Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 44

வகுப்பு-44  நாள்-26-2-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

உயர்ந்த கருத்துக்களை சிலரால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அது ஏன்?

-

1. தனிமையான,அமைதியான வாழ்க்கை மிகவும் அவசியம்.

---

இன்றைய கால சூழ்நிலையில் மனிதனுக்கு அதிகம் தேவைகள் இருக்கின்றன.

எத்தனையோ புதுப்புது கருவிகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.அவைகளை வாஙக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கான அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. எனவே நாள் முழுவதும் உழைப்பதற்கே நேரம் போதவில்லை.

தனிமையான வாழ்க்கை என்பது உலகத்தைவிட்டு விலகி செல்லும் வாழ்க்கை அல்ல. இந்த உலகியில் நாட்டத்திலிருந்து ஒதுங்கியிருப்பது.ஓய்வாக இருப்பது. வீட்டிலே இருந்தாலும் ஓய்வாக இருப்பது.

இப்படிப்பட்ட வாழ்க்கை பெரும்பாலானவர்களுக்கு வயதானபிறகே வருகிறது.

வயதானபிறகு சிலருக்கு தனிமை வாழ்க்கை அமைகிறது

-

2. அமைதியான குடும்பம் தேவை

---

சிலருக்கு தனியான வாழ்க்கை கிடைத்தாலும்,அமைதியான குடும்பம் கிடைப்பதில்லை. குடும்பத்தில் எப்போதும் ஏதாவது குழப்பம் இருந்துகொண்டே இருக்கிறது. இந்த சூழ்நிலையில் உயர்ந்த விசயங்களை சிந்திப்பதற்கு இயலாது.

எனவே முதலில் குடும்பத்தை அமைதிப்படுத்த வேண்டும்.

--

3.நம்பிக்கை வேண்டும்

--

ஆத்மா என்ற ஒன்று இருப்பதாக ரிஷிகள் கூறியிருக்கிறார்கள். அதை நம்பவேண்டும்.

அதை அடைவது எப்படி? அதன் இயல்புகள் எப்படிப்பட்டவளை போன்றவற்றை பின்பு தெரிந்துகொள்ளலாம்.

ஆனால் நமது சாஸ்திரங்கள் கூறிய ஆன்மாவின்மீது நம்பிக்கை இருக்கவேண்டும்.

அந்த நம்பிக்கை இல்லாவிட்டால்  முற்றிலும் குழப்பமான மனநிலையே ஏற்படும்.

புதிய கருத்துக்களை புரிந்துகொள்ள முடியாது.

இறைவன் என்ற ஒருவர் உண்டா இல்லையா என்பதில்கூட சந்தேகம் ஏற்படலாம். ஆனால் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஆன்மா இருக்கிறது என்பதை எல்லா சாஸ்திரங்களும் வலியுறுத்திக்கூறுகிறார்கள். எல்லா மகான்களும் அதைப்பற்றி பேசுகிறார்கள். எனவே அதை நம்பவேண்டும்.

-

4.மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபட வேண்டும்.

--

காலையில் எழுந்ததும் யார் முகத்தில் விழித்தால் நல்லது? நமது கைகளை திறந்து பார்க் வேண்டுமா? அல்லது இறைவனின் படங்களை பார்க்க வேண்டுமா? என்று பலர் கேட்கிறார்கள்.

பூனை குறுக்கே சென்றால் என்ன செய்வது? அமாவையில் முடிவெட்டினால் பாவம் வருமா?

இடது கையால் தண்ணீர் குடித்தால் இறைவன் தண்டிப்பாரா?

இப்படி

காலை முதல் இரவு மனம் இவைகளில் மாட்டிக்கொண்டிருக்கிறது.

நாமது நம்பிக்கை எதிராக நிகழும்போது அதிருப்தி ஏற்படுகிறது.

சிலருக்கு காலை முதல் இரவு வரை எல்லாமே நேர் எதிராகவே நடக்கிறது.

இதனால் மனதில் குழப்பமும்,அமைதியின்மையும் ஏற்படுகிறது

 

திறந்த மனத்தோடு வாழ பழகவேண்டும்.

பிறருக்கு நன்மை செய்வது புண்ணியம்,பிறருக்கு தீமை செய்வது பாவம்.

இதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு மற்ற விஷயங்களை மனத்திலிருந்து அகற்றிவிட வேண்டும்.

ஆன்மீகத்தில் முன்னேற வேண்டுமானால் மனத்தில் சேர்ந்துள்ள அனைத்து எண்ணங்களையும் படிப்படியாக அகற்ற வேண்டிவரும்.

பல்வேறு நம்பிக்கைகள், பல்வேறு மூட நம்பிக்கைகள் எல்லாவற்றையும் மனம் மறக்க வேண்டும்.

குழந்தையாக இருக்கும்போது இருந்த மனம் மீண்டும் வரவேண்டும்.

-

 

நேரம் கிடைக்கும்போது இன்னும் விரிவாகப்பார்க்கலாம்...

-

இன்றைய பகவத்கீதை பாடம்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

ஸர்வபூதாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம்।

கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ விஸ்ருஜாம்யஹம்॥ 9.7 ॥

 

9.7 குந்தியின் புதல்வா, எல்லா பூதங்களும் கல்ப முடிவில் என்னுடைய பிரகிருதியை அடைகின்றன.

மறுபடியும் கல்பம் துவங்கும்போது அவைகளை நான் தோற்றுவிக்கிறேன்.

-

ப்ரக்ருதிம் ஸ்வாமவஷ்டப்ய விஸ்ருஜாமி புந: புந:।

பூதக்ராமமிமம் க்ருத்ஸ்நமவஷம் ப்ரக்ருதேர்வஷாத்॥ 9.8 ॥

 

 9.8 என்னுடைய பிரகிருதியை அருள் உடையதாகச்செய்து,

தன்வசமில்லாது பிரகிருதியின் வசத்திலிருக்கின்ற இந்த முழு உயிர்வகைகளையும்

திரும்பத்திரும்ப படைக்கிறேன்.

-

மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம்।

ஹேதுநாநேந கௌந்தேய ஜகத்விபரிவர்ததே॥ 9.10 ॥

 

9.10 குந்தியின் மகனே, என்னால் கண்காணிக்கப்பெற்று பிரகிருதியானது.

அசையும், அசையாதவைகளை (உயிரினங்கள்,உலகங்கள் போன்றவை) சிருஷ்டிக்கிறது.

இதன் காரணத்தினால் பிரபஞ்சமானது சுழல்கிறது.

-

பிரம்மம்-பிரகிருதி என்று இரண்டு தத்துவங்கள் இருக்கின்றன

இவைகளைப்பற்றி ஓரளவு படித்து தெரிந்துகொள்ள வேண்டும்.

-

பிரம்மத்தின் இயல்புகள் பற்றி பலமுறை படித்திருக்கிறோம்.

அது எங்கும் நிறைந்தது. உருவம் இல்லாதது.எல்லையற்ற ஆனந்தம்,எப்போதும் நிலைத்திருப்பது.

-

இந்த பிரம்மத்தையே நாம் உருவமற்ற,குணங்கள் அற்ற, இயக்கம் அற்ற, நிர்குணமான இறைவன் என்கிறோம்.

இதனுடன் பிரகிருதியும் சேர்ந்தே உள்ளது.

 

பிரகிருதியின் இயல்பு என்ன?

பிரகிருதி கல்பத்தின் துவக்கத்தில் இயங்க ஆரம்பிக்கிறது.

அதிலிருந்து  உலகம் உருவாக ஆரம்பிக்கிறது.

பல கிரகங்கள்,சூரியர்கள்,சந்திரர்கள்,தேவர்கள்,மனிதர்கள்,விலங்குகள் எல்லாம் தோன்றுகின்றன.

கல்பத்தின் முடிவில் பிரபஞ்சம் படிப்படியாக சுருங்குகிறது.

சூரியர்கள்,சந்திரன்கள்,கிரகங்கள்.மனிதர்கள்,தேவர்கள் எல்லாம் பழையபடி பிரகிருதியில் ஒடுங்குகிறது.

மறுபடியும் அடுத்த கல்பத்தில் இதேபோல வெளிவருகிறது.

இவ்வாறு மாறிமாறி நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது.

இந்த உலகம் அல்லது இயற்கை என்று நாம் சொல்வது பிரகிருதியின் உருமாற்றமே.

