இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-48
(சுவாமி விவேகானந்தர்)
-
அந்தப் பூரணப் பரம்பொருள் எப்படி மனமயக்கத்திற்கு உட்பட்டார்?
-
அவர் மனமயக்கத்திற்கு உட்படவே இல்லை. பூரணப் பரம்பொருள் எப்படிக் கனவு காண முடியும்? அவர் கனவே காணவில்லை.
-
உண்மை, கனவு காண்பதில்லை. இந்தப் பொய்த் தோற்றம் எங்கிருந்து எழுந்தது என்ற கேள்வியே அபத்தமானது. பொய்த் தோற்றம் பொய்த் தோற்றத்தில் இருந்தே எழுகிறது.
-
உண்மையைக் காண்கிற அந்தக் கணமே பொய்த் தோற்றம் மறைந்துவிடுகிறது. பொய்த் தோற்றம் எப்போதும் ஆதாரமாகக் கொண்டிருப்பது பொய்த் தோற்றத்தைத்தான்.
-
கடவுள், அதாவது உண்மை, அதாவது ஆன்மா ஒருபோதும் பொய்த் தோற்றத்திற்கு இடமாவதில்லை. நாம் ஒருபோதும் மனமயக்கத்திற்கு உள்ளாகவில்லை. அந்த மயக்கம் நமக்கு உள்ளே, நமக்கு முன்னால் இருக்கிறது.
-
நாமே பிரபஞ்சத்தின் கடவுளர்கள், இல்லையில்லை, இரண்டு இல்லை, இருப்பதே ஒன்றுதானே! நீங்களும் நானும் என்று சொல்வதே தவறு; நான் என்றுதான் சொல்ல வேண்டும்.
-
கோடிக்கணக்கான வாய்களின் மூலமாக உண்பது நானே; எனக்குப் பசி ஏது? எண்ணற்ற கைகளின் மூலமாக வேலை செய்வது நானே; நான் எப்படிச் செயலற்று இருக்க முடியும்?
-
இந்தப் பிரபஞ்சம் முழுவதன் வாழ்க்கை முழுவதிலும் வாழ்வது நானே; எனக்கு மரணம் ஏது? நான் எல்லா வாழ்வையும் கடந்தவன், எல்லா சாவையும் கடந்தவன்.
-
சுதந்திரத்தைத் தேடி நான் எங்கே போவது? நான் இயல்பாகவே சுதந்திரமானவன். பிரபஞ்சத்தின் கடவுளான என்னை யார் கட்டுப்படுத்த முடியும்?
-
பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் ஒரே பொருளான எனது மகிமையை விளக்க முயல்கின்ற சிறுசிறு வரைபடங்களே இந்த உலகின் சாஸ்திரங்கள் எல்லாம். இந்தப் புத்தகங்களால் எனக்கு என்ன பயன்? இவ்வாறு சொல்கிறான் அத்வைதி.
-
உண்மையை அறிந்து, இந்தக் கணமே சுதந்திரமாக இரு. அப்போது இருளெல்லாம் விலகிவிடும். எப்போது மனிதன் தன்னைப் பிரபஞ்சத்தின் எல்லையற்ற பொருளுடன் ஒன்றாகக் காண்கிறானோ, எப்போது அவனிடம் வேறுபட்டு உணர்ச்சி இல்லாமல் போகுமோ, எப்போது ஆண்கள், பெண்கள், தெய்வங்கள், தேவதைகள், பிராணிகள், தாவரங்கள், ஏன் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே அந்த ஒருமையில் கரையுமோ அப்போது எல்லா பயமும் அவனிடமிருந்து அகல்கிறது.
-
-
தொடரும்...
-
No comments:
Post a Comment