Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-29

வகுப்பு-29  நாள்-31-1-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

நாத்யஷ்நதஸ்து யோகோ அஸ்தி ந சைகாந்தமநஷ்நத:।

ந சாதிஸ்வப்நஷீலஸ்ய ஜாக்ரதோ நைவ சார்ஜுந॥ 6.16 ॥

 

6.16 அர்ஜுனா, அதிகமாக உண்பவனுக்கு யோகம் கைக்கூடுவதில்லை.

ஒன்றுமே உண்ணாதவனுக்கும் யோகம் கைக்கூடுவதில்லை.

அதிகநேரம் தூங்குபவனுக்கும் அதிகமாக விழித்திருப்பவனுக்கும் யோகம் இல்லை

-

யோகம் என்பது உடலை இயக்கமற்ற நிலைக்கு கொண்டு செல்லுதல்.

உடல் இயக்கமற்ற நிலைக்கு செல்ல வேண்டுமானால் மனம் அமைதியாக இருக்க வேண்டும்.

மனம் அமைதியாக இருக்க வேண்டுமானால் பிராணன் அமைதியடைய வேண்டும்.

-

 ஜீரணமாவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகளை யோகி உண்ணக்கூடாது.

அப்படி உண்டால் பிராணன் அமைதியடைவதற்கு அதிக நேரம் ஆகும்.

பிராணனை தனக்குள்ளேயே கட்டுப்படுத்த முடியாது.

 

தியானிக்கும்போது உடல் உறுப்புகளின் செயல்பாட்டை நிறுத்துகிறோம்.

உணவு செரிமானம் நடந்துகொண்டே இருந்தால் உடல் இயக்கத்தை நிறுத்த முடியாது.

 

உணவு இல்லாமல் இருந்தால் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.வயிற்றில் அமிலங்கள் சுரக்கத்தொடங்கிவிடும்.

அந்த நேரத்தில் உடல் இயக்கத்தை நிறுத்தினால் வயிற்றில் அதிக அமிலம் சேர்ந்து வயிறு தொடர்பான பிரச்சினைகள் வரலாம்.

 

ஒருவேளை நன்றாக உணவு உண்டபின் ஏதோ ஒரு உபாயத்தால் உடலை இயக்கமற்ற நிலைக்கு கொண்டு சென்றால் என்னவாகும்?

உடலில் தேங்கியுள்ள உணவுகள் செரிக்காமல் விஷத்தன்மையை அடையும். அதனால் உடல்நலம் பாதிக்கப்படும்

-

தியானிப்பதற்கு எது சரியான நேரம்?

உணவு நன்றாக ஜீரணித்தபின்- பசி எடுப்பதற்கு முன், இந்த இரண்டிற்கும் இடையே உள்ள இடைவெளியே சரியான நேரம்

யோகி குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஐந்துமுறை தியானிக்க வேண்டும்.

காலையில் 5 முதல் 6 மணி வரை

மதியம் 11.30 மணி முதல் 12.30 மணிவரை

மாலை 4 முதல் 5 வரை

அடுத்து 7 முதல் 8 வரை

இரவு 12 மணி முதல் 2 மணிவரை

சரியான நேரங்களாக இருக்கலாம்

-

யோகிக்கு தூக்கம் வராது. சில வேளைகளில் கனவு வரலாம்.கனவு மூலமாக சில பாடங்களை கற்றுக்கொள்ள முடியும். சில அனுபவங்கள் கிடைக்கும்.

தூக்கம் வராவிட்டாலும் அவ்வப்போது படுத்திருக்க வேண்டும்.இதனால் உடல் முழுவதும் ரத்தஓட்டம் சீராக செல்கிறது.

தியானிக்கும்போது ரத்தஓட்டத்தை நிறுத்துகிறோம். தொடர்ந்து ரத்த ஓட்டத்தை நிறுத்தினால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்..உலகத்தில் வாழ வேண்டுமானால் நடு நிலையை பின்பற்ற வேண்டும்.

எனவே தியானம், வேலை, ஓய்வு போன்றவை மாறிமாறி இருக்க வேண்டும்.

-

அதிக நேரம் விழித்திருப்பவனுக்கும் யோகம் கைக்கூடாது

ஏன்?

