Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 41

வகுப்பு-41  நாள்-22-2-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

மரணமடையும்போது எதை நினைத்துக்கொண்டு உயிரைவிடுகிறான்,என்பதைப்பொறுத்து அடுத்தபிறவி அமைகிறது

-

மனிதனால் மட்டுமே கனவு காண முடியும். பிற உயிரினங்களால் முடியாது.

வாழ்க்கை முழுவதும் ஒருவன் எதைக் கனவு காண்கிறானோ,அதற்கு ஏற்ப அடுத்த பிறவி அமைகிறது.

தனது குடும்பத்தைப்பற்றிய சிந்தனைகளிலேயே எப்போதும் மூழக்கிக்கொண்டிருப்பவன் இறந்தபிறகு மறுபடியும் அதே குடும்பத்தில் பிறக்கிறான்.

-

இந்தியாவில் தோன்றிய மதங்களை பின்பற்றுபவங்கள் அனைவரும் மறுபிறவியை நம்புகிறார்கள்.

சாதாரண பாமர மனிதனைக்கேட்டால்கூட மீண்டும் பிறக்க விரும்புவதாக தெரிவிப்பான்.

இந்த பிறவியில் சாதிக்க முடியாத,நிறைவேற்ற முடியாத ஆசைகளை அடுத்தபிறவியிலாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் வயதானபின் ஏற்படுகிறது.

-

ஆசைகள் நிறைவேறாதவர்கள் மரணத்திற்கு பிறகு என்ன ஆகிறார்கள்?

 

மரணமடையும்போது பிராணசக்திகள் ஒன்றிணைந்து உடலைவிட்டு வெளியேறி சூட்சும உடலை எடுக்கின்றன.

இதை ஆவி உடல் என்று பொதுவாக அழைக்கிறோம்.

இந்த ஆவி உடல் என்பது மனித உடலைப்போன்றது அல்ல.

சூட்சும உடலால், தூல உடலின் செயல்களைச் செய்ய முடியாது.

அவைகளால் காற்றில் பறந்து ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு செல்ல முடியும்.

இறந்துபோன உடலைச்சுற்றி உறவினர்கள் அழுவதைக் காணமுடியும்.

யார் உண்மையிலேயே அழுகிறார்கள்.யார் அழுவதுபோல நடிக்கிறார்கள் எல்லாம் அதற்குத்தெரியும்.

தனக்கு நேர்ந்த சோகத்தை நினைத்து வருத்தத்தில் அங்கேயே இருக்கும்.

சுடுகாட்டிற்கு உடலை கொண்டு செல்லும்போது அதனுடன் செல்லும்.

 

சுடுகாட்டில் சுடலைமாடன் என்ற தெய்வம் உண்டு. சுடுகாட்டை காவல் காக்கும் தெய்வம்.

சுடுகாட்டிற்கு சென்ற ஆவிகளை அங்கேயே கட்டுப்படுத்தி,

 மறுபடியும் ஊருக்குள்ளே செல்லவிடாமல் தடுப்பது அவரது முக்கிய வேலை.

எனவே இறந்த ஆவிகள் சுடுகாட்டின் அருகிலேயே சுற்றிக்கொண்டிருக்கும்.

அந்த வாழ்க்கை மிகவும் துன்பமானது. நரக வேதனையைக் கொடுக்க்கூடியது.

எல்லா ஆவிகளையும் சுடலைமாடனால் கட்டுப்படுத்த முடியாது.

நல்லவர்களின் ஆவி அங்கிருந்து வெளியேறி மறுபடியும் வீட்டிற்கு வருகிறது.

வீட்டில் உள்ளவர்கள் எத்தனை நாட்கள் அவர்களை நினைக்கிார்களோ

அத்தனை நாட்கள் அங்கேயே சுற்றிக்கொண்டிருக்கும்.

நாட்கள் ஆக ஆக மனிதர்கள் இறந்தவர்களை மறந்துவிடுகிறார்கள்.

அப்படி மறந்துவிட்டால் அந்த ஆவி வேறு இடத்திற்கு செல்கிறது.

பொதுவாக கோவிலின் அருகில்,புண்ணிய இடங்களின் அருகில் சில காலம் வசிக்கிறது.

-

மறுபடி எப்படி பிறக்கிறது?

 

கர்பம்தரித்த பெண்ணின் வயிற்றிலிருக்கும் குழந்தையின் பிராண சக்திகளுடன் ஆவியின் பிராண சக்தி ஒன்று கலந்து அதனோடு ஒன்றாகிவிடுகிறது. கர்பம் தரித்த ஒரு சில மாதங்களுக்கு பிறகு இது நடக்கலாம்.அல்லது வளைகாப்பு சமயங்களில் நடக்கலாம்.

குழந்தை பிறந்த பிறகு சில ஆவிகள் குழந்தையின் உடலுடன் ஒன்று கலக்க முயற்சிக்கும்.

