Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-23

வகுப்பு-23  நாள்-21-1-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

ஜ்ஞேய: ஸ நித்யஸம்ந்யாஸீ யோ ந த்வேஷ்டி ந காங்க்ஷதி।

நிர்த்வந்த்வோ ஹி மஹாபாஹோ ஸுகம் பந்தாத்ப்ரமுச்யதே॥ 5.3 ॥

 

5.3 பெருந்தோளுடையவனே, யார் விருப்பு வெறுப்பு இல்லாதவனோ, அவன் நித்திய சந்நியாசி என்று அழைக்கப்படுகிறான். ஏனெனில் இருமைகளற்றவன் எளிதில் பந்தத்திலிருந்து விடுபடுகிறான்.

 

இருமைகள் என்பது என்ன?

-

இந்த உலகம் சமநிலையில் இயங்கவேண்டுமானால் எதிர் எதிர் நிலைகளை உடைய இரண்டு தேவைப்படுகிறது

ஆண்-பெண்

ஈர்ப்பு-எதிர்ப்பு

வலது-இடது

மேடு-பள்ளம்

வரவு-செலவு

நண்பன்-எதிரி

வடதுருவம்-தென்துருவம்

இன்பம்-துன்பம்

மேல்-கீழ்

அழுகை-சிரிப்பு

நல்லவன்-கெட்டவன்

இனிப்பு-கசப்பு

இருள்-ஒளி

வரவு-செலவு

இப்படி முடிவில்லாமல் இந்த பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

-

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் இருப்பதுபோல இந்த இரண்டும் சேர்ந்து இருக்கிறது.

பொதுவாக எல்லோருமே நல்ல அம்சங்களை விரும்புகிறோம்,கெட்ட அம்சம் அதனுடன் சேர்ந்தே வருகிறது.

எல்லோரும் நல்லவர்களாக இருக்கவேண்டும் .நாம் எப்போதும் ஆனந்தத்தில் இருக்கவேண்டும்.எப்போதும் தேவையானவைகள் கிடைத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றெல்லாம் நினைக்கிறோம்.ஆனால் அப்படி நடப்பதில்லை.

-

எதற்காக இந்த இருமைகள் படைக்கப்பட்டுள்ளன?

-

இந்த உலகம் ஒரு விளையாட்டு மைதானம்.

நான்கு பக்கத்திலிருந்தும் ஆபத்து வந்துகொண்டே இருக்கும்.ஒரு இடத்தில் சும்மா இருக்க முடியாது.

ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.

இடையிடையே சிறிது ஓய்வு கிடைக்கும்.அப்போது சற்று இன்பம் கிடைக்கும்.

மறுபடியும் ஓட்டம்.

நம்மிடமுள்ள சக்தி முழுவதும் தீரும்வரை ஓட வேண்டும்

-

நாம் இந்த உலகத்தை,உலக பொருட்களை இறுக பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

சிலர் புதிதாக கட்டிய வீட்டின்மீது பற்று வைத்திருப்பார்கள்.அதனால் எல்லா பிரச்சினைகளும் அவர்களை தாக்கும்.

சிலர் தங்கள் குழந்தைமீது பற்று வைத்திருப்பார்கள்.அந்த குழந்தையினால்தான் எல்லா துன்பங்களும் வரும்.

இதுபோல  எதன்மீது பற்று வைத்திருக்கிறோமோ அதிலிருந்து எல்லா துன்பங்களும் வருகின்றன.

அந்த பற்றை விடும்வரை துன்பம் வந்துகொண்டே இருக்கும்.

ஒன்றை விட்டுவிட்டால் இன்னொறு பற்று வந்துவிடும்.

முடிவில் இந்த உலகத்தையே விட்டுவிடும் படி இயற்கை கட்டாயப்படுத்துகிறது.

பற்றிலேயே பெரிய பற்று நமது உடல்மீது நாம் வைத்திருக்கும் பற்று.

வயது ஆனபிறகு எல்லோரும் உடலை விடவேண்டிய காலம் வருகிறது.

-

இந்த இருமைகளை விடுவது எளிதல்ல.

அப்படி யாராவது விட்டிருந்தால் அவன்தான் சந்நியாசி.

 

சந்நியாசிக்கு உடல்மீது பற்று இருக்காது. நான் உடல் என்ற உணர்வும் இருக்காது.

சந்நியாசம் என்பது ஒரு நிலையைக் குறிக்கிறது.அது ஒரு காரணப்பெயர்.

சந்நியாச நிலையை அடைவதற்காகத்தான் எல்லோரும் போராடிக்கொண்டிருக்கிறோம்.

மகான்களிடம்கூட சிறிதளவு உடல்பற்று இருக்கும். உலகிற்கு நல்லதுசெய்ய வேண்டும் என்பதற்காக அந்த பற்று உன்னது..

எனவே முழுமையாக சந்நியாச நிலையை அடைந்தவன் இந்த உலகைவிட்டு சென்றுவிடுவான்.

