைதான். இந்த ஒன்றையே நாம் பலவாகக் கண்டு, அதன்மீது பலஉருவங்களைக் கற்பனை செய்து கொள்கிறோம்.
-
மனிதனாகத் தன்னை எல்லைப்படுத்திக் கொண்ட உயிருக்கு, இந்த உலகம் மனிதர்களின் உலகமாகத் தெரிகிறது. இன்னும் உயர்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உலகம் சொர்க்கமாகத் தெரியலாம்.( புழு பூச்சிகளுக்கு இந்த உலகம் வேறு மாதிரி தெரியலாம்)
-
பிரபஞ்சத்தில் இருப்பது ஒரே ஆன்மாதான்; இரண்டல்ல. அது வருவதுமில்லை, போவதுமில்லை. அது பிறக்கவுமில்லை, இறப்பதுமில்லை. அதற்கு மறுபிறவியும் இல்லை.
-
அது எப்படிச் சாக முடியும்? அது எங்கே போக முடியும்?
-
சொர்க்கங்கள், பூமிகள் என்று எல்லா இடங்களுமே மனத்தின் வீண் கற்பனைகள். அவை இல்லாதவை; அவை முன்பும் இல்லை, இப்போதும் இல்லை, இனி இருக்கவும் செய்யாது.
-
நான் எங்கும் நிறைந்தவன்; அழிவற்றவன். நான் எங்கே போக முடியும்? நான் ஏற்கனவே இல்லாத இடம் எது?
-
நான் இயற்கை என்னும் இந்தப் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு பக்கத்தை முடிக்கிறேன்.(ஒரு வாழ்க்கை முடிகிறது) அடுத்தப் பக்கத்தைத் திருப்புகிறேன். வாழ்க்கையின் அடுத்த பக்கத்தைப் படிக்கிறேன், அடுத்த வாழ்க்கைக் கனவு வருகிறது, அதுவும் முடிகிறது. இப்படியே தொடர்ந்து செல்கிறது.
-
புத்தகத்தைப் படித்து முடித்தவுடன், அதை ஒருபுறமாக வைத்துவிட்டு, நான் தனியாக விலகி நிற்கிறேன். பின்னர் புத்தகத்தை எறிந்துவிடுகிறேன். எல்லாம் முடிந்து விடுகின்றன.
-
அத்வைதி போதிப்பது என்ன? இதுவரை இருந்த, இனிமேல் இருக்கப் போகின்ற எல்லா தேவர்களையும் அவன் சிம்மாசனத்திலிருந்து இறக்கிவிடுகிறான். சூரியனை விட, சந்திரனைவிட, சொர்க்கங்களைவிட உயர்ந்த மனித ஆன்மாவை அந்தச் சிம்மாசனத்திற்கு அதிபதியாக்குகிறான்.
-
-
தொடரும்...
No comments:
Post a Comment