வகுப்பு-14 நாள்-4-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
ஷ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்।
ஸ்வதர்மே நிதநம் ஷ்ரேய: பரதர்மோ பயாவஹ:॥ 3.35
3.35
நன்கு செய்யப்படும் பிறருடைய தர்மத்தை காட்டிலும்(பிறருடைய தர்மத்தை பற்றி நன்கு தெரிந்திருந்தாலும் அதை பின்பற்றாமல்),
குறையுடையதாயினும் தன்னுடைய தர்மத்தை பின்பற்றுவதே சிறந்தது.
தன்னுடைய தர்மத்தில் மரணமடைவது சிறந்தது.
பிறருடைய தர்மமானது(அவனுக்கு) பயம் தருவதாகும்
நமக்கு விதிக்கப்பட்ட தர்மம் எதுவோ அதை சிறப்பாக செய்ய வேண்டும்.
பிறர் பின்பற்றும் தர்மம் இதைவிட நல்லது என்பதற்காக இதைவிட்டுவிடுவது நல்லதல்ல.
உதாரணமாக ராணுவத்தில் ஒருவர் பணியாற்றுகிறார்.அவரது தர்மம் எதிரிகளைக்கொல்வது. இன்னொருவர் ஒரு ஆசிரமத்தில் தபம் செய்கிறார். அவரது தர்மம் உயிர்களைக்காப்பது
உயிர்களைக் கொல்வதைவிட காப்பது சிறந்தது என்பதற்காக ராணுவவீரன் அந்த பணியைவிட்டுவிட்டு.ஆசிரமத்தில் சென்று தவ வாழ்க்கை வாழ்வது நல்லதல்ல.
அப்படி செய்தால் எதிரிகளை வீழ்த்தும் பணியை யார் செய்வது?
தனது தர்மத்தில் குறைபாடு இருந்தால்கூட அதை முழுமனதோடு செய்வதே நல்லது.
ஏனென்றால் எந்த வேலையும் தாழ்ந்தது அல்ல.
நாம் இப்போது செய்துகொண்டிருக்கும் வேலையை தொடர்ந்து சிறப்பாகசெய்து வந்தால் அதுவே மேலான நிலைக்கு நம்மை அழைத்துச்செல்லும்
இதற்கு உதாரணமாக பல சம்பவங்களைக்கூடலாம்.
மிருகங்களைக்கொன்று அதை சந்தையில் வைத்து விற்பனை செய்யும் ஒரு கசப்புக்கடைகாரன் அந்த வேலையை செய்துகொண்டிருக்கும்போதே ஞானியாக மாறியதைப்பற்றி மகாபாரத்தில் படிக்கிறோம்.
வியாதகீதை என்பது அவன் போதித்தது.
எனவே எந்த வேலையும் கீழானது அல்ல.அதை எந்த மனநிலையில் செய்கிறோம் எப்படி செய்கிறோம் என்பது முக்கியம்.
சுவதர்மம் என்பது நமது இயல்புக்கு ஏற்ற வேலை.
சிறுவயதிலிருந்தே ஒருவன் மண்பனை செய்து கொண்டிருக்கிறான்.அது அவனுக்கு இயல்பாகவே எளிதாக இருக்கிறது.
அவன் அந்த தொழில் தாழ்ந்தது என்ற எண்ணத்தில் அதைவிட்டுவிட்டு, மருத்துவம் போன்ற உயர்ந்த தொழிலுக்கு சென்றால் அது சிறந்ததாக அமையாது. அது பயம் தருவதாகும்.அதை சிறப்பாக செய்ய பல ஆண்டுகாலம் பயிற்சி தேவைப்படும்.
மண்பானை செய்யும் தொழில் செய்பவன் திறமைசாலியாக இருந்தால் அதில் பல புதுமைகளைப்புகுத்தி அனைவரின் கவனத்தையும் தன்பால் ஈர்க்கமுடியும்.அதில் மிகுந்த லாபமும் சம்பாதிக்க முடியும்.
பரம்பரைத்தொழில் என்பது இயல்பாகவே ஏற்பட்டது.இதில் தொழில் போட்டி இல்லை.
சிறுவயதிலிருந்தே தங்கள் பரம்பரைத் தொழிலை செய்துவருவார்கள்.
வேலைக்காக யாரிடமும் கையேந்தி நிற்கத் தேவையில்லை.
