Thursday, 19 January 2017

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-34


#தமிழ்நாட்டில் #சுவாமி #விவேகானந்தர்-பாகம்-34
-
கும்பகோணத்தில் சுவாமி விகோனந்தர் பேசியது-பாகம்-1
-
மிகக் குறைந்த அளவே செய்யப்படுகின்ற மதப்பணி கூட மிகப் பெரிய விளைவைத் தருகிறது என்கிறது கீதை- கீதை கூறுகின்ற இந்த உண்மைக்கு விளக்கம் வேண்டுமானால் எனது எளிய வாழ்க்கையைப் பார்த்தால் போதும். அதன் நிரூபணத்தை நான் ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் கண்டு வருகிறேன்.
எனது பணி உண்மையில் மிகச் சாதாரணமானது .ஆனால் கொழும்புவிலிருந்து இங்கு வரை என் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் எனக்குத் தரப்படுகின்ற மனமுவந்த, கனிவான வரவேற்புகள் எல்லா எதிர்பார்ப்புகளையும் மீறியவை; அதே நேரத்தில் இது நம் இந்துப் பாரம்பரியத்திற்குத் தகுதியானவை, நமது இனத்திற்கு தகுதியானவை.
நம் இந்து இனத்தின் உயிர்ச் சக்தியும் வாழ்க்கைத் தத்துவமும் ஆதார நாடியும் மதத்தில்தான் இருக்கிறது. நான் கீழை மற்றும் மேலை நாடுகளில் பல்வேறு இன மக்களிடையே பயணம் செய்து, இந்த உலகத்தைக் கொஞ்சம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு மகத்தான லட்சியம் இருப்பதை நான் கண்டேன்.அதுவே அந்த இனத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. சில நாடுகளில் இந்த தேசியப் பின்னணி அரசியலாக இருக்கிறது , சில நாடுகளில் சமுதாய கலாச்சாரமாக உள்ளது, மற்றும் சில நாடுகளில் அறிவுக் கலாச்சாரமாக உள்ளது. ஆனால் நமது தாய்நாட்டின் அடிப்படையாக வும் முதுகொலும்பாகவும் அதன் தேசியவாழ்க்கை முழுவதும் கட்டப்படுவதற்கான உறுதியான அடித்தளப்பாறையாகவும் மதமே உள்ளது.
ஓர் இனத்தின் ஆதார சக்தி முழுவதும் மத லட்சியத்தில் இருப்பது நல்லதா அல்லது அரசியல் கொள்கைகளில் இருப்பது நல்லதா என்பது பற்றி இப்போது நான் பேசவில்லை . நல்லதற்கோ கெட்டதற்கோ, நமது ஆதார சக்தி முழுவதும் மதத்தில் தான் ஒருமுனைப்படுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு. இதை நீங்கள் மாற்ற முடியாது. அதை அழித்துவிட்டு அதற்குப் பதிலாக வேறு ஒன்றை வைக்க உங்களால் முடியாது.
வளர்ந்துவிட்ட பெரிய மரத்தை ஓர் இடத்திலிருந்து பிடுங்கி மற்றோர் இடத்தில் நட்டு, உடனடியாக அது அங்கே வேர் பிடித்து வளரும்படிச் செய்ய உங்களால் முடியாது.
நல்லதற்கோ கெட்டதற்கோ ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் மத லட்சியம் நிறைந்து பரவிக் கொண்டிருக்கிறது இந்தியச் சூழ்நிலை மத லட்சியங்களால் நிரப்பப்பட்டு எத்தனையோ நூற்றாண்டுகளாக ஒளிவீசி வருகிறது. நாம் இந்த மத லட்சியங்களை நடுவிலே பிறந்து வளர்க்கப்பட்டு இருக்கிறோம், அவை நம் ரத்தத்தோடு கலந்து, ரத்தக்குழாயில் ஓடுகின்ற ஒவ்வொரு துளியிலும் சிலிர்ப்பை ஊட்டி நம் உடம்போடு ஒன்றிப்போய் இருக்கிறது; நம் வாழ்வின் ஆதாரமாக சக்தியாக ஆகியிருக்கிறது.
நீங்கள் வேலை செய்ய வேண்டுமானால், இயன்ற அளவு எதிர்ப்பு குறைவாக இருக்க வேண்டும். இந்தியாவில் அத்தகைய ஒரு பாதை மதம்தான். இந்தியாவில் இதுதான் வாழ்க்கை வழி, இதுதான் வளர்ச்சிக்கான வழி. மதப்பாதையைப் பின்பற்றியே இந்தியா முன்னேற்றம் கண்டிருக்கிறது.
--தொடரும்----
#விவேகானந்தர்விஜயம்

No comments:

Post a Comment