தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-40
-
கும்பகோணத்தில் சுவாமி விகோனந்தர் பேசியது-பாகம்-7
-
இந்தச் சகிப்புத்தன்மை என்றும் மகோன்னதமான கருத்திற்காக உலகம் காத்திருக்கிறது. நாகரீகத்திற்கு அது ஒரு மகத்தான செல்வமாக விளங்கும்; அது மட்டுமல்ல இந்தக் கருத்தைக் ஏற்றுக்கொள்ளாமல் எந்த நாகரீகமும் நீண்ட காலம் வாழ முடியாது.
-
கும்பகோணத்தில் சுவாமி விகோனந்தர் பேசியது-பாகம்-7
-
இந்தச் சகிப்புத்தன்மை என்றும் மகோன்னதமான கருத்திற்காக உலகம் காத்திருக்கிறது. நாகரீகத்திற்கு அது ஒரு மகத்தான செல்வமாக விளங்கும்; அது மட்டுமல்ல இந்தக் கருத்தைக் ஏற்றுக்கொள்ளாமல் எந்த நாகரீகமும் நீண்ட காலம் வாழ முடியாது.
வெறியும் ரத்த வெள்ளமும் கொடூரமும் நிறுத்தப்பட்டாலன்றி எந்த நாகரீகமும் வளர முடியாது. மனிதர்கள் ஒருவருக்கொருவரை அன்புணர்வுடன் அணுகாதவரை எந்த நாகரீகமும் தலை நிமிரவே முடியாது. மிகவும் தேவையான அந்த அன்புணர்வின் முதல் படி, பிற மதக் கருத்துக்களை அன்போடும் கனிவோடும் பார்ப்பதாகும் .அன்புணர்வுடன் இருந்தால் மட்டுமே போதாது, நமது மதக் கொள்கை களும் நம்பிக்கைளும் எவ்வளவுதான் வேறுபட்டதாக இருந்தாலும், அந்த மதங்களுக்கு ஊக்கத்துடன் உதவவும் வேண்டும்.
சற்றுமுன் நான் கூறியது போல் இந்தியாவில் அதையே இப்போது செய்து கொண்டிருக்கிறோம். இங்கே இந்தியாவில் தான் இந்துக்கள் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளும், முகமதியர்களுக்கு மசூதியும் கட்டித் தந்தனர்; இன்றும் கட்டித் தருகின்றனர். அது தான் செய்யப்பட்ட வேண்டிய, கொடூரங்கள் அவர்களின் கொடுமைகள் ஆதிக்க வெறி இவற்றிற்கு இடையிலும் நம்மைப்பற்றிப்பேசும் இழிவான பேச்சுக்களுக்கு இடையிலும், நாம் அவர்களை அன்பினால் வெற்றி கொள்ளும்வரை நிச்சயும் கிறிஸ்தவர்களுக்கு சர்ச்சுகளையும் முகமதியர்களுக்கு மசூதிகளையும் கட்டிக் கொடுப்போம்; கொடுத்துக்கொண்டே இருப்போம்.
அன்பு மட்டுமே நிலைக்கக்கூடிய ஒன்று வெறுப்பு அல்ல; மென்மைதான் நெடுங்காலம் வாழ்வதற்குரிய வலிமையையும் பலனையும் தரவல்லது அன்றி வெறும் காட்டுமிராண்டித்தனமோ உடம்பின் வலிமையோ அல்ல என்பதை உலகத்திற்கு நிரூபிக்கும் வரை நாம் இவ்வாறு செய்துகொண்டே இருக்க வேண்டும்.
நம்மிடமிருந்து இன்றைக்கு உலகம் பெற விரும்புகின்ற மற்றொரு மகத்தான கருத்து , உலகம் முழுமையின் ஆன்மீக ஒருமை ஐரோப்பாவின் சிந்தனையாளர்களுக்கு, இல்லை, இந்த உலகம் முழுவதற்க்கும் - உயர்ந்தோரைவிடப் பாமரருக்கு, படித்தவர்களைவிடப் படிக்காதவர்களுக்கு, பலசாலிகளை விடப் பலவீனருக்கு- தேவையானது இந்தக் கருத்தே.
மேலை நாட்டின் தற்கால ஆராய்ச்சிகள்,தூல உப கரணங்கள் மூலமே பிரபஞ்சத்தின் ஒருமைப்பாட்டையும் பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள எல்லாமே ஒன்றையொன்று சார்ந்திருப்பதையும் நிரூபித்துள்ளது. ஜடப் பொருட் கடலில் சின்னஞ்சிறு அலைகளாகவோ அலைத் தொகுதிகளாகவோ இருக்கிறோம்; அது போலவே உடம்பும் மனமும் ஜடப்பொருளாகிய கடலில் சின்னஞ்சிறு அலைகளே, அதாவது பெயர் வேறுபாடே என்பதை நெடுங்காலத்திற்கு முன்பே இந்திய மன இயல் காட்டியுள்ளது. வேதாந்தம் இதற்கும் ஒரு படி மேலாகச் சென்று, இந்த பிரபஞ்சத்தின் ஒருமைப் பாட்டுக் கருத்தின் பின்னணியில் மகத்தான, ஒன்றேயான உண்மை ஆன்மா இருக்கிறது என்பதைக் காட்டியிருக்கிறது. இவற்றை யெல்லாம் சென்னைப் பல்கலைக் கழகப் பட்டதாரிகளாகிய உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை பிரபஞ்சம் முழுவதிலும் ஒரே ஓர் ஆன்மாதான் உள்ளது. இருப்பவை எல்லாம் ஒன்றே.
பிரபஞ்சம் முழுமையின் இந்த அடிப்படை ஒருமைப்பாட்டுக் கருத்து இந்த நாட்டில் கூடப் பலரைப் பயமுறுத்தி இருக்கிறது. இன்றும் சில நேரங்களில் அந்தக் கருத்தை ஆதரிப்பவர்களைவிட எதிர்ப்பவர்களே அதிகம் உள்ளனர் என்றாலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்; புத்துயிர் அளிக்கின்ற இந்த ஒரு மகத்தான கருத்தைதான் இன்றைக்கு உலகம் நம்மிடம் வேண்டி நிற்கிறது.
தங்கள் உரிமைக்காக குரல் எழுப்ப முடியாத பாமர மக்களின் விடிவிற்கு இந்தக் கருத்து தான் தேவை. அனைத்தின் இந்த ஒருமைப்பாட்டுக் கருத்தை நடைமுறையிலும் அன்றாட வாழ்க்கையிலும் செயல்படுத்தாமல் யாராலும் நமது நாட்டில் முன்னேற்றத்தைக் கொண்டு வர முடியாது.
-
--தொடரும்----
-
#விவேகானந்தர்விஜயம்
-
--தொடரும்----
-
#விவேகானந்தர்விஜயம்
No comments:
Post a Comment