வகுப்பு-35 நாள்-15-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான
பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
சதுர்விதா பஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோ அர்ஜுந।
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தார்தீ ஜ்ஞாநீ ச பரதர்ஷப॥
7.16 ॥
7.16 அர்ஜுனா, துன்புற்றவன், ஞானத்தை தேடுபவன்,
பொருட்களை தேடுபவன், ஞானத்தை அடைந்தவன் என நான்குவிதமாக நல்லவர்கள் என்னை போற்றுகிறார்கள்.
-
எல்லோருக்கும் தேவைகள் இருக்கின்றன.தேவைகள்
இல்லாத மனிதனே இல்லை.
தேவைகள் இருக்கும்வரை நம்மைவிட உயர்ந்த சக்தியிடம்
பிரார்த்திப்பதும் இருக்கும்.
இறைவனை நம்புபவர்கள் எல்லோரும் நங்கள் தேவைகளை
நிறைவேற்றிக்கொள்ள இறைவனை பிரார்த்திக்கிறார்கள்.
நோயினால் துன்புறுபவர்கள் கோடிக்கணக்கில் உள்ளார்கள்,
ஏழ்மைநிலையில் கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள்.
அனைவரின் பிரார்த்தனைகளும் நிறைவேறிவிடுகிறதா?
இல்லை.
அனைத்து பிரார்த்தனைகளும் ஏன் நிறைவேறுவதில்லை?
குழந்தை கேட்கும் அனைத்தையும் தாய் நந்தையர்
வாங்கிக்கொடுப்பதில்லை.அப்படி குழந்தை கேட்கும் அனைத்தையும் யாராவது வாங்கிக்கொடுத்தால்
அவர்களை உலகம் பைத்தியம் என்றுதான் கூறும்.
ஏனென்றால் குழந்தைக்கு எது தேவை.எது தேவையில்லை
என்பது தெரியாது.
குழந்தைக்கு எது தேவையோ அதை மட்டுமே பெற்றோர்
வாங்கிக்கொடுக்கிறார்கள்.
நன்கு வளர்ந்த ஒருவன் பெற்றோரிடம் பலவற்றை
கேட்கிறான்.பெற்றோர் அவைகளை வாங்கிக்கொடுக்கிறார்களா? இல்லை. நீயே சம்பாதித்து அவைகளை
வாங்கிக்கொள் என்கிறார்கள்.
-
அதேபோல்தான் இறைவன் மனிதனின் தேவைகள் எல்லாவற்றையும்
பூர்த்திசெய்வதில்லை.
அப்படி நாம் கேட்பது கிடைக்க ஆரம்பித்துவிட்டால்
யாரும் எந்த வேலையும் செய்ய மாட்டார்கள்.
நமது தேவைகளை நாம்தான் பூர்த்திசெய்துகொள்ள
வேண்டும். இறைவனிடம் பிரார்த்திப்பதால் பயன்இல்லை.
அவர் அவைகளை கண்டுகொள்வதில்லை.
ஆனால் தன்தேவைகளை தன்னால் பூர்த்திசெய்ய முடியாத
நிலையில் சிலர் இருப்பார்கள். அவர்கள் மனத்திலிருந்து எழும் பிரார்த்தனைகளை இறைவன்
கேட்கிறார்.அந்த பிரார்த்தனைகள் படிப்படியாக நிறைவேறுகிறது
-
மகான்கள் குழந்தை நிலையில் இருக்கிறார்கள்.
நாம் குழந்தை நிலையில் இருந்தால் நமது தேவைகள்
எதுவாக இருந்தாலும் அவைகள் தானாகவே பூர்த்தியாகிவிடும்.
அவைகளுக்காக கடவுளிடம் பிரார்த்திக்க வேண்டிய
அவசியம்கூட இல்லை.
-
நமது பிரார்த்தனைகளில் பெரும்பாலானவை சுயநலம்
சார்ந்தவை. நான் நன்றாக இருக்கவேண்டும். எனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டும். என்னை
சார்ந்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும். என்னை யாரும் எதிர்க்கக்கூடாது அப்படி யாராவது
எதிர்த்தால் அவர்கள் அழிந்துபோக வேண்டும். இப்படிப்பட்ட பிரார்த்தனைகள் சுயநலமானவை.
-
நோயினால் துன்பப்படுபவர்கள் இறைவனிடம் பிரார்த்திக்கிறார்கள்.
அந்த பிரார்த்தனை இறைவனை சென்றடைகிறது. ஆனால்
நோய் ஏன் குணமாவதில்லை?
இந்த பிறவியில் செய்த தீய செயல்கள்,முற்பிறவிகளில்
செய்த செயல்கள்,நமது குடும்பத்தை சேர்ந்தவர்கள் செய்த தீய செயல்கள் போன்ற நமக்குத்தெரியாத
பல பாவகர்மங்களுக்கான பலன்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
பாவத்தின் விளைவாக துன்பம் வருகிறது.நோய் வருகிறது.
குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது. மன அமைதி குலைகிறது.
பாவத்தின் கணக்கு முடியும்வரை இவைகளை அனுபவித்துதான்
ஆகவேண்டும்.
இறைவன் பாவிகளின் பாவத்தை ஏற்றுக்கொள்கிறார்
என்று சிலர் நம்புகிறார்கள்.
அப்படி அந்த பாவத்தை இறைவன் ஏற்றுக்கொண்டால்
அவர் பாவியாகிவிடுவார்.
பாவத்தின் விளைவாக அவர் மனிதப்பிறவி எடுக்க
வேண்டியிருக்கும் துன்பப்பட வேண்டும்.
