இந்து மதமும் அதன் சகல அம்சங்களும்-பாகம்-40
(சுவாமி விவேகானந்தர்)
-
நிறைநிலையை அடைந்த ஆன்மா, தான் விரும்பினால், எந்த உருவத்தையும் எடுத்துக்கொள்ள முடியும்; நூறு உடல்களைக்கூட எடுத்துக்கொள்ள முடியும், எந்த உடலையுமே எடுத்துக்கொள்ளாமல் வேண்டுமானாலும் இருக்க முடியும்.
-
அது ஏறக்குறைய எல்லாம் வல்லதாக ஆகிவிடுகிறது. ஒரே வித்தியாசம் என்னவென்றால் அதனால் படைக்க முடியாது. அந்தச் சக்தி கடவுளுக்கு மட்டுமே சொந்தமானது.
-
எவ்வளவு தான் நிறை நிலையடைந்த ஆன்மாவாக இருந்தாலும் பிரபஞ்சத்தை நடத்த முடியாது. அந்த வேலை கடவுளுக்கு மட்டுமே சொந்தமானது. ஆனால் எல்லா ஆன்மாக்களும் நிறைநிலை அடைந்ததும் நிலையான பேரின்பத்தில் திளைக்கின்றன, நிரந்தரமாகக் கடவுளுடனேயே வாழ்கின்றன. இதுதான் துவைதிகளின் கருத்து.
-
துவைதிகள் இன்னுமொரு கருத்தையும் பிரச்சாரம் செய்கிறார்கள். இறைவா, எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று பிரார்த்திப்பதை அவர்கள் கண்டிக்கிறார்கள். அப்படிச் செய்வது தவறு என்று அவர்கள் நினைக்கிறார்கள்.
-
உலகியல் ஆசைகளைப் பூர்த்தி செய்து கொள்ள விரும்பினால், தாழ்ந்த நிலையிலுள்ள தேவர்களையே பிரார்த்திக்க வேண்டும். தேவர்களில் ஒருவரிடமோ, ஒரு தேவதையிடமோ, நிறைநிலை பெற்ற ஒருவரிடமோ தான் இதைப் போன்ற பிரார்த்தனைகளைச் செய்ய வேண்டும். கடவுளிடம் பக்தி மட்டுமே செலுத்த வேண்டும்.
-
இறைவா, எனக்கு இதைக் கொடு, அதைக் கொடு என்று கேட்பது ஏறக்குறைய தெய்வ நிந்தனைதான்.
-
ஆனால் முக்தி வேண்டுமென்றால் கடவுளைத்தான் வழிபட வேண்டும். (முக்தி கடவுளால் மட்டுமே தர முடியும். )இந்தியாவிலுள்ள சாதாரண மக்களின் மதம் இதுதான்.
-
வேதாந்தத் தத்துவம் உண்மையில் விசிஷ்டாத்வைதத்திலிருந்துதான் தொடங்குகிறது.
-
-
தொடரும்....
No comments:
Post a Comment