Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 49

வகுப்பு-49  நாள்-4-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

சகுணபிரம்மம், நிர்குணபிரம்மம் என்று இரண்டு நிலைகள் இருக்கின்றன.

-

அர்ஜுனன் கேட்கிறான்

-

ஏவம் ஸததயுக்தா யே பக்தாஸ்த்வாம் பர்யுபாஸதே।

யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோகவித்தமா:॥ 12.1 ॥

 

12.1 இவ்வாறு எப்போதும் யோகத்தில் உறுதிப்பாட்டுடன் உம்மை உபாசிக்கும் பக்தர்கள் மற்றும் பிரம்மத்தை உபாசிக்கும் ஞானிகள் இவர்களில் யோகத்தை நன்கு அறிந்தவர் யார்?

-

ஸ்ரீபகவான் சொன்னது

 

மய்யாவேஷ்ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே।

ஷ்ரத்தயா பரயோபேதா: தே மே யுக்ததமா மதா:॥ 12.2 ॥

 

12.2.என்னிடம் மனதைவைத்து, யோகத்தில் நிலைத்தவராய், மேலான ச்ரத்தையுடன் கூடியவராய் யார் என்னை உபாசிக்கிறார்களோ அவர்கள் யோகத்தில் நிலைபெற்றவன் என்பது என் கருத்து

-

யே த்வக்ஷரமநிர்தேஷ்யம் அவ்யக்தம் பர்யுபாஸதே।

ஸர்வத்ரகமசிம்த்யம்ச கூடஸ்தம் அசலம்த்ருவம்॥ 12.3 ॥

 ஸம்நியம்யேந்த்ரியக்ராமம் ஸர்வத்ர ஸமபுத்தயா:।

தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூதஹிதே ரதா:॥ 12.4 ॥

 

12.3,4 ஆனால் யார் எங்கும் சமபுத்தியுள்ளவர்களாய், இந்திரியங்களை நன்கு அடக்கிக்கொண்டு சொல்லால் விளக்க முடியாத, தோற்றத்திற்கு அப்பாற்பட்ட, எங்கும் வியாபித்தும் சிந்தைக்கெட்டாததும், நகராததும், நிலைத்திருப்பதுமாகிய அக்ஷரத்தை (பிரம்மத்தை) உபாசித்துக்கொண்டு, எல்லா உயிர்களின் நன்மையில் ஈடுபட்டுள்ள அவர்களும் என்னையே வந்தடைகிறார்கள்

-

க்லேஷோ அதிகதரஸ்தேஷாம் அவ்யக்தாஸக்தசேதஸாம்।

அவ்யக்தாஹி கதிர்து:கம் தேஹவத்பிரவாப்யதே॥ 12.5 ॥

 

12.5 அவ்யக்தத்தில் (பிரம்மத்தில்) சித்தத்தை வைத்தவர்களுக்கு வழி கடினமானது. ஏனென்றால் உடல் உணர்வு உடையவர்களால் (இந்த உடல் எனது என்ற உணர்வு) அவ்யக்தத்தை அடைவது கடினம்

-

 யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸம்ந்யஸ்ய மத்பர:।

அநந்யேநைவ யோகேந மாம் த்யாயந்த உபாஸதே॥ 12.6 ॥

தேஷாமஹம் ஸமுத்தர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாகராத்।

பவாமி ந சிராத்பார்த மய்யாவேஷிதசேதஸாம்॥ 12.7 ॥

 

12.6,7 ஆனால் பார்த்தா, யார் எல்லா கர்மங்களையும் என்னிடத்தில் அர்ப்பணித்து என்னையே மேலான கதியாக கருதி சிதைவுறாத யோகத்தால் என்னையே தியானிக்கிறவர்களாய் உபாசிக்கிறார்களோ, என்னிடத்து செலுத்திய மனதையுடைய அவர்களை மரணத்தோடு கூடிய சம்சார சாகரத்தினின்று  விரைவில் கரையேற்றுகிறேன்

--

ஸ்ரீகிருஷ்ணர் இரண்டு நிலைகளைப்பற்றி பேசுகிறார்

-

1.பிரம்மத்தை உபாசிக்கும் ஞானிகள்

2.தன்னை வழிபடும் பக்தர்கள்

-

இதில் பல கேள்விகள் எழுகின்றன.

 

சிவபெருமாவை வழிபடுபவர்களை யார் காப்பாற்றுவார்?

