Thursday, 19 January 2017

தமிழ்நாட்டில் சுவாமி விவேகானந்தர்-பாகம்-38



தமிழ்நாட்டில் #சுவாமி #விவேகானந்தர்-பாகம்-38
-
கும்பகோணத்தில் சுவாமி விகோனந்தர் பேசியது-பாகம்-5
-
மதம் என்ற துறையில் மனித இனத்தின் பெரும் பகுதியையேனும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கச் செய்ய வேண்டுமானால், அது தத்துவ உண்மைகளின் மூலம் தான் முடியுமே தவிர, மனிதர்களின் மூலம் முடியாது என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள். நான் முன்பு கூறியதுபோல் நமது மதம் அதற்கு வேண்டிய அதிகாரத்தையும் ஆற்றலையும் மிகுதியாகப் பெற்றதாக உள்ளது.
இஷ்ட தெய்வக் கொள்கை இருக்கிறதே, அது அற்புதமானது. உங்களுக்கு உகந்த மகான்களை நீங்கள் தேர்ந்துதெடுத்துக் கொள்வதற்க்கு முழுமையான சுதந்திரத்தைக் இது அளிக்கிறது. இவர்களுள் எந்த மகானையோ ஆச்சாரியரையோ உங்கள் வழிக்காட்டியாக, வழிபாட்டிற்கு உரியவராக நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம், அது மட்டுமல்ல, நீங்கள் தேர்ந்தெடுப்பவரே மகான்களுள் மிக மேலானவர், அவதாரபுருஷர்கள் மிக உயர்ந்தவர் என்று நினைக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. அதில் தவறில்லை. ஆனால் அதற்குப் பின்னணியாக உறுதியான, நிரந்தரமான தத்துவ உண்மைகள் இருக்க வேண்டும்.
ஓர் ஆச்சரியகரமான உண்மை என்னவென்றால் நமது அவதார புருஷர்களின் மதிப்பெல்லாம் அவர்களின் வாழ்க்கை வேத உண்மைகளுக்கு விளக்கமாக அமையும் போது மட்டுமே.
ஸ்ரீகிருஷ்ணரின் பெருமை யெல்லாம், அவர் நமது சனாதன தர்மத்தின் கொள்கைகளை மிகச் சிறப்பாகப் போதித்தவர் என்பதிலும், இந்தியாவில் இதுவரை வாழ்ந்த வேதாந்த ஆச்சாரியர்களுள் மிகச் சிறந்தவர் என்பதிலும் தான் இருக்கிறது.
உலகத்தின் கவனத்திற்கு வேதாந்தம் விடுக்கின்ற இரண்டாவது கருத்து; உலக சாஸ்திரங்கள் அனைத்திலும் வேதாந்த போதனைகள் மட்டுமே, இக்கால விஞ்ஞானத்தின் புறவுலக ஆராய்ச்சி முடிவுகளோடு முழுக்கமுழுக்க இயைபு உடையதாக உள்ளது.
தற்கால விஞ்ஞானத்தின் முடிவுகள் வேதாந்திகள் அல்லது இந்துக்களின் மதத்தோடுதான் இயைபாகப் பொருந்துவதாகத் தோன்றுகிறது. இன்றைய விஞ்ஞானம் தன் முடிவுகளை வைத்துக்கொண்டு, அதே நேரத்தில் வேதாந்தத்தின் முடிவுகளின் வாயிலாக ஆன்மீகத்தையும் நாடலாம் என்றே தோன்றுகிறது.
இன்றைய விஞ்ஞானத்தின் முடிவுகள் நெடுங்காலத்திற்க்கு முன் வேதாந்தம் கண்ட முடிவே என்றுதான் , நமக்கு மட்டுமல்லாமல் ஆராய்ச்சியில் விருப்பம் உள்ள அனைவருக்கும் தோன்றுகிறது. ஒரு வித்தியாசம் என்னவென்றால், இன்றைய விஞ்ஞானம் தூல மொழியில் எழுதப்பட்டுள்ளது.
தற்கால மேலை நாட்டறிஞர்களை வேதாந்தம் கவர்வதற்கான மற்றொரு காரணம், வேதாந்ததின் அற்புதமான பகுத்தறிவுக் கொள்கை வேதாந்தத்தின் முடிவுகள் மிகவும் ஆச்சரியமான வகையில் அறிவுபூர்வமாக இருப்பதாக இன்றைய மிகச் சிறந்த மேலை நாட்டு அறிஞர்கள் பலர் என்னிடம் கூறினர்.
மத ஒப்புமையிலிருந்து பெறப்பட்டுள்ள அத்தகைய இரண்டு விஞ்ஞான முடிவுகள் மீது உங்கள் கவனத்தைச் சிறிது திருப்ப விரும்புகிறேன்- ஒன்று, மதங்களின் சமரசம்; மற்றொன்று, எல்லாம் ஒன்றே என்னும் கொள்கை.
-
--தொடரும்----
#விவேகானந்தர்விஜயம்

No comments:

Post a Comment