சுவாமி விவேகானந்தரும் அவரது குரு- ஸ்ரீராமகிருஷ்ணரும்-பாகம்-1
-
சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரர். நரேன் என்று சுருக்கமாக கூறுவார்கள்.
நரேன் பிறவியிலேயே தியான சித்தன் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுவதுண்டு.அதாவது முந்தைய பிறவிகளில் தீவிர தியானம் செய்து நிறைநிலையைக் கண்ட ஒருவர் என்பது இதன் பொருள்.
-
ஏழு வயதிலேயே தன்பக்கத்தில் பாம்பு படமெடுத்து நிற்பதைக்கூட அறியாமல் தியானத்தில் ஆழ்ந்திருந்தான்.
தியானம் என்பது நரேனுக்கு இயல்பாகவே அமைந்தது. அதற்காக அவன் எந்த பயிற்சியும் எடுத்துக்கொள்ளவில்லை.
தியான வேளையில் நரேனுக்கு பல்வேறு காட்சிகள் கிடைக்கும். இரவில் அவன் தூங்குவதற்கு கண்களை மூடும்போது புருவ மத்தியில் ஓர் ஒளி தோன்றும். பல வண்ணங்களை அள்ளி இறைத்தபடி அந்த ஒளி படிப்படியாகப் பெரிதாகும். கடைசியில் அந்த ஒளித்திரள் வெடித்து சிதறி அவனது உடம்பு முழுவதையும் வெண்ணிறத் தண்ணொளியில் முழுக்காட்டும். அந்த ஒளியில் அவன் துயில் கொள்வான். சில வேளைகளில் ஒரு பையன் அவன்முன் தோன்றி ஓர் ஒளிப்பந்தைக் காலால் அடிப்பான். அது உருண்டு அவனை நோக்கி வரும். அருகில் நெருங்கியதும் நரேன் அப்படியே அதில் ஒன்றிவிடுவான். எல்லாம் மறந்துபோகும். சில வேளைகளில் அந்த ஒளி விவரிக்க முடியாத பேரொளியாக இருக்கும். அவன் அதில் துளைந்து அப்படியே கரைந்துவிடுவான்.
தூக்கம் எல்லோருக்கும் இப்படித்தான் வரும் என்றே நரேன் எண்ணியிருந்தான். ஒரு நாள் தன் நண்பர்களிடம் இது பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு இப்படிப்பட்ட அனுபவம் வருவதில்லை என்பதை தெரிந்துகொண்டான்.
-
ஆறு வயதிலிருந்தே நரேனின் தேடல் அகம் சம்மந்தமாகவே இருந்தது. எப்போதும் தியானம் செய்வதிலேயே நாட்டம் கொண்டவனாக இருந்தான்.
பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ஒருநாள் அறையை தாளிட்டுக்கொண்டு அவன் தியானம் செய்தான்.
-
அது பற்றி அவனே விவரிக்கிறான்.
அன்று நீண்டநேரம் தியானத்தின் இருந்தேன். எவ்வளவு நேரம் என்று சரியாக தெரியவில்லை. தியானம் கலைந்தபோது அந்த அறையின் தெற்கு சுவரிலிருந்து ஒளிமயமான ஒருவர் தோன்றி என் முன் வந்து நின்றார். அமைதிப்பேருணர்வான ஒரு துறவி அவர். அவரது முகத்திலிருந்து ஓர் அற்புதப்பேரொளி பொங்கிப் பரவிக் கொண்டிருந்தது. அவரது திருமுகம் சலனங்கள் எதுவுமின்றி சாந்தப் பெருங்கடலாய் திகழ்ந்தது. தலை மழிக்கப்பட்டிருந்தது. கையில் கமண்டலமும் தடியும் வைத்திருந்தார். என்னிடம் ஏதோ சொல்ல விரும்புவது போல என்னைப் பார்த்தபடியே சிறிது நேரம் நின்றிருந்தார். நான் பேச்சற்று உறைந்துபோய் அமர்ந்திருந்தேன். திடீரென ஒருவித பயம் என்னைப் பிடித்துக்கொண்டது. உடனே வேகமாக எழுந்து அறையி்ன் கதவை திறந்து கொண்டு வெளியே ஓடிவிட்டேன். ஆனால் பிறகு இப்படி ஓடியது முட்டாள்தனம். இல்லாவிட்டால் என்னிடம் ஏதாவது சொல்லியிருப்பார் என்று நினைத்துக்கொண்டேன். அதன் பிறகு அறையில் வந்து பார்த்தேன் அவரைக்காணவில்லை. மறுபடியும் அவரை காணவேண்டும் என்று பலமுறை முயன்றேன், ஆனால் காணமுடியவில்லை. ஒரு வேளை அவர் புத்தராக இருக்கும் என்று இப்போது எனக்கு தோன்றுகிறது(பிற்காலத்தில் இது பற்றி சுவாமிஜி, சீடர்களிடம் விவரிக்கும் போது இவ்வாறு கூறுகிறார்)
-
தொடரும்
-
விவேகானந்தர் விஜயம்
No comments:
Post a Comment