Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-6

வகுப்பு-6 நாள்-23-12-2019

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

மாத்ராஸ்பர்ஷாஸ்து கௌந்தேய ஷீதோஷ்ணஸுகது:கதா:

ஆகமாபாயிநோ அநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பாரத॥ 2.14

 

வெப்பமும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவது போலவே,

சுகம்-துக்கம் போன்றவை தோன்றி மறைகின்றன.

அர்ஜுனா, கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் போன்ற ஐந்து இந்திரியங்களும்,

அதற்குரிய

பார்த்தல்,கேட்டல்,நுகர்தல்,சுவைத்தல்,உணர்தல் போன்ற ஐந்து இந்திரியார்த்தங்களில் உள்ள இணக்கத்தினால் இவை உண்டாகின்றன.

தோன்றி மறையும் நித்தியமில்லாத இவைகளை பொறுத்துக்கொள்.

 

யம் ஹி வ்யதயந்த்யேதே புருஷம் புருஷர்ஷப।

ஸமது:கஸுகம் தீரம் ஸோ அம்ருதத்வாய கல்பதே॥ 2.15

 

மனிதனின் சிறந்தவனே, இந்த சுக-துக்கங்களை சமமாக ஏற்றுக்கொண்ட தீரனான மனிதன் எதற்கும் அசைவதில்லை. அவன் நிச்சயமாக  அமிர்தம்போன்ற சாகாநிலையை அடைய தகுதியானவன்.

-

இமய மலையின் கடும் குளிரில் சிலர் ஆடைகளின்றி தவத்தில் ஈடுபடுகிறார்கள். குளிர் அவர்களை ஒன்றும் செய்வதில்லை. நான்கு புறமும் தீ மூட்டி சுடும் வெயிலில் சிலர் தவம் செய்கிறார்கள். சூடு அவர்களை தாக்குவதில்லை.

அதற்கு காரணம் இந்திரியங்களை உள்முகமாக திருப்பி இந்திரியார்த்தங்களிலிருந்து அவைகளை விலக்கியுள்ளார்கள்.

அப்படி இந்திரியங்களை இந்திரியார்த்தங்களிலிருந்து விலக்க தெரிந்தவர்கள் சுகம்,துக்கம் இரண்டினாலும் பாதிக்கப்படுவதில்லை ..அவர்கள் சாகாநிலையை அடைய தகுதியானவர்கள்

 

ஆனால் சாதாரண நிலையில் உள்ள மனிதன் என்ன செய்ய வேண்டும்?

 

இவைகளை பொறுத்துக்கொள்ள வேண்டும்.

துன்பம் எதனால் வருகிறது?

அது ஒரு பாடத்தை கற்றுத்தருவதற்காக.

அந்த பாடத்தை கற்றுக்கொண்டபின் மீண்டும் அந்த துன்பம் வருவதில்லை.வேறு துன்பம் வருகிறது.அதிலிருந்து வேறு பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும்.

இப்படி வாழ்க்கை முழுவதும் துன்பங்கள் வந்துகொண்டே இருக்கின்றன.

ஒரே துன்பம் மீண்டும் மீண்டும் ஏன் வருகிறது? அதிலிருந்து உரிய பாடத்தை கற்றுக்கொள்ளாததால்

உதாரணமாக சீட்டு கம்பெனியில் பணம் போட்டால் இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தையை நம்பி பணம் போடுகிறார்கள் . கடைசியில் போட்ட பணம் கிடைப்பதில்லை.அதனால் துன்பம் வருகிறது.

இப்போது அதிக ஆசை துன்பத்தை கொண்டுவரும் என்ற பாடத்தை கற்றுக்கொண்டோம்.

சிலர் மீண்டும் வேறு சீட்டு கம்பெயினில் பணம் போடுவார்கள்.மீண்டும் துன்பப்படுவார்கள்.

சிலர் ஜாக்கிரதையாக இவைகளிலிருந்து விலகியிருப்பார்கள்.

பலருடைய வாழ்க்கை அனுபவங்களை ஆராய்ந்து அதிலிருந்து அறிவை பெற்றிருப்பார்கள்

-

எனவே மற்றவர்களின் அனுபவத்திலிருந்தும் நாம் அறிவைப்பெறலாம்.

அறிவு அதிகமாக அதிகமாக துன்பங்களிலிருந்து விடுபடுகிறோம்

துன்பத்திற்கு காரணம் அறியாமை

அறியாமையை எப்படி விலக்குவது?

நாம் ஆன்மாவை நோக்கி செல்ல செல்ல அறியாமை விலகுகிறது.துன்பங்கள் குறைகிறது.

-

ஆத்மா எங்கே இருக்கிறது?

 

அவிநாஷி து தத்வித்தி யேந ஸர்வமிதம் ததம்।

விநாஷமவ்யயஸ்யாஸ்ய கஷ்சித்கர்துமர்ஹதி॥ 2.17

 

ஆத்மா உடல் முழுவதும் பரவியிருப்பது.அது அழிவற்றதென்று அறிவாய்

அழிவற்றதான ஆத்மாவைக் கொல்லக் கூடியவர் எவருமில்லை.

-

ஆன்மா உடல் முழுவதும் பரவியிருக்கிறது.

ஆன்மாதான் உடலாக மாறியிருக்கிறது

உடல்தான் ஆன்மாவாக மாறி இருக்கிறது.

உடலை காணும்போது ஆன்மா தெரியாது.

ஆன்மாவைக் காணும்போது உடல் தெரியாது.

பால்தான் தயிராகிறது.தயிரான பின்னர் பாலை காண முடியாது

-

ஆன்மாவை காணும் ஒருவன் உடலை காண்பதில்லை. சரி.

அவனால் உலகத்தைக் காண முடியுமா? முடியாது.

உடல் மறையும்போது கூடவே உலகமும் மறைந்துவிடும்.

-

ஆன்மா அழிவற்றது. உடல் அழியக்கூடியதா?

உடல்கூட அழிவற்றதுதான்.

உடலில் இருக்கும் கோடிக்கணக்கான மூலக்கூறுகள் பிரிந்து சென்றுவிடும். சில மூலக்கூறுகள் வேறு உயிர்களின் உடலுக்கு செல்கிறது. சில காற்றில் கலக்கிறது. சில நீரில் கலக்கிறது. சில வேறு மிருகங்களில் உடலில் கலக்கிறது. சில மூலக்கூறுகள் தாவரங்களின் உடலில் கலக்கிறது.

எனவே எந்த உடலும் அழிவதில்லை.அது பல்வேறு மூலக்கூறுகளாக மாறிவிடுகிறது.

இந்த உலகத்திலுள்ள அதையும் யாராலும் அழிக்க முடியாது.

ஒரு உருவம் இன்னொரு உருவமாக மாறுகிறது.

ஒரு மூலக்கூறு இன்னொரு மூலக்கூறாக மாறுகிறது.

ஒரு சக்தி இன்னொரு சக்தியாக மாறுகிறது.

-

வேதாவிநாஷிநம் நித்யம் ஏநமஜமவ்யயம்।

கதம் புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்॥ 2.21

 

பார்த்தனே! ஆத்மா அழிவற்றது, பிறப்பற்றது, மாற்றமில்லாததென்று அறிந்த ஒருவன்

யாரையாகிலும் கொல்வானா?, கொலை செய்யப்படக் காரணமாக இருப்பானா?

-

ஆத்மாவை அறிந்தவன் ஞானி. அவன் யாரையும் கொல்வதும் இல்லை.யாரும் கொல்லப்படுவதற்கு காரணமாகவும் இருப்பதில்லை.

