வகுப்பு-9 நாள்-27-12-2019
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
லோகே அஸ்மிந் த்விவிதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயாநக।
ஜ்ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம்॥ 3.3
இவ்வுலகில் சாங்கியர்களுக்கு ஞானயோகம் என்றும்,
யோகிகளுக்கு கர்மயோகம் என்றும் இரண்டுவிதமான நன்னெறிகள் என்னால் முன்பே சொல்லப்பட்டிருக்கிறது
-
சாங்கியர்கள் யார்? யோகிகள் யார்?
கபிலர் என்ற ஒரு முனிவர் ஸ்ரீகிருஷ்ணரது காலத்திற்கு முன்பு வாழ்ந்தார்.
அவரது தத்துவம் சாங்கிய தத்துவம் என்று அழைக்கப்பட்டது.
பகவத்கீதையில் இரண்டாவது அத்தியாயத்தின் பெரும்பகுதி கபிலரது சாங்கிய தத்துவத்திலிருந்து எடுக்கப்பட்டதுதான்.
-
சாங்கியர்கள் உலக வாழ்க்கையிலிருந்து விலகி தனிமையில் சென்று தவ வாழ்க்கை மேற்கொண்டார்கள்.
காடுகளில் குடிசைகள் அமைத்து அங்கு கிடைக்கும் உணவுகளை உண்டு,நாள் முழுவதும் தியானத்தில் பொழுதைக் கழித்தார்கள்.
தற்காலத்தில் மடங்கள் இருப்பதுபோன்று அந்த காலத்திலேயே மடங்கள் இருந்திருக்கின்றன.
சாங்கியர்கள் சிறிய கூட்டமாக மடங்களில் வாழ்ந்து வந்தார்கள்
-
சாங்கியர்களும் வேதத்தைதான் பின்பற்றினார்கள்.ஆனால் வேதங்களில் கூறப்பட்டுள்ள யாகங்கள்,பல்வேறு கடமைகள் போன்றவற்றை செய்யவில்லை.அதற்கு மாறாக உபநிடதங்களை மட்டும் ஏற்றுக்கொண்டார்கள்.
-
ஸ்ரீகிருஷ்ணரது காலத்திலேயே சாங்கியர்கள் தனிபிரிவாக சற்று புரட்சிகர சிந்தனை உள்ளவர்களாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.ஆத்மாவை தியானிப்பதிலேயே நாள் முழுவதையும் செலவிட்டார்கள்.
ஸ்ரீகிருஷ்ணரது காலத்தில் முக்தி அடைவதற்காக உலக வாழ்விலிருந்து விடுபட்டு வாழ்ந்தவர்கள் ஞானயோகத்தை பின்பற்றினார்கள்.
அதேபோல பல்வேறு கடமைகளைச் செய்துகொண்டே முக்தியை நோக்கி சென்றவர்கள் கர்மயோகத்தை பின்பற்றினார்கள்.
-
இதில் எந்த பாதை சிறந்தது?
-
அர்ஜுனன் சொல்கிறான்
-
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா புத்திர்ஜநார்தந।
தத்கிம் கர்மணி கோரே மாம் நியோஜயஸி கேஷவ॥ 3.1
ஜனார்தன! கர்மத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்த என்று உங்களால் கருதப்பட்டால் கேசவா
பின்னர் என்னை பயங்கரமான கர்மத்தில் ஏன் ஈடுபடுத்கிறீர்கள்?
-
ஸ்ரீகிருஷ்ணர் ஞானத்தின் உயர்வைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார்.அதை அடைய நினைப்பவர்கள் எல்லா செயல்களையும் விட்டுவிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.அப்படி இருக்கும்போது அதை அடையாமல் கர்மத்தில் ஏன் ஈடுபட வேண்டும்?
-
வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களை சந்திக்கும்போது இதைவிட்டுவிட்டு ஞானத்தைத்தேடி ஏன் செல்லக்கூடாது?
இந்த உலகியல் வாழ்க்கையில் ஏன் மீண்டும் ஈடுபட வேண்டும்.ஏன் இதைத் துறக்கக்கூடாது?
