Thursday, 19 January 2017

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-43



#தமிழ்நாட்டில் #சுவாமி #விவேகானந்தர்-பாகம்-43
-
கும்பகோணத்தில் சுவாமி விகோனந்தர் பேசியது-பாகம்-10
-
நண்பர்களே, வருத்தம் தரக்கூடிய சில உண்மைகளை உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். நம் இந்தியன் ஒருவன் ஓர் ஆங்கிலேயனால் கொலை செய்யப்பட்டான் என்றோ கேவலமாக நடத்தப்பட்டான் என்றோ பத்திரிக்கையில் வருகிறது. உடனே நம் நாடு முழுதும் கூக்குரல்கள் எழுகின்றன . நானும் படிக்கிறேன், அழுகிறேன். அடுத்த வினாடியே இதற்கெல்லாம் யார் பொறுப்பு என்ற கேள்வி என் மனத்தில் எழுகிறது. ஒரு வேதாந்தி என்ற முறையில் எனக்குள்ளே இந்தக் கேள்வியைக் கேட்காமல் இருக்க என்னால் முடியாது.
இந்து தனக்குள் மூழ்குபவன். அவன் தனக்குள்ளும் தன் மூலமும், தன்னை அடிப்படையாகக் கொண்டும் எதையும் பார்க்க விரும்புகிறான். எனவே என்னையே நான் கேட்டுக்கொள்கிறோன் இதற்கு யார் பொறுப்பு? எனக்கு ஒவ்வொரு முறையும் கிடைக்கின்ற பதில் இதுதான்; ஆங்கிலேயர்கள் அல்ல, அவர்கள் பொறுப்பல்ல; நமது எல்லா துன்பங்களுக்கும் எல்லா இழிவுகளுக்கும் நாம், நாம் மட்டுமே பொறுப்பாளிகள்.
பிரபுத்துவ வெறி பிடித்த நமது முன்னோர்கள் இந்த நாட்டுப் பாமர மக்களைத் தங்கள் காலின் கீழிட்டு மிதித்துக் கொடுமைப்படுத்தினார்கள். பாவம் அவர்களுக்கு எந்த உதவியும் இல்லை. காலப்போக்கில் அந்த ஏழைகள் தாங்கள் மனிதர்கள் என்பதையே மறந்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும் பல நாற்றாண்டுகளாக அவர்கள் வெறும் விறகுவெட்டிகளாகவும் தண்ணீர் இறைப்பவர்களாகவுமே வாழ்வதற்குக் கட்டாயபடுத்தப்பட்டார்கள். விளைவு அவர்களை தங்களை பிறவி அடிமைகள் என்றும் விறகு வெட்டவும் தண்ணீர் இறைக்கவும் மட்டுமே பிறந்தவர்கள் என்றும் நம்பவே தொடங்கி விட்டார்கள்.
இன்றைக்கு நவீன கல்வியைப்பற்றி இவ்வளவு பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால் யாராவது அவர்களுக்குப் பரிந்து ஒரு வார்த்தை சொன்னாலும், தாழ்த்தப்பட்ட அந்த அப்பாவிகளைக் கைதூக்கி விடுவதான கடமையை விட்டுவிட்டு, நம் மக்கள் பின்வாங்குவதையே நான் காண்கிறேன்.
முட்டாள்தனமான சில பரம்பரைக் காரணங்கள், அவை போன்ற சில மேலை நாட்டு உளறல்கள் , இவற்றிலிருந்த சில காட்டுமிராண்டிகள், மிருகத்தனமான, வாதங்கள் இவையெல்லாம் அந்த ஏழைகளை மேலும் அடங்கி ஒடுக்குவதற்காக முன்வைக்கப்படுகின்றன.
ஏ பிராமணர்களே, பரம்பரை காரணமாக பிராமணர்களுக்குக் கீழ் ஜாதியினரைவிட நன்றாகப் படிக்கின்ற திறமை இருக்கிறது என்றால் பிராமணர்களின் படிப்பிற்கு எந்தப் பணமும் இனி செலவழிக்காதீர்கள்; எல்லாவற்றையும் கீழ் ஜாதியினருக்காகச் செலவிடுங்கள். உதவியற்றவர்களுக்கு கொடுங்கள், ஏனெனில் அவர்களுக்குதான் எல்லா செல்வமும் தேவைப்படுகிறது. பிராமணன் பிறவியிலேயே அறிவாளி என்றால் எந்த உதவியும் இல்லாமல் அவனே படித்துக்கொள்ள முடியும். பிறவியிலேயே அறிவாளி அல்லாத பிறர் எல்லா போதனையையும் ஆசிரியர்களையும் பெறட்டும்.
. இதுதான் நான் புரிந்து கொண்ட நீதியும் பகுத்தறிவுமாகும்.
-
தொடரும்----
#விவேகானந்தர்விஜயம்

No comments:

Post a Comment