காளியை வழிபடுபவர்களை யார் காப்பாற்றுவார்?

பிற மதங்களில் உள்ள தெய்வங்களை வழிபடுபவர்களை யார் காப்பாற்றுவார்?

என்னை வழிபடுதல் என்றால் என்ன அர்த்தம்?

--

தாய்மை என்ற ஒரு பண்பு இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்

 

குழந்தையை பெற்றெடுத்து,அதனை வளர்த்து,பேணிக்காப்பவள் தாய்.

உலகத்தில் எத்தனை தாய் இருக்கிறார்கள்? கோடிக்கணக்கில் உண்டு

ஆனால் இந்த தாய்மை என்ற பண்பு ஒன்றுதான் உண்டு

அமெரிக்காவில் உள்ள தாய்க்கும் இந்திய தாய்க்கும் உருவத்திலும்.நடத்தைகளிலும்,எல்லாவற்றிலும் வேறுபாடு இருந்தாலும் இந்த தாய்மை என்ற பண்பு ஒரே போலவே இருக்கிறது.

-

இந்த உலகத்தில் மிக உயர்ந்தது தாய் அன்பு.அதைவிட உயர்ந்தது உண்டா?

-

யோக சாதனையில் ஈடுபட்டிருக்கும் ஒருவர் பாவம் முழுவதும் நீங்க பெற்ற பின்னர் புருவமத்தியில் நிலைத்திருக்கும்போது  சகுணபிரம்மத்தின் இயல்பை அடைகிறார்.அதற்கு ஈஸ்வர ஸ்வபாவம் என்றுபெயர்.

 ஈஸ்வரனுக்குரிய இயல்பைப் பெறுதல்.

அப்போது அவரிடம் எல்லா உயிர்களையும் சமமாக நேசிக்கும் இயல்பு வெளிப்படுகிறது.

பிற உயிர்களுக்காக தன்னை தியாகம் செய்யும் இயல்பு மேலெழுகிறது.

எல்லாவித நல்ல குணங்களும் அவரிடம் வெளிப்படுகிறது.

ஒரு தாய் தன் குழந்தையிடம் கொண்டுள்ள அன்பை இன்னொருத்தியின் குழந்தையிடம் காட்டுவதில்லை.

ஆனால் சகுணபிரம்மத்தை அடைந்த யோகி எல்லா உயிர்களையும் நேசிக்கிறார்.

-

இந்த நிலையை ஒருவர் மட்டும்தான் அடைய முடியுமா?

ஒருவர் மட்டும்தான் எல்லா உயிர்களையும் நேசிக்க முடியுமா?

இல்லை .

ஒவ்வொரு நூற்றாண்டிலும் பலபேர் இந்த நிலையை அடைகிறார்கள்.

ஆனால் அவர்கள் அனைவரிடமும் ஒரே இயல்புதான் வெளிப்படுகிறது.

தாய்மை என்பது ஒன்றுதான் அதை அடைபவர்கள் பலர்.

அதேபோல ஈஸ்வர ஸ்வபாவம் என்பது ஒன்றுதான் அதை அடைபவர்கள் பலர்.

-

இவ்வாறு ஈஸ்வர ஸ்வபாவத்தை அடைபவர்கள் குரு நிலையை அடைகிறார்கள்.

பிறருக்கு முக்தி கொடுக்கும் சக்தி பெற்றவர்களாகவும். இயற்கை சக்திகளை அடக்கி ஆளும் வல்லமை பெற்றவர்களாகவும் விளங்குகிறார்கள்.

உலகத்திலுள்ள சக்திகள் அனைத்தும் அவர்களுக்கு கட்டுப்பட்டதே.

-

ஒரு தாய் எத்தனை நாட்களுக்கு தாயாக இருப்பாள்?

சில வருடங்களுக்கு மட்டுமே,அதன்பிறகு பாட்டியாகவேண்டியதுதான். தாய்மை என்ற பதவி போய்விடுகிறது.

அதேபோல ஒருவர் ஈஸ்வர ஸ்வபாவத்தை அடைந்திருந்தாலும், காலம் முழுவதும் அந்த நிலையில் நீடித்திருக்க முடியாது.

எதுவரை அவர் பாவம் அற்றவராக இருக்கிறாரோ அதுவரை மட்டுமே அந்த நிலையில் நீடித்திருக்க முடியும்.