அதைத் தடுக்க குழந்தையின் கையில் தாயத்து கட்டியிருப்பார்கள்.

சில வேளைகளில் ஒன்றுக்கும் அதிகமான ஆவிகள் ஒரே உடலில் ஒன்று கலப்பதும் உண்டு.

-

இன்னும் பலவிதமான விதங்களில் பிறப்புகள் ஏற்பட வழிகள் உண்டு

 

ஆண்-பெண் உறவில் ஈடுபடாமலே, பெண் கர்பம் தரிப்பதுண்டு.

ரிஷிகள்,மகான்கள் இப்படி பிறக்கிறார்கள்.

முற்காலத்தில் கணவனும்,மனைவியும் நல்ல குழந்தை வேண்டும் என்று தவம்புரிவார்கள்.

தவத்தின் பலனாக உடல்உறவில் ஈடுபடாமலே அவர்களுக்கு குழந்தை பிறக்கும்.

இப்படி பிறக்கும் குழந்தைக்கு ஆரியன் என்று பெயர்.

ஆரியன் என்றால் ஒளி பொருந்தியவன். பண்பட்டவன்.

இறைவன் மனிதனாக பிறக்கும்போதும் இப்படி நடக்கிறது.

-

பித்ருலோகம்

-

உயர்ஜாதியினர் இன்னும் வேறுவிதமான நம்பிக்கைகளை வைத்திருக்கிறார்கள்.

அவர்களின் யாராவது இறந்துபோனால் சில நாட்கள் பூமியில் வசித்துவிட்டு பிறகு பித்ருலோகம் என்று அழைக்கப்படும் முன்னோர்கள் வாழும் உலகத்தை அடைகிறார்கள்.

ஆண்டுக்கு ஒருமுறை அவர்களை நினைத்து பித்ரு கர்மம் செய்கிறார்கள்.

பூலோகத்தில் ஓராண்டு என்பது பித்ருலோகத்தில் ஒருநாளுக்கு சமம்

அங்கே சில வருடங்கள் வாழ்ந்த பிறகு மீண்டும் அதே குடும்பத்தில் குழந்தையாக பிறக்கிறார்கள்.

-

இந்த காலத்தில் பல ஜாதியினர் பித்ரு கர்மம் செய்கிறார்கள்.

இதனால் என்ன பயன்?

வாழும்போதே, தான் இறந்தபிறகு பித்ரு லோகத்தில் சென்று வாழ்வேன் என்ற நம்பிக்கையில் வாழ்ந்தவர்கள் இறந்தபிறகு பித்ருலோகம் செல்வார்கள்.

வாழும்போது அப்படிப்பட்ட ஒன்றைப்பற்றியும் கேள்விப்படாமல்,தினசரி செய்யவேண்டிய அதற்குரிய கர்மங்களையும் செய்யாமல் வாழ்ந்தவர்கள்  பித்ருலோகம் செல்வதில்லை .

இறந்தபிறகு வருடாவருடம் அவர்களுக்கு பித்ரு கர்மம் செய்வதனால் என்ன பயன்?

-

சிலர் இறந்தபிறகு கைலாயம் செல்ல வேண்டும் என்றும் சிலர் இறந்த பிறகு வைகுண்டம் செல்ல வேண்டும் என்ற தீவிர எண்ணத்தில் இருப்பார்கள். இந்த உலகங்களுக்கு செல்வதற்குரிய தீவிர பக்தியும்.அதற்குரிய புண்ணியமும் இருந்தால் இறந்தபிறகு அந்த உலகங்களுக்கு செல்கிறார்கள்.இதேபோல இன்னும் பல உயர்ந்த உலகங்கள் இருக்கின்றன.

-

சில ரிஷிகள் இறந்தபிறகு  தாங்கள் சமாதிஆன இடத்திலேயே சூட்சும உடலில் வாழ்ந்து அங்கு வரும் பக்தர்களுக்கு அருள்புரிகிறார்கள். சில ரிஷிகள் மலைகளில் சூட்சும உடலில் வாழ்கிறார்கள். சில ரிஷிகள் மேல் உலகங்களுக்கு சென்று அங்கேயேம் தவத்தில் ஈடுபடுகிறார்கள்.

சில ரிஷிகள் உடலைவிட்ட பின் ஒளி வீசக்கூடிய நட்சத்திரங்களாக மாறுகிறார்கள்.

-

தீயவர்கள் இறந்தபிறகு கடுமையாக மனவேதனையை அனுபவிக்கிறார்கள்.பல வருடங்கள் ஆவி உடலில் துன்பப்பட்டபிறகு மீண்டும் மனிதனாக பிறக்கலாம்.அல்லது மிருகங்களாக பிறக்கலாம்.

-

மரணத்திற்கு பிறகு ஒருவன் இப்படித்தான் வாழ்வான் என்று யாராலும் உறுதியாகக்கூற முடியாது.

ஒரு மனிதன் செய்துள்ள பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கை அமைகிறது.

