வகுப்பு-38 நாள்-18-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபுத்தய:।
பரம் பாவமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம்॥ 7.24 ॥
7.24 என்னுடைய அழிவற்ற ஒப்பற்ற மேலான நிலையை
அறியாத அறிவற்றவர்கள், கண்ணுக்கு தென்படாத என்னை, கண்களுக்கு தென்படும் இயல்பை அடைந்தவனாக(மனிதனாக)
எண்ணுகின்றனர்.
-
நாஹம் ப்ரகாஷ: ஸர்வஸ்ய யோகமாயாஸமாவ்ருத:।
மூடோ அயம் நாபிஜாநாதி லோகோ மாமஜமவ்யயம்॥
7.25 ॥
7.25 யோகமாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள நான்
எல்லோருக்கும் தெரிவதில்லை.
இந்த மூட உலகம்(மக்கள்) பிறவாத அழியாத என்னை
அறிவதில்லை
-
வேதாஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந।
பவிஷ்யாணி ச பூதாநி மாம் து வேத ந கஷ்சந॥
7.26 ॥
7.26 அர்ஜுனா, சென்றனவும், இருப்பனவும், வருவனவாவும்
ஆகிய உயிர்களை நான் அறிவேன்.
ஆனால் என்னை யாரும் அறியார்
-
இறைவனுக்கு உருவம் இல்லை.அவர் எல்லையற்றவர்
கண்களால் அவரைக் காண முடியாது.
அதேநேரத்தில் இந்த உலகத்திலுள்ள எல்லா உருவங்களாகவும்,
மனிதர்களாகவும், அனைத்து ஜீவராசிகளாகவும் ஆகியிருப்பது இறைவன்தான்.
உருவமற்றவரே உருவமாகவும் இருக்கிறார்.
அப்படியானால் மாற்றமற்ற இறைவன் மாறிவிட்டாரா?
எல்லையற்ற இறைவன் எல்லைக்கு உட்பட்டுவிட்டாரா?
இல்லை.
அப்படி மாறியிருப்பதாக நாம் காண்பது நமது மயக்கம்.
இதை கிருஷ்ணர் தேவமாயை என்று அழைக்கிறார்.
இந்த மாயையும் இறைவனுடையதுதான்.அவரே இந்த தேவமாயையாகவும்
ஆகியிருக்கிறார்.
சூரியன் காலையில் கிழக்கில் உதித்து பின்பு
மாலையில் மேற்கில் மறைவதைக் காண்கிறோம்.
பூமி அப்படியே இருப்பது போலவும் சூரியன் வானத்தில்
நகர்ந்து செல்வதுபோலவும் காண்கிறோம்.
இதுதான் மாயை
உண்மையில்
சூரியன் மேற்கில் உதிப்பதும் இல்லை. கிழக்கில் மறைவதும் இல்லை.
சூரியன் ஒரே இடத்தில்தான் இருக்கிறது. பூமிதான்
சூரியனைச்சுற்றுகிறது.
ஆனால் பூமியில் வசிப்பவர்கள் பூமி சுற்றுவதை
காண்பதில்லை.பூமி நிலையாக இருப்பதையே காண்கிறார்கள்.
பூமிக்கு மேல ஆகாயத்தில் நின்று பார்த்தால்தான்
உண்மை விளங்கும்
-
அது போல இறைவன் எப்போதும் உருவமற்றவராகவே இருக்கிறார்.ஆனால்
அவரே பல்வேறு உருவங்களாக மாறிவிட்டதாக நாம் காண்கிறோம். இது தேவமாயை.
நாம் நமது ஆத்மாவிடம் செல்லும்போது இறைவன்
மாற்றமில்லாமல் அப்படியே இருக்கிறார் என்பது புரியும்.
-
அப்படியானால் இறைவன் பக்தர்களுக்காக உருவத்தில்
காட்சி கொடுப்பதில்லையா?
பக்தர்களுக்காக உருவத்தில் காட்சி கொடுக்கிறார்.அவர்களுடன்
பேசுகிறார்.
அதே நேரத்தில் அனைத்து மனிதர்களாகவும் இருப்பதும்
அவர்தான்.
-
ஸ்ரீகிருஷ்ணர் பிறவாத அழியாத நிலையில் இருக்கிறார்.அதேநேரம்
மனிதனாகவும் இருக்கிறார்.
துரியோதனன் உட்பட பலரும் அவர் சாதாரண மனிதன்
என்றே நினைத்தார்கள். சில ரிஷிகள் மட்டுமே அவர் மனிதஉடலில் இருந்தாலும் உடல் அற்றவர்
என்பதை உணர்ந்துகொண்டிருந்தனர்
-
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மனம் இருக்கிறது.
அனைவரின் மனமும் மஹத் அல்லது பிரபஞ்ச மனத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இந்த பிரபஞ்ச
மனத்திற்கு வேதம் என்று பெயர்.
இந்த வேதத்தை அறிந்தவர்,பிரபஞ்சத்திலுள்ள உயிர்கள்
அனைத்தையும் அறிந்தவர் ஆகிறார்.
இறைவனிடமிருந்துதான் வேதம் வெிளப்பட்டது. வேதத்தை
அவர் அறிவார்.
ஆனால் இறைவனை யாராலும் அறியமுடியாது?
ஏன்?
முதலில் வேதம் வெளிப்பட்டது, அதன் பிறகு உலகத்திலுள்ள
சூரியன்,சந்திரன்,கிரகங்கள்.மனிதர்கள்,மிருகங்கள் உட்பட அனைத்தும் வெளிப்பட்டன.
நமது மனம் பிரபஞ்ச மனத்தின் ஒரு பகுதி. நமது
மனத்தின் எல்லையை படிப்படியாக விரிவுபடுத்திக்கொண்டே சென்றால் பிரபஞ்ச மனத்தை அடையும்.
அப்படி பிரபஞ்ச மனத்தை அடைந்தவன் பிரபஞ்ச ரகசியத்தை அறிந்தவன் ஆகிறான்.வேததத்தை அறிந்தவன்
ஆகிறான். அப்படி வேதத்தை அறிந்தால்கூட வேதத்திற்கு அப்பால் இருக்கும் இறைவனை அறியமுடியாது.
ஏனென்றால் வேதத்தை கடந்து செல்லும்போது அறியவேண்டிய
மனிதனே இருக்க மாட்டான்.
அங்கே இறைவன் மட்டுமே இருக்கிறார்.
உப்பு பொம்மை கடலின் ஆழத்தை அளக்கச் சென்றது,
கடலில் இறங்கியதும் அதில் கரைந்து ஒன்றாகிவிட்டது. பிறகு யார் வந்து தகவல் சொல்வது?
அதேபோல இறைவனை அறிய நினைக்கு செல்லும் ஒருவன்
முடிவில் இறைவனில் ஒன்றாக கலந்துவிடுகிறான். பிறகு யார்? இறைவனைப்பற்றி சொல்வது?
எனவேதான் இன்றுவரை இறைவனைப்பற்றி யாராலும்
விளக்க முடியவில்லை.
இனிமேலும் யாராலும் விளக்க முடியாது.
No comments:
Post a Comment