-

இல்லறம் என்பது பற்றை ஏற்படுத்திக்கொள்வதற்கான இடம் அல்ல.

அது படிப்படியாக பற்றை விடுவதற்கான இடம்.

அனுபவிக்க வேண்டிவைகளையெல்லாம் அனுபவித்து முடித்தபிறகு அவைகளை விட்டுவிட வேண்டும்.

சந்நியாச நிலையை உடனே அடைந்துவிட முடியாது. பல பிறவிகளில் பாடுபட்டு அடைய வேண்டிய நிலை அது.

-

இந்த இருமைகளுக்கு இடையில் ஒரு நிலை இருக்கிறது.

இன்பம்-துன்பம் என்ற இருமைகளுக்கு  இடையே ஒரு நிலை உள்ளது.

அது இன்பத்தில் மூழ்காத, துன்பத்தில் துடிக்காத நிலை.

மேடு-பள்ளம் இந்த இரண்டிற்கு ஒரு சமநிலை உள்ளது.

தெற்கு-வடக்கு இந்த இரண்டிற்கும் இடையே ஒரு சமநிலை உள்ளது.

பகல்-இரவு இந்த இரண்டிற்கு இடையே ஒரு சமநிலை உள்ளது.

அதேபோல இருமைகள் அனைத்திற்கும் இடையே ஒரு சமநிலை உள்ளது.

அந்த சமநிலையை அடைவதுதான் சந்நியாசம்

 

இன்பத்தை விட்டு விலகி ஓடுவதோ,துன்பத்தை விட்டு விலகி ஓடுவதோ அல்ல.

இந்த இரண்டும் மனிதனை தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்.

இந்த இரண்டிலும் சமநிலை குலையாமல் இருப்பது.

-

வருவதை ஏற்றுக்கொள்,தருவதை பெற்றுக்கொள் எங்கிருந்தும் விலகி ஓடாதே என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.

சிலருக்கு துன்பம் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. இதற்கு ஒரு முடிவு உண்டா? இல்லை.

ஆனால் துன்பம் மேலும்மேலும் மனிதனை பக்குவப்படுத்தி சமநிலையை நோக்கி கொண்டு செல்கிறது

 

செயலுக்கும்,செயல்புரியாமல் இருப்பதற்கும் இடையே ஒரு நிலை உள்ளது.

இந்த உலகத்தில் ஒருவன் வெற்றிபெற வேண்டுமானால் தொடர்ந்து தீவிரமாக செயல்புரிந்துகொண்டே இருக்க வேண்டும்.அப்படி தீவிரமாக செயல்புரிபவன் ஒருநாளும் சமநிலையை அ்டைய முடியாது.

அதே நேரம் செயலிலிருந்து முற்றிலும் விலகி இருப்பவனுக்கு இந்த உலகத்திலுள்ள எதுவும் கிடைக்காது.யாரும் அவனை விரும்பமாட்டார்கள்.அவனாலும் சமநிலையை அடைய முடியாது.

 

இந்த தீவிர செயல் மற்றும் செயல் அற்ற நிலைக்கு இடையே இருக்கும் நிலையை யாரால் அடைய முடிகிறதோ அவனே சமநிலையை அடைய முடியும்.

அதற்கு உதாரணமாக ஸ்ரீகிருஷ்ணரை கூறலாம்.

அவர் ஆயுதம் எடுத்து போர்புரியவில்லை.அதே நேரத்தில் போர்களத்தை விட்டு வெளியேயும் செல்லவில்லை.

போர்க்களத்திற்குள் சும்மா இருப்பவன்கூட உயிரோடு திரும்பிப்போக முடியாது.

தீவிரமான செயல்.செயலற்றநிலை.அதன் நடுவே உள்ள சமநிலை.

அந்த சமநிலையிலேயே இருந்ததால்தான் சிறந்த உபதேசங்களை அவரால் கொடுக்க முடிந்தது.

-

நாம் துன்பப்படுவதற்கு என்ன காரணம்?

துன்பத்திற்கு காரணம் அறியாமை.அறியாமையிலிருந்துதான் ஆசை பிறக்கிறது.

-

நாம் எப்போதெல்லாம் துன்பப்பட்டோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.அப்போதெல்லாம் நமது அறிவு சரியாக வேலைசெய்யவில்லை என்பது தெரியவரும்.இப்போது இருப்பதுபோல அறிவு முன்பு இல்லை.

நமக்கு அறிவு வளர வளர துன்பங்கள் வருவது தெரிகிறது.அதைவிட்டு விலகி செல்ல முடிகிறது.

-

சமநிலை என்பது அறிவு நிலை.

தீவிரமான செயலில் இருப்பவனது புத்தி வேலை செய்யாது.

வேலை செய்யாமல் இருப்பவது புத்தியும் வேலை செய்யாது.

சமநிலையில் இருப்பவனது புத்தி வேலை செய்கிறது.

புத்தி வேலை செய்யும்போது இந்த உலகத்தின் இயல்புகள் தெளிவாக தெரிகிறது.


No comments:

Post a Comment