-

இராவணன் கடுமையான தவம் செய்து ஈஸ்வரன் என்ற நிலையை அடைந்தான்.இயற்கை சக்திகள் அனைத்தையும் கட்டுப்படுத்துவம் வல்லமை பெற்றான்.அதனால் இராவணேஸ்வன் என்று அழைக்கப்பட்டான்.

ஆனால் காம வசப்பட்டு, சீதையை கடந்தி வந்ததால் ஈஸ்வரநிலையை இழந்தான்.இயற்கை சக்திகளை கட்டுப்படுத்தும் ஆற்றலை இழந்தான்.

இராமனிடம் அந்த ஈஸ்வர ஆற்றல் முழுவதும் வெளிப்பட்டது.

தனக்கு மரணமே இல்லை என்று நினைத்த இராவணன் மாண்டான்.

-

எனவே ஈஸ்வர ஸ்வபாவம் என்பது பலரிடம் வெளிப்படுகிறது.ஆனால் அது தற்காலிகமானது.

அந்த நிலையை அடைய வேண்டுமானால் மனிதனாக பிறக்க வேண்டும். கடுமையான தவங்களை செய்ய வேண்டும்.

ஒரு சிலர் கடுமையான தவம் செய்து மேல் உலகத்தில் வாழும் தெய்வங்களிடமிருந்து வரம்பெறுகிறார்கள்.

பின்பு அந்த வரத்தினால் கிடைக்கும் சக்தியை தவறான வழியில் பயன்படுத்தி பலனை துன்புறுத்துகிறார்கள்.

இதனால் வரத்தை கொடுத்த தெய்வத்திற்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

மேல் உலகத்தில் வாழும் தெய்வங்கள்கூட ஈஸ்வர ஸ்வபாவத்தை அடைவதற்காக மனிதர்களாக பிறக்கிறார்கள்.

-

மனிதனாக பிறப்பவரிடம் மட்டுமே ஈஸ்வர ஸ்வபாவம் வெளிப்படுகிறது.

அந்த நிலையை அடைந்தவர் எல்லா உலகங்களையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் பெற்றவராக இருப்பார்.

மேல் உலகத்தில் வாழும் தெய்வங்கள்கூட அவரிடம் கட்டுப்பட்டவையே.

ஆனால் எல்லாம் தற்காலிகமானதுதான்.

 

பாவமே இல்லாத ஒருவர் இந்த உலகத்தில் சில காலம் மட்டுமே வாழ முடியும்.

பாவம்,புண்ணியம் இந்த இரண்டும் கலந்த மனிதர்களுக்கு மட்டுமே இந்த உலகத்தில் இடம் உண்டு.

முழுவதும் பாவம் கலவாத புண்ணியவான்களுக்கு இந்த உலகத்தில் இடம் இல்லை.

முழுவதும் பாவம் நிறைந்த மனிதனுக்கும் இந்த உலகத்தில் இடம் இல்லை.

-

பாவம் சிறிதும் இல்லாத புண்ணியவானான ஈஸ்வர நிலையை அடைந்த ஒருவன் நீண்ட காலம் இந்த உலகத்தில் வாழ முடியாது.

-

ஈஸ்வர நிலையை அடைந்தவர் தர்மத்தை காப்பாற்றும் பணியை செய்கிறார்.

தர்மத்தை காத்து அதர்மத்தை அழிக்கிறார்.

மக்களுக்கு போதனை செய்கிறார்.

அதன்பிறகு அவர் சூட்சும உடலுடன் தனக்கு உரிய உலகத்தில் சென்று வாழ்கிறார்.

அவரை பின்பற்றுபவர்கள் தனி மதத்தை உருவாக்குகிறார்கள்.

--

இவ்வாறு இந்தியாவில் பல ஆயிரம் ஆண்டுகளில் பல மதங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன.

------

நிர்குண பிரம்மம்

--------

யோகி புருவமத்தியைக் கடந்து உச்சந்தலையை அடையும்போது பிரபஞ்சம் முழுவதும் ஒடுங்கும் நிலையை அடைகிறார்.அப்போது பிரம்மத்தின் காட்சி கிடைக்கிறது.

பிரம்மத்தில் ஒன்றுபடும்போது முக்தி கிடைக்கிறது.

-

ஸ்ரீகிருஷ்ணர் இந்த இரண்டு நிலைகளையும் தன்னுடையது என்று கூறுகிறார்.

பிரம்மத்தை அடைபவனும் என்னையே அடைகிறான்.

சகுண பிரம்மத்தை அடைபவனும் தன்னையே அடைகிறான்.