 

இறந்துபோனவரின் பாவங்களை மகன் அல்லது குடும்பத்தில் உள்ளவர்கள் ஏற்றுக்கொண்டால் இறந்தவர் அதிக துன்பப்படவேண்டியதில்லை.

-

இறந்தபிறகு நல்ல வாழ்க்கை கிடைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

-

நமது விதிக்கு நாம்தான் காரணம். இந்த பிறவியில் நிறைய புண்ணிய செயல்களை செய்தால் அடுத்தபிறவி நல்லதாக அமைகிறது. நிறைய பாவங்களைச்செய்தால் அடுத்தபிறவி துன்பமாக அமைகிறது.

மரணத்திற்கு பிறகு நம்முடன் கூட வருவது நாம் இந்த பிறவியில் செய்த பாவமும் புண்ணியமும்தான் என்பது எல்லா இந்துக்களுக்கும் தெரியும்.

ஆனாலும் வாழும்போது புண்ணிய கர்மங்களை செய்ய முன்வருபவர்கள் சிலர் மட்டுமே.

தொடர்ந்து கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினால் அடுத்தபிறவி நல்லதாக அமையும் என்று சிலர் நினைக்கலாம்.

 

முற்காலத்தில் உடலை வருத்தி வெகுதூரம் நடந்து கோவிலுக்கு செல்வார்கள். விரதம் இருந்து கோவிலுக்கு செல்வார்கள். கோவிலை சுற்றி அங்கபிரதட்சணம் செய்வார்கள். இப்படி செய்தால் பாவம் விலகுகிறது. இதனால் புண்ணியம் கிடைக்காது.ஆனால் பாவம் விலகும்.

 

சிலர் கோவிலுக்கு சென்று உளவாரப்பணிகள் செய்வார்கள். கோவிலை சுத்தம் செய்வார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவார்கள்.மாலைதொடுத்தல்,தண்ணீர்கொண்டுவருதல், போன்ற கோவிலுக்கு வேண்டிய பணிவிடைகளை செய்வார்கள்.இதனால் புண்ணியம் கிடைக்கிறது. இது புண்ணிய செயல்.

-

சிலர் தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்தின் ஒரு பகுதியை கோவிலுக்கு தானமாகக் கொடுக்கிறார்கள்.

இதுவும் புண்ணிய செயல்தான்.

-

பாவத்தை போக்கும் செயலையும் செய்யாமல், புண்ணியம் தரும் செயலையும் செய்யாமல் வெறுமனே கோவிலுக்கு சென்று வருவதால் கிடைக்கும் பயன் என்ன?

இறைவன் இப்படிப்பட்டவர்களை கண்டுகொள்வதே இல்லை.

-

சிலர் மறுபிறவி இருப்பதை நம்புவதில்லை.அவர்கள் இறந்தபிறகு என்ன ஆவார்கள்?

-

மறுபிறவியை நம்பாதவர்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள் என்பதைப் பார்க்க வேண்டும்.

சிலர் இறந்தபிறகு தூக்கத்திற்கு சென்றுவிடுவதாகவும் பிறகு என்றாவது ஒருநாள் மீண்டும் எழும்புவதாகவும் .அப்போது அவர்கள் செய்த செயலுக்கு ஏற்ப நரகம் அல்லது சொர்க்கம் கிடைக்கும் என்று நினைத்து வாழ்க்கிறார்கள்.

வாழ்க்கை முழுவதும் அதையே நினைத்துக்கொண்டு வாழ்ந்தால் இறந்தபிறகு அப்படிப்பட்ட நிலைதான் கிடைக்கும்.

-

ஒருமனிதன் அனுபவிக்க விரும்பும்  இன்பங்கள் அனைத்தையும் ஓரிடத்தில் வைத்து அதற்கு சொர்க்கம் என்கிறார்கள்.

அனைத்து துன்பங்களையும் ஓரிடத்தில் சேர்த்துவைத்து அதற்கு நரகம் என்று அழைக்கிறார்கள்.

 

நித்திய சொர்க்கம், நித்திய நரகம் என்ற ஒன்று ஒரு காலத்திலும் இருக்க முடியாது.

மீண்டும் பூமிக்கு வரவேண்டும்.

 

நான் ஆன்மா, நான் இறைவன்,நான் எல்லையற்றவன், எனக்கு உருவம் இல்லை. என்ற ஞானம் ஏற்பட வேண்டும். நேரடி அனுபவம் ஏற்பட வேண்டும்.

சொர்க்கத்திலோ, நரகத்திலோ இது ஏற்படுவதில்லை.

பூலோகத்தில்தான் இந்த ஞானம் கிடைக்கிறது. எனவே யாராக இருந்தாலும் முக்திபெறுவதற்காக பூமியில் மீண்டும் பிறக்க வேண்டும்.

மறுபிறவியை நம்பினாலும் சரி நம்பாவிட்டாலும் சரி.

முக்தி பெறும்வரை மனிதன் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment