Friday, 13 January 2017

கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-7


கர்மயோகம்(வாழும் வழி)-பாகம்-7
(சுவாமி விவேகானந்தர்)
-
எப்படிச் செய்ய வேண்டும் என்று தெரிந்து செய்வதன்மூலம் ஒருவன் பெரிய பலன்களை அடைவான்.
-
அனைத்து செயல்களும் நம் மனத்துள் ஏற்கனவே இருக்கின்ற ஆற்றலை வெளியே கொண்டு வருவதற்கான, ஆன்மாவை விழிப்புணர்த்துவதற்கான முயற்சிகள் மட்டுமே என்பதை நீங்கள் நினைவில்கொள்ள வேண்டும்.
-
ஆற்றல் மனிதனுள் இருக்கிறது. அதுபோலவே அறிவும் அவனுள்ளேயே இருக்கிறது. அவற்றை வெளியே கொண்டு வருவதற்காக, இந்த மாமனிதர்களை விழிப்புணர்த்துவதற்காகத் தரப்படும் அடி போன்றதே பல்வேறு செயல்கள்.
-
பல்வேறான பலன்களைக் கருதி மக்கள் செயல் புரிகிறார்கள். பலன் கருதாமல் செய்யப்படுகின்ற செயல்களே இல்லை.
-
சிலர் புகழை விரும்புகிறார்கள். அவர்கள் புகழிற்காக வேலை செய்கிறார்கள். சிலர் பணத்தை விரும்புகிறார்கள். அவர்கள் பணத்திற்காக வேலை செய்கிறார்கள். சிலருக்கு அதிகாரம் வேண்டும், அவர்கள் அதற்காக வேலை செய்கிறார்கள். வேறு சிலர் சொர்க்கத்தை விரும்புகிறார்கள். அதற்காக வேலை செய்கிறார்கள்.
-
சிலர் பிராயச்சித்தமாகச் செயல்புரிகிறார்கள்; எல்லாவிதமான பாவங்களையும் செய்வது, பிறகு ஒரு கோயிலைக் கட்டுவது அல்லது புரோகிதர்களுக்கு லஞ்சம் கொடுத்து சொர்க்கத்திற்குப் போவதற்கான பயணச்சீட்டை அவர்களிடமிருந்து வாங்கிக்கொள்ள வேண்டியது. இப்படிச் செய்துவிட்டால் தங்கள் பாவங்கள் நீங்கிவிடும் தன்டனையே இல்லாமல் தப்பித்துக்கொள்ளலாம் என்பது இவர்களின் எண்ணம். இவ்வாறு பல்வேறு நோக்கங்களுக்காகச் செயல்புரிகிறார்கள்.
-
செயலுக்காகச் செயல்புரிய வேண்டும் உலகிற்கு உண்மையாகவே நன்மை செய்கின்ற சிலர் எல்லா நாடுகளிலும் இருக்கிறார்கள். அவர்கள் செயலுக்காகவே செயல் புரிகிறார்கள்.
-
பெயர், புகழ், ஏன் சொர்க்கத்தைப் பற்றிக்கூட அவர்கள் கவலைப்படுவதில்லை. நன்முயற்சி என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் வேலைகளில் ஈடுபடுகிறார்கள்.
--
தொடரும்....
-
--விவேகானந்தர் விஜயம்-

No comments:

Post a Comment