இது எப்படி?

 

அவதாரபருஷர்களால் பல நிலைகளை அடைய முடியும்.

அவர்களால் உருவமற்ற நிலையை (பிரம்மம்) அடைய முடியும்.

அதிலிருந்து கீழிறங்கி சகுணபிரம்மம்(ஈஸ்வர ஸ்வபாவத்தை) அடைய முடியும்.

அதிலிருந்து கீழிறங்கி தேவன்-தேவி என்ற நிலையில் இருவராகவும்

இன்னும் அதிலிருந்து கீழிறங்கி மனிதனாகவும் வரமுடியும்.

இவ்வாறு எல்லா நிலைகளையும் அவர்கள் அடைவதால் அனைத்தும் தன்னுடையதே என்று கூறமுடியும்.

-

பிரம்மத்திலிருந்து இந்த பிரபஞ்சம் வெளிப்படுகிறது மீண்டும் பிரம்மத்தில் ஒடுங்குகிறது.

பிரம்மத்தில் ஒருவர் நிலைபெறும்போது, தானே பிரபஞ்சமாக வெளிபடுவதாக உணர்கிறார்.

மேல் உலகத்தில் உள்ள தேவர்கள் அனைவரும் நானே, பூமியில் உள்ள மனிதர்கள் அனைவரும் நானே. விலங்குகள் அனைவரும் நானே.

சந்திர சூரியர்கள்,கிரகங்கள் அனைத்தும் நானே. சகலமும் நானே என்று உணர்கிறார்கள்.

-

ஸ்ரீகிருஷ்ணர் இந்த உயர்ந்த நிலையில் இருக்கிறார்.

அவரே பிரம்மமாகவும் இருக்கிறார்.

அவரே சகுண பிரம்மமாகவும் இருக்கிறார்.

அவரே உயிர்களாகவும் உலகங்களாகவும் ஆகியிருக்கிறார்.

-

இந்த உயர்ந்த நிலையை யாரெல்லாம் அடைகிறார்களோ அவர்களும் இப்படியே கூறுவார்கள்.

-

சிவபெருமானே பிரம்மமாக இருக்கிறார்

அவரே சகுண பிரம்மமாக இருக்கிறார்

அவரே உயிர்களாகவும் உலகமாகவும் ஆகியிருக்கிறார்.

-

காளியே பிரம்மமாக இருக்கிறார்

அவரே சகுண பிரம்மமாக இருக்கிறார்

அவரே உயிர்களாகவும் உலகமாகவும் ஆகியிருக்கிறார்.

-

ஒவ்வொரு மதத்தின் இஷ்ட தெய்வமும் இதேபோன்றவர்களே...

-

இறைவன் உருவமற்றவராக பிரம்மமாக இருக்கும்போது. அனைத்து உருவங்களும் ஒடுங்கிவிடுகிறது. இந்த பிரபஞ்சமே ஒடுங்கிவிடுகிறது.

எனவே எல்லா மதங்கள் கூறும் அறுதி முடிவு ஒன்றுதான். உருவமற்ற நிலை.

-

சமுண பிரம்மம் அல்லது ஈஸ்வர நிலை என்று வரும்போது. அந்த நிலையில் ஒவ்வொரு இஷ்ட தெய்வத்திற்கும் ஒரு உருவம் இருக்கிறது. அவர்கள் வாழும் உலகங்களும் இருக்கின்றன.

ஆனால் ஈஸ்வர ஸ்வபாவம் என்பது ஒன்றுதான். பல உருவங்கள் இருந்தாலும் நிலை ஒன்றுதான்.

இந்த உலகத்தை படைத்து.காத்து.அழிப்பது எங்கள் இறைவனே என்றுதான் எல்லோரும் கூறுகிறார்கள்.

தாய்மை ஒன்றுதான் ஆனால் தாய்கள் பல

அதேபோல ஈஸ்வர ஸ்வபாவம் ஒன்றுதான் அந்த நிலையை அடைந்தவர்கள் பலர்

ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒரு மதத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

 -

ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் தெய்வம்தான் உயர்ந்தது என்று கூறலாம்.ஆனால் இன்னொரு மதத்தின் தெய்வம் தாழ்ந்தது என்று கூறக்கூடாது. அப்படி கூறுவது உண்மைக்கு புறம்பானது.பொய்யானது.அப்படி கூறுபவர்களை ஆதரிக்கவும்கூடாது.


No comments:

Post a Comment