-
ஸ்ரீகிருஷ்ணர் சொல்கிறார்
-
ந கர்மணாமநாரம்பாந்நைஷ்கர்ம்யம் புருஷோ அஷ்நுதே।
ந ச ஸம்ந்யஸநாதேவ ஸித்திம் ஸமதிகச்சதி॥ 3.4
3.4 மனிதன் வேலைகள் எதுவும் செய்யாமல் இருப்பதால் கர்மமற்ற நிலையை (பிரம்மத்தை)அடைவதில்லை. வெறுமனே சந்நியாசம் (கர்மத்தை துறப்பது) பெறுவதால் நிறைநிலையை அடைவதுமில்லை
-
ந ஹி கஷ்சித்க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத்।
கார்யதே ஹ்யவஷ: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்குணை:॥ 3.5
3.5 எப்பொழுதும், கணப்பொழுதேனும்கூட யாரும் கர்மம் செய்யாமல் சும்மா இருப்பதில்லை.
ஏனென்றால் இயற்கையிலிருந்து உதித்த குணங்களால்(சத்வம்,ரஜஸ்,தமஸ்), ஒவ்வொரு உயிரும் தன் வசமின்றி தானாக கர்மம் செய்விக்கப்படுகிறது
-
எல்லோரும் கர்மம் செய்துதான் ஆகவேண்டும். கர்மம் செய்யாமல் யாராலும் ஒரு கணம்கூட இருக்க முடியாது.
இந்த உலகத்தை துறந்து செல்பவர்கள்கூட ஏதாவது ஒரு வேலையை செய்துகொண்டுதான் இருப்பார்கள்.
மடத்தில் வாழ்பவர்கள்கூட எப்பொழுதும் கர்மம் செய்துகொண்டேதான் இருக்கிறார்கள்
பிறருக்கு உபதேசம் செய்வதுகூட கர்மம்தான். இறைவனது புகழை பாடுவதும்,வழிபாடுகள் செய்வதும்,பிரார்த்தனை செய்வதும்கூட கர்மம்தான். தியானம் செய்வதுகூட கர்மம்தான்
கர்மம் செய்யாமல் யாராலும் ஒரு கணம்கூட இருக்க முடியாது.
ஏனென்றால் இயற்கையிலிருந்து உதித்த குணங்கள் காரணமாக தன் விருப்பம் இன்றியே கர்மம் நடக்கிறது.
-
கர்மேந்த்ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்।
இந்த்ரியார்தாந்விமூடாத்மா மித்யாசார: ஸ உச்யதே॥ 3.6
அறிவிலியான எவன் புலன்கள் அனத்தையும் வலுவில் - வெளித்தோற்றத்தில் அடக்கி விட்டு மனதினால் அந்தப் புலன்நுகர் பொருட்களை நினைத்துக் கொண்டிருக்கிறானோ, அவன் பொய் நடத்தயுள்ளவன் - ஆஷாடபூதி எனக் கூறப்படுகிறான்.
எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பவன்கூட ஏதாவது ஒன்றையோ பலவற்றையோ சிந்தித்துக்கொண்டிருப்பான். அந்த சிந்தனையில் சிலரை புகழ்ந்துகொண்டிருப்பான் அல்லது யாரையாவது இகழந்துகொண்டிருப்பான்.இதுவும் கர்மம்தான்
ஒவ்வொரு கர்மமும் ஒரு எதிர் கர்மத்தை உருவாக்குகிறது.அதாவது ஒவ்வொரு செயலும் அதற்கு சமமான ஒரு எதிர்ச்செயலை உருவாக்குகிறது.
மனதால் ஒருவரை நிந்திப்பதால்கூட புதிய கர்மம் உருவாகிறது.மனதால் ஒருவரை புகழ்வதாலும் புதிய கர்மம் உருவாகிறது.
மனதால் நினைக்கும் ஒவ்வொரு எண்ணத்திற்கும்கூட பிரதிபலன் உண்டு.
-
எனவே எல்லோரும் எப்போதும் கர்மம் செய்துகொண்டேதான் இருக்கிறோம்.
இந்த உலகத்தைவிட்டு சென்றால் விடுதலை பெற்றுவிடலாம் என்று நினைப்பது தவறு.
-
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:।
ஷரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்த்யேதகர்மண:॥ 3.8
3.8 நீ நித்திய கர்மத்தை செய். ஏனென்றால் கர்மம் செய்யாமல் இருப்பதைவிட கர்மம் செய்வது சிறந்தது.
கர்மம் செய்யாதிருந்தால் உன்னுடைய உடலைகூட பாதுகாக்க முடியாது.
-
நித்திய கர்மத்தை செய்வது நல்லது.
புண்ணியத்தை தரக்கூடிய கர்மத்தை செய்வது நல்லது
வேலை எதுவும் செய்யாமல் இருந்தால் உடலைக்கூட காப்பாற்ற முடியாது.
வேலை செய்யாதவர்களுக்கு உணவு கொடுக்க யாரும் முன்வரமாட்டார்கள்.
No comments:
Post a Comment