வகுப்பு-24 நாள்-22-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு:।
ந கர்மபலஸம்யோகம் ஸ்வபாவஸ்து ப்ரவர்ததே॥
5.14 ॥
5.14 இறைவன் உலகின் செயலுக்கு கர்த்தா அல்ல,
கர்மங்களை செய்வதில்லை, கர்ம பலனோடு பற்று
வைப்பதையும் உண்டுபண்ணவில்லை. ஸ்வபாவத்தால் (சத்வ,ரஜஸ்,தமஸ் என்ற முக்குணத்தால்
உதித்த இயற்கையால்) தான் இங்ஙனம் நடக்கிறது
நாதத்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு:।
அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ:॥
5.15 ॥
5.15 எங்கும் நிறைந்துள்ள (பிரம்மம்) ஒருவனுடைய பாபத்தை பெற்றுக்கொள்வதில்லை. புண்ணியத்தையும்
வாங்கிக்கொள்ளவதில்லை. அறியாமையால் அறிவு மூடப்பட்டுள்ளது. ஆதலால் உயிர்கள் மயக்கமடைகின்றன.
-
புருஷன்-பிரகிருதி என்று இரண்டு தத்துவம் இருக்கிறது.
புருஷனை வேதாந்திகள் பிரம்மம் என்கிறார்கள்
பிரம்மத்தின் இயல்பு என்ன?
பிரம்மம் உருவமற்றது.அதற்கு உடல் இல்லை.அது
எங்கும் நிறைந்தது.ஆதி அந்தம் இல்லாதது.
ஆனால் பிரம்மம் மட்டும் தனியாக இருப்பதில்லை.அதனுடன்
பிரகிருதியும் சேர்ந்தே இருக்கிறது.
பிரகிருதியின் இயல்பு என்ன?
பிருகிருதி என்பது வெளிப்பட்டு,இயங்கிக்கொண்டிருக்கும்
இந்த அண்ட சராசரங்கள்,
அதிலுள்ள உயிர்கள் அனைத்தும் சேர்ந்தது.
மூன்று குணங்கள் அல்லது தன்மைகளால் ஆனது பிரகிருதி.
தமஸ்-கவரும் நிலை
ரஜஸ்-விலக்கும் நிலை
சத்வம்-சமநிலை
-
இந்த மூன்றும் இயங்காத நிலையை அடையும்போது
அவ்யக்தம் என்ற மூலநிலையை அடைகிறது.
ஒரு மரத்தின் விதை எப்படி இயங்காத நிலையில்
இருக்கிறதோ, அதேபோல
இந்த உலகம் ஒரு நாள் விதை நிலைக்கு செல்கிறது.அப்போது
இந்த உலகம் ஒடுங்கிய நிலையில் இருக்கும்.பிரகிருதியின் அந்த நிலைக்கு அவ்யக்தம் என்று
பெயர்
பின்பு படிப்படியாக மீண்டும் பரிணமித்து இந்த
உலகம் உருவாகிறது.
-
1.அவ்யக்தம்-பிரகிருதியின் இயங்காத நிலை அல்லது
ஒடுங்கியநிலை
சத்வம்,ரஜஸ்,தமஸ் மூன்றும் மூலநிலையில் இருக்கும்
நிலை
2.மஹத்-
சத்வம்,ரஜஸ்,தமஸ் மூக்றும் இயங்க ஆரம்பிக்கிறது
.பிரபஞ்ச மனம் செயல்பட ஆரம்பிக்கிறது.உறுதி, அறிவு, ஆற்றல், பண்புகள் இவையெல்லாம் மஹத்தின்
தன்மையே. மகிழ்ச்சி, வேதனை, மயக்கம் (மாயை) ஆகியவை மஹத் எனப்படும் புத்தியோடு தொடர்புடையவை.
3.அஹங்காரம் தோன்ற ஆரம்பிக்கிறது.
அகம் என்றால் நான் என்று பொருள், கார என்றால்
தன்மை என்று பொருள். ஆக, அகங்காரம் என்பது எல்லா உயிரினங்களிலும் உள்ள நான் என்ற சுய
உணர்வைக் குறிக்கிறது
4.மனம் உருவாகிறது.
எண்ணம், சிந்தனை ஆகியவற்றை உருவாக்குவதாகவும்,
அவற்றின் தொகுப்பாகவும் இந்த மனம் உள்ளது.
5 – 9. பஞ்ச ஞானேந்திரியங்கள் உருவாகின்றன.
கண் (சக்ஷு), கேட்பதற்குப் பயன்படும் செவி
(ஸ்ரோத்ரம்), முகர்வதற்குப் பயன்படும் மூக்கு (க்ராண), சுவை அறியப் பயன்படும் நாக்கு
(ரஸனா), தொடு உணர்வை அறியப் பயன்படும் தோல் (த்வக்) ஆகியவை
10 – 14. பஞ்ச கர்மேந்திரியங்கள் தோன்றுகின்றன
பேச உதவும் வாய் (வாக்), பொருள்களைக் கையாள
உதவும் கை (பாணி), நடமாட உதவும் கால் (பாத), மலஜலம் வெளியேற்ற உதவும் அங்கம் (பாயு),
உற்பத்திக் கருவி அதாவது பிறப்புறுப்பு (உபஸ்த) ஆகியவை
15 - 19. பஞ்ச தன்மாத்ரா தோன்றுகிறது சப்தம்
(ஓசை), ஸ்பரிசம் (ஊறு அல்லது தொடு உணர்வு), ரூபம் (வடிவம்), ரஸம் (சுவை), கந்தம் (வாசனை)
20 – 24. பஞ்ச மகாபூதங்கள் தோன்றுகின்றன-
தூல
பிரபஞ்சம் (நிலம்,நீர்,காற்று,வெப்பம்,ஆகாயம்)
-
பிரகிருதியின் இந்த பரிணாமம் மிகவேகமாக நடைபெறுகிறது.
உலகம் ஒடுங்க ஆரம்பிக்கும்போது மிக வேகமாக
ஒடுக்க நிலையை அடைகிறது.
-
பிரம்மம் செயல்புரிவதில்லை. இந்த உலகத்தின்
செயல்களுக்கு காரணமாக இருப்பதில்லை.
அப்படியென்றால் எது செயல்படுகிறது?
பிரகிருதிதான் செயல்படுகிறது.
ஆனால் பிரகிருதியால் தனியாக செயல்பட முடியாது.
பிரம்மத்தின் முன்னிலையில் பிரகிருதி செயல்படுகிறது.
நமது உடலை எடுத்துக்கொள்வோம். இந்த உடல் செயல்புரிந்துகொண்டே
இருக்கிறது.
உடலிலிருந்து ஆன்மா பிரிந்துவிட்டால்.உடலால்
செயல்பட முடியாது.
உடலுக்குள் ஆன்மா எங்கே இருக்கிறது என்று தேடியால்
கண்டுபிடிக்க முடியாது.
ஆனால் அந்த ஒன்று விலகியதும் செயல் நின்றுவிடுகிறது.
அதேபோல பிரம்மம் இருப்பதால்தான் பிரகிருதியால்
செயல்பட முடிகிறது.
பிரம்மம் இருப்பதால்தான் இந்த உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.
-
பிரகிருதி என்பது இந்த இயங்கிக்கொண்டிருக்கும்
உலகம் என்று பார்த்தோம்.
நமது உடல் இயங்குவதற்கு ஆன்மா தேவைப்படுவதுபோல,இந்த
உலகம் இயங்க பிரம்மம் தேவை.
ஆனால் பிரம்மம் செயல்புரிவதில்லை.
செயல்கள் அனைத்தும் பிரகிருதியிலிருந்தே வருகின்றன.
-
பிரகிருதி இயக்கம் இல்லாமல் ஒடுங்கி நிற்கும்போதும்
பிரம்மம் இருக்கிறது
முழு இயக்கத்தோடு இருக்கும்போதும் பிரம்மம்
இருக்கிறது.
இயக்கம் நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது பிரம்மம்
மறைக்கப்பட்டுள்ளது.
எப்படி நமது உடல் இயங்கிக்கொண்டிருக்கும்போது
ஆன்மா மறைக்கப்பட்டுள்ளதோ அதேபோல.
எனவே பிரம்மத்தை அடைய வேண்டுமானால், பிரகிருதியின்
அவ்யக்தத நிலை அதாவது இயங்காத நிலையை அடைய வேண்டும்.அப்போது பிரம்மத்தின் காட்சி கிடைக்கிறது.
-
பிரம்மத்தையே நாம் இறைவன் என்று அழைக்கிறோம்.
நாம் ஏன் பிரம்மத்தை உணர முடியவில்லை.
நாம் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறோம்.இயக்கமற்ற
நிலையை அடையும்போது பிரம்மத்தை உணர முடியும்.
-
பிரம்மம் என்பது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.ஆனாலும்
அதை நம்மால் காண முடிவதில்லை.ஏன்?
ஒரு சினிமா திரையரங்கில் வெள்ளை திரை கட்டப்பட்டுள்ளது.
முதலில் அதை நாம் காண்கிறோம். சினிமா ஆரம்பித்தபிறகு அதில் வரும் கதாபாத்திரத்தின்மீது
மனம் சென்றுவிடுகிறது. அப்போது வெள்ளைத்திரையை மட்டும் யாராலும் பார்க்க முடியாது.
திரை அங்கேதான் இருக்கிறது. ஆனால் அதன்மீது
பல காட்சிகள் ஓடிக்கொண்டிருப்பதால் அதை காண முடிவதில்லை.
-
அதேபோல இந்த உலகம் பிரம்மத்தின்மீது இயங்கிக்கொண்டிருக்கிறது.உலக
இயக்கம் நிற்கும்போது பிரம்மத்தின் காட்சி கிடைக்கிறது.அதாவது இறைக்காட்சி கிடைக்கிறது.
No comments:
Post a Comment