அந்த தொழில் பற்றிய ஞானம் பரம்பரை பரம்பரையாக அப்படியே வருகிறது.
எனவே அந்த தொழில் நுணுக்கங்களைக் கற்க அதிகம் சிரமப்படவேண்டியதில்லை.
வெளி நபர்களை நாடிசெல்ல வேண்டியதில்லை.
வேலை இல்லாத திண்டாட்டம் என்பது அறவே இருக்காது.
தற்காலத்தில் உயர்ந்த தொழிலை செய்யும் ஒருன் தன் குழந்தைகளும் அந்த தொழிலையே செய்ய வேண்டும் என்று நினைக்கிறான்.மிகவும் சாதாரணமான தொழிலை செய்வதற்கு ஆள் இல்லை
உதாரணமாக கிராமங்களில் வயல்களில் வேலை செய்ய போதிய ஆள் இல்லை.
அதற்கு காரணம் வயல்வேலை என்பது தாழ்ந்தது என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது.தங்கள் குழந்தைகள் மருத்துவராகவோ,வக்கீலாகவே ஆகவேண்டும் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள்.எனவே மிகச்சாதாரண வேலையை செய் ஆள் இல்லாத நிலை ஏற்படுகிறது
இந்த வேலைகளை செய்ய வேறு மாநிலங்களிலிருந்து கூலிக்கு ஆட்கள் இங்கே வருகிறார்கள்.
அவர்கள் படிப்படியாக இங்கே நிலையான வசிப்பிடத்தை அமைத்து வருகிறார்கள்.
நமது பகுதியில் உள்ளவர்கள் உயர்ந்த வேலையைச்செய்ய வேறு நாடுகளுக்கு செல்கிறார்கள்.
அவர்களால் இங்கே வாழ முடியாத நிலை ஏற்படுகிறது
-
சித்த வைத்தியத்தில் நன்கு புலமைபெற்ற பல குடும்பங்கள் முற்காலத்தில் இருந்தன. எந்த நோயாக இருந்தாலும் அதை சரி செய்யும் ஞானம் அவர்களிடம் இருந்தது.பிற்காலத்தில் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அந்த தொழிலைவிட்டுவிட்டு வேறு தொழில்களைசெய்ய சென்றதால் சித்தவைத்திய தொழில் பற்றிய அறிவு மங்கிப்போனது.
இதேபோல பல தொழில்கள் அழிந்துபோனது
-
பரம்பரைத் தொழிலில் உள்ள ஒரே குறை என்னவென்றால்,பரம்பரை தொழில் காரணமாக ஒரு இனம் உயர்ந்ததாகவும் இன்னொரு இனம் தாழ்ந்ததாகவும் கருதப்பட்டதுதான்.
மகாபாரத காலத்திலேயே பரம்பரை தொழில் காரணமாக ஒருவர் உயர்ந்தவராகவும் இன்னொருவர் தாழ்ந்தவராகவும் கருதப்பட்டார்கள்.
முற்கால மக்கள் மறுபிறவி கொள்கையை தீவிரமாக நம்பினார்கள்.
ஒருவன் இந்த பிறவியில் அதிக புண்ணியம் செய்தால் அடுத்தபிறவியில் இதைவிட உயர்ந்த பிறவி கிடைக்கும் என்று நம்பினார்கள்.
அரசன் வீட்டில் பிறப்பவன் முற்பிறவியில் அதிகம் புண்ணியம் செய்திருப்பான்
பிராமண குலத்தில் பிறக்கும் ஒருவன் முற்பிறவியில் அதிகம் புண்ணியம் செய்திருப்பான் என்று மக்கள் நம்பினார்கள்
எனவே தாழ்ந்த வேலையை செய்யும் ஒருவன் அதற்காக தன்னையே குறை சொல்லிக்கொள்வானே தவிர இந்த சமுதாயத்தை குறை சொல்வதில்லை.
இந்த பிறவியில் இந்த வேலையை சிறப்பாக செய்து அடுத்த பிறவியில் உயர்ந்த நிலையை அடையலாம் என்ற எண்ணம் அவனுக்குள் இருந்தது
எனவே முற்காலத்தில் ஜாதி தொடர்பான பிரச்சினைகள் எழவில்லை.
No comments:
Post a Comment