Tuesday, 3 January 2017

இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-44

-
இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-44
(சுவாமி விவேகானந்தர்)
-
இனி நாம் இறுதித் தத்துவமான அத்வைதத்திற்கு வருவோம்.
-
தத்துவம் மற்றும் மதம் என்னும் மலர்களுள், இதுவரை எந்த நாடும் எந்தக் காலத்திலும் உருவாக்கியவற்றுள் மிகச் சிறந்தது என்று இதனை நாம் கருதுகிறோம். இங்கே மனித சிந்தனை அதன் மிக உயர்ந்த சிகரத்தை எட்டுகிறது; ஊடுருவிச் செல்ல முடியாததைப் போல் தோன்றிய மர்மங்களையும் துளைத்து அப்பால் செல்கிறது. இதுதான் அத்வைத வேதாந்தம்.
-
புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாக, மிகவும் உயர்ந்த தத்துவமாக இருப்பதால் இது சாதாரண மக்களின் மதமாக இருக்க முடியவில்லை. அதன் பிறப்பிடமான இந்தியாவில் மூவாயிரம் ஆண்டுகளாகத் தனியரசு செலுத்தி வந்தபோதிலும், சாதாரண மக்களிடம் நுழைய முடியவில்லை.
-
எந்த நாட்டிலும் உள்ள ஆண்களிலும் பெண்களிலும் உள்ள மிகச் சிறந்த சிந்தனையாளர்களால் கூட அத்வைதத் தத்துவத்தைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம் என்பதைப் போகப்போக அறிந்து கொள்வோம்.
-
மனிதர்கள் பிறவியிலிருந்தே ஒருவகையான சூழ்நிலைக்குப் பழக்கப்பட்டு விடுகிறார்கள். அது மட்டுமல்லாமல், பழங்கால மூடநம்பிக்கைகள், பரம்பரை மூட நம்பிக்கைகள், இன மூட நம்பிக்கைகள், நகர மூட நம்பிக்கைகள், நாட்டு மூட நம்பிக்கைகள், இவற்றைத் தவிர மனிதனுக்குள்ளே இயற்கையாகவே ஊறிக்கிடக்கும் அளவில்லாத மூட நம்பிக்கைகள் ஆகிய எல்லாவற்றிலிருந்தும் அவன் விடுபட வேண்டியுள்ளது.
-
அத்வைதம் தீர்மானமாகக் கூறுவது என்ன? கடவுள் என்று ஒருவர் இருப்பாரானால், பிரபஞ்சத்தின் நிமித்த காரணமும் உபாதான காரணமும் அவரே.
-
படைப்பவர் மட்டுமல்ல, படைப்பும் அவரே. அவரே இந்தப் பிரபஞ்சம். அது எப்படி முடியும்? தூய, உணர்வுமயமான கடவுள் பிரபஞ்சமாக ஆனாரா? ஆம். அப்படித்தான் தோன்றுகிறது.
-
தொடரும்...
-
-

No comments:

Post a Comment