இந்த உலகத்தில் உள்ள ஜடப்பொருட்கள், சக்திகள் அனைத்தும் பிரகிருதியின் வெளிப்பாடுகள்தான்

-

இந்த நிகழ்வுகள் இப்படித்தான் நடக்கின்றன என்பது நமக்கு எப்படி தெரியும்?

பிரம்மத்தை நோக்கி செல்பவர்கள் இந்த நிகழ்வுகளை அனுவத்தில் காண்கிறார்கள்.

பிரம்மயோனி என்ற ஒன்று இருக்கிறது. அங்கிருந்து பல கிரகங்கள் வெளி வருவதை ஸ்ரீராமகிருஷ்ணர் கண்டார். சுவாமி விவேகானந்தருக்கும் இந்த காட்சி கிடைத்தது.

அது முக்கோண வடிவுடையது. ஒளி வடிவில் ஒளிர்ந்துகொண்டிருந்தது.

தற்காலத்தில் வெள்ளைத்துளை என்று விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள்.

இந்த பிரம்மயோனியை  யந்திரமாகச் செய்து வழிபாடுகள் நடத்தும் பழக்கம் இருக்கிறது.

-

ஒரு கல்பத்தின் ஆயுள் பலகோடி ஆண்டுகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

பிரம்மத்தை நோக்கி செல்லும் ஒரு யோகி  பலகோடி ஆண்டுகள் வாழ்க்கையை மிகவிரைவில் அனுபவித்து கல்பத்தின் ஒடுக்கநிலையை அடைகிறார்.அவரது உடல் பிரகிருதியில் ஒடுங்குகிறது. பிரம்மஞானம் ஏற்படுகிறது.

-

பிரம்மம் எப்போதும் ஒரே மாதிரி அசைவற்ற நிலையில் இயக்கமற்ற நிலையில் ஆனந்த நிலையில் அப்படியே இருக்கிறது.

பிரகிருதிதான் பிரம்மத்தின் முன்னிலையில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு உயிரிலும் பிரம்மம் பிரதிபலிக்கிறது.

மிருகங்களிடம் குறைவாகவும், ரிஷிகளிடம் அதிகமாகவும் பிரதிபலிக்கிறது.

பிரகிருதியின் செயல்பாடுகளிலிருந்து விலகி நிற்பவர்களிடம் பிரம்மம் அதிகமாக பிரதிபலிக்கிறது.

-

பிரம்மம் உயிர்களிடம் பிரதிபலிக்கும்போது அதை ஜீவாத்மா என்கிறோம்.

 

பிரகிருதியிலிருந்து தோன்றுபவை அனைத்தும் ஜடம். உணர்வற்றது.

உயிர்களுடைய உணர்வு எதனுடையது ஜீவாத்மாவினுடையது

பிரகிருதி இந்த ஜட உலகை படைக்கிறது. ஜீவாத்மா அதை அனுபவிக்கிறது.

இன்ப துன்ப அனுபவங்களை அனுபவிப்பது ஜீவாத்மா.

-

இந்த உலகத்திலுள் ஜீவாத்மாக்கள் எப்போதும் பிரகிருதியின் வசத்திலேயே இருக்கிறது.

அது எப்போது தன் வசத்தில் அதாவது தனது உண்மை இயல்பான பிரம்மத்தின் வசத்தில் வருகிதோ அப்போது பிரகிருதியிலிருந்து விடுபட்டு முக்தி அடைகிறது.

-

ஒரு மனிதன் இந்த உலகத்திலுள்ள இன்பங்கள் எதுவும் வேண்டாம், இறைவன் மட்டுமே வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக வைராக்கியமாக இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

பிரகிருதியின் வெளிப்பாடான இயற்கை சக்திகள் அவனை பல வழிகளில் சோதிக்கிறது.

பல்வேறு ஆசைகளை அனுபவிக்கும்படி தூண்டுகிறது.

உடல் நோய்களை உருவாக்குகிறது.

மனத்தை வலுவிழக்கும்படி செய்கிறது.

தனிமைப்படுத்துகிறது. படிப்படியான பல துன்பங்களையும் தாண்டி, எந்த இன்பத்திற்கும் ஆசைப்படாமல் இருந்தால் அவன் பிரகிருதியின் வசத்திலிருந்து விடுபட்டு பிரம்மத்தை அடைகிறான்.


No comments:

Post a Comment