இந்த உலகம் என்பது மனத்தின் படைப்பு.இதில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தால் மேலும் மேலும் அதிகமான சிக்கலில் மாட்டிக்கொள்வோம். தியானத்திற்கு இடையே சிறிது நேரம் மட்டுமே விழித்திருக்க வேண்டும்.

உலகியல் மனிதர்கள் ஒரு நாளைக்கு பதினாறு மணிநேரம் விழித்திருக்கிறார்கள். எட்டு மணிநேரம் தூங்குகிறார்கள்.

யோகிகள் மாலை 6 மணி முதல் பகல் 6 மணிவரை தியானத்தில் ஈடுபட்டிருப்பார்கள்.அதன்பின் பகலில் ஓய்விலும் சிறிதுநேரம் விழித்தும் இருப்பார்கள்.

 யோகிகளைப் பார்க்கும் உலகியல் மக்கள்  பகலில் சோம்பேரியாக தூங்கிக்கொண்டிடுப்பதாக  நினைப்பார்கள்.யோகிகள் தூங்குவதில்லை. ஓய்வில் இருப்பார்கள்.

-

யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு।

யுக்தஸ்வப்நாவபோதஸ்ய யோகோ பவதி து:கஹா॥ 6.17 ॥

 

6.17 உண்பதிலும், உடல்வேலைகள் செய்வதிலும் அளவுடன் இருப்பவனுக்கு,

கர்மங்களை செய்வதில் யுக்தனாக இருப்பவனுக்கு, உறங்குவதிலும், விழித்திருப்பதிலும் முறையாக இருப்பவனுக்கு யோகமானது, துன்பத்தை போக்குவதாக அமைகிறது

-

அதிகமான உடல்வேலைகளை யோகி செய்யக்கூடாது. உடல் வேலை செய்யாமலும் இருக்கக்கூடாது.

அதிகமான உடல்வேலைகளைச்செய்தால் அதற்கு ஈடான அளவு உணவு உண்ண வேண்டும்.

பிராணசக்தி அதிகமாக செலவழியும் எனவே மனத்தை அடக்க முடியாது

மனத்தை அடக்க முடியாமல்போனால் மூளை அதிக அளவு சூடாகும்.

-

யுக்தன் என்பவன் யார்?

 

யதா விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்டதே।

நி:ஸ்ப்ருஹ: ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா॥ 6.18 ॥

 

6.18 எப்பொழுது. நன்றாக அடக்கப்பட்ட சித்தம் தன்னிலேயே நிலைபெற்றிருக்கிறதோ,

எப்பொழுது எல்லா கர்மங்களிலிருந்தும் ஆசை நீங்கியவனாகிறானோ,

அப்பொழுது யுக்தன் என்று சொல்லப்படுகிறான்

-

சித்தம் என்பது என்ன? மூளை

மூளையில்தான் எல்லா எண்ணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மூளையிலிருந்துதான் பல்வேறு எண்ணங்கள் தோன்றுகின்றன.

ஏதாவது வேலை செய்யும்போது அதனால் எனக்கு ஏதாவது லாபம் கிடைக்குமா என்றுதான் பொதுவாக மக்கள் நினைப்பார்கள்.லாபம் இல்லாத வேலையை யாரும் செய்ய முன் வருவதில்லை.

யோகியும் வேலை செய்கிறான். ஆன்மீகத்தைப்பற்றி பேசுவதும் வேலைதான்,உலகிலுள்ள மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதும் வேலைதான்.

றர் நன்றாக வாழவேண்டும் என்று நினைப்பதில் தனக்கு என்ன லாபம் என்று யோகி நினைப்பதில்லை.

 

கர்மத்திலுள்ள ஆசை நீங்கிவிட்டால் அவன் யுக்தன் என்று அழைக்கப்படுகிறான்.

இந்த நிலையை அடைவது அவ்வளவு எளிதல்ல.

யோகம் பயிலும் பலரும் பல்வேறு ஆசைகளில் மாட்டிக்கொள்வார்கள். யோகி நினைத்தால் சொர்க்கத்தில் அதிக நாட்கள் வாழ முடியும். அல்லது இன்னும் உயர்ந்த உலகங்களுக்கு சென்று நீண்ட நாட்கள் வாழ முடியும்.

அவைகளும் ஆசைதான். அந்த ஆசைகள் இருந்தால்கூட பிரம்மத்தை அடைய முடியாது. மீண்டும் பிறக்க வேண்டிய சூழல் ஏற்படும்.


No comments:

Post a Comment