இந்த உலகத்திலுள்ள எல்லாம் அதன் அதன் இயல்புபடி நடந்துகொள்கின்றன. தீயவன் தீய வேலைகளை தொடர்ந்து செய்துகொண்டிருப்பான். நல்லவன் நல்ல வேலைகளை செய்துகொண்டிருப்பான்.

ஞானியின் கண்களுக்கு இவைகள் எல்லாம் இயற்கையின்கூறுகளாக தெரியும். நல்லவனை ஊக்கப்படுத்தவேண்டும். தீயவனை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் ஞானியிடம் இருப்பதில்லை.

எந்த செயலுக்கும் அவர் காணமாக இருப்பதில்லை.புதிய கர்மங்களை உண்டுபண்ணுவதிலிருந்து விலகி இருக்கிறார்.

அவரது கண்களுக்கு பெரும்பாலான நேரம் இந்த உலகம் நாம் பார்ப்பதுபோல தெரிவதில்லை. எல்லாமே உணர்வுமய உருவங்களாக தெரிகிறது.

ஒரு குழந்தையின் பார்வையில் இந்த உலகம் எப்படி தெரிகிறது?

அது ஒரு விஷப்பாம்பின் பக்கத்தின் சென்று அதை தொட்டு விளையாடும்.உருவங்களுக்கு பின்னால் இருக்கும் இயல்புகள் பற்றி அதற்கு தெரியாது.

ஒரு திருடன் ஞானியின் பக்கம் வரும்போது திருடன் என்ற இயல்பை இழந்துவிடுகிறான்.அதேபோல நல்லவன் ஞானியின் பக்கம் வரும்போது நல்லவன் என்ற இயல்பை இழந்துவிடுகிறான்.

அவரது அருகில் இருவரும் குணங்கள் அற்ற உருவங்களாக தெரிகிறார்கள்.

எனவே அவரால் பாகுபாடு பார்க்காமல் அன்பு செலுத்த முடிகிறது.

-

நமது கண்களுக்கு இன்னும் இந்த உலகத்தின் தீமை தெரிகிறது என்றால் நாம் இன்னும் தீயவர்களாக இருக்கிறோம் என்று பொருள்.

ஞானியின் நிலையும் குழந்தையின் நிலையும் ஒன்று.

இந்த உலகத்திலுள்ள தீமையை நம்மால் நீக்க முடியாது. ஆனால் ஞானியின் நிலையை நாம் அடையும்போது நம்மைப்பொறுத்தவரை தீமை மறைந்துவிடும். நன்மையும் மறைந்துவிடும்.

-

அப்படியென்றால் செயல்களையெல்லாம் விட்டுவிட்டு ஒதுங்கிவிட வேண்டுமா? அப்படி ஒதுங்க முடியாது.அர்ஜுனன் அப்படி ஒதுங்க வேண்டும் என்று நினைக்கிறான்.

உடனே அது முடியாது. முதலில் ஞானம் என்றால் என்ன? ஞானி எப்படி நடந்துகொள்வான்? போன்றவற்றையெல்லாம் ஓரளவு தெரிந்துகொள்ள வேண்டும்.

-

ஆபூர்யமாணமசலப்ரதிஷ்டம்

ஸமுத்ரமாப: ப்ரவிஷந்தி யத்வத்।

தத்வத்காமா யம் ப்ரவிஷந்தி ஸர்வே

ஷாந்திமாப்நோதி காமகாமீ॥ 2.70

 

முழுக்க நிறைந்து அசைவற்ற நிலையில் இருக்கும் சமுத்திரத்தில், எப்படி ஆறுகள்  ஒன்று கலக்குமோ,( ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றுநீர் சமுத்திரத்தில் கலந்ததும் அடங்கிவிடுகிறது) அப்படியே, எல்லா ஆசைகளும்  முனிவனுள் பிரவேசித்தாலும் அவன் அமைதியில் நிலைத்திருப்பான். ஆசையை அனுபவிக்க நினைப்பவனுக்கு இது கிடைக்காது.


No comments:

Post a Comment