இறைவனே ஏற்படுத்தி வைத்திருக்கும் சட்டதிட்டங்களுக்கு
அவரும் உட்பட்டவராக இருக்கிறார்.
ஒரு நாட்டின் அரசன் உருவாக்கி வைத்திருக்கும்
சட்டதிட்டங்களுக்கு ஏற்ப அவர் நடக்காவிட்டால் மக்கள் அவரை மதிக்கமாட்டார்கள்.
எனவே பாவத்தின் பலனை அனுபவிக்க வேண்டும் என்பது
விதி.
துன்பப்படுபவர்கள் இறைவனை பிரார்திப்பதால்
சிறிது நேரத்திற்கு மனஅமைதி கிடைக்கலாம்.ஆனாலும் துன்பங்கள் தீர்வதில்லை.
-
மனத்தில் சந்தேகங்கள் இருக்கும்வரை மனஅமைதி
கிடைப்பதில்லை. ஞானம் சந்தேகங்களை நீக்குகிறது. மன அமைதியைத்தருகிறது.
ஞானத்தைத் தேடுபவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஞானத்திற்காக இறைவனிடம் பிரார்திக்கிறார்கள்.
அவர்களது பிரார்த்தனை உண்மையானது. ஆனாலும்
அவைகள் உடனே நிறைவேறுவதில்லை.
ஞானம் ஒரே நாளில் கிடைப்பதில்லை. சிலருக்கு
பல பிறவிகள்கூட ஆகலாம். ஆனாலும் தொடர்ந்து முயற்சிசெய்துகொண்டே இருக்க வேண்டும்.
உண்மையான தாகம் இருக்குமானால் இறைவனே குருவாக
வந்து ஞானத்தை போதிக்கிறார்.
இந்த நவீன காலத்தில் ஞானத்தைப்பெறுவதற்கு பல
வழிகள் இருக்கின்றன.
பல்வேறு மகான்களின் வாழ்க்கை வரலாற்றைப்படிக்கலாம்.
அவர்களது உபதேங்களைப்படித்து அதன்படி நடக்கலாம். இவைகள் எல்லாம் ஞானத்தைப்பெறுவதற்கான
வழிகள்.
ஆன்மீக புத்தகங்களை படிக்க வாய்ப்பிருந்தும்
அவைகளைப்படிக்காமல், சிந்திப்பதற்கு மூளை இருந்தும் அதைச்செய்யாமல். மகான்களை நேரில்
சந்திக்கும் வாய்ப்பிருந்தும் அவர்களை நேரில் சந்திக்காமல்,
இறைவா எனக்கு ஞானத்தைக்கொடு என்று பிரார்த்திப்பதால்
என்ன பயன்?
எல்லா வழிகளிலும் முயற்சித்தும் ஞானம் கிடைக்கவில்லை
என்று நினைப்பவர்களின் மன ஏக்கத்தை இறைவன் புரிந்துகொள்கிறார்.அவர்களது பிரார்த்தனை
விரைவில் பலனளிக்கலாம்.
-
பணம் வேண்டும்,சொத்து வேண்டும் என்பதற்காக
பலர் இறைவனைப் பிரார்த்திக்கிறார்கள்.
ஏற்கனவே இருக்கும் பணத்தை இரட்டிப்பாக்குவதற்காக
சிலர் பிரார்த்திக்கிறார்கள்.
சிலர் இறைவனுக்கு சிறிது கொடுத்தால் தனக்கு
பல மடங்காகத்திரும்ப கிடைக்கும் என்பதற்காக கோவிலில் சென்று காணிக்கை கொடுக்கிறார்கள்.
ஒருவர் ஏழ்மை நிலையில் இருப்பதற்கு காரணம்
முற்பிறவிகளில் செய்த பாவங்கள்.
அதை நீக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? புண்ணிய
கர்மங்களைச்செய்ய வேண்டும்.
வாரம் ஒரு முறை ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று
கோவிலை தூய்மைப்படுத்தும் பணியைச்செய்யலாம்.
வேலையே இல்லாதவர்கள் தினசரி இப்படிப்பட்ட வேலைகளைச்செய்யலாம்.
இப்படி தினமும் பணிசெய்தால் பாவ கர்மங்கள்
விலகும். படிப்படியாக புண்ணியம் சேரும். புண்ணியத்தின் பலனாக தேவையான பணம் கிடைக்கும்.
புண்ணிய கர்மங்களை செய்துகொண்டே இருக்கவேண்டும்.பணம்
தானாக வரும். சிலர் எந்த நல்ல காரியத்தையும் செய்வதில்லை. வாழ்க்கை முழுவதும் ஏழ்மை
நிலையிலேயே இருக்கிறார்கள்.
இறைவன் யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்பதை
தெரிந்துதான் கொடுக்கிறார்.
சோம்பேரிகள் எவ்வளவுதான் பிரார்த்தித்தாலும்
எதுவும் கிடைக்காது.
வேலை செய்வதற்கு மட்டுமே நமக்கு அதிகாரம் இருக்கிறது.
யாருக்கு எதை எப்போது எப்படி செய்ய வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும்.
மரணம் வரும்வரை புண்ணிய கர்மங்களை செய்துகொண்டே
இருங்கள். படிப்படியாக உங்கள் தேவைகள் நிறைவேறும்.
பாவிகளின் பிரார்த்தனைகள் பலன் தருவதில்லை.
முதலில் பாவத்தின் பலனை அனுபவித்து முடிக்க வேண்டும்.
-
ஞானத்தை அடைந்தவர் இறைவனை வணங்குகிறார்.
அவர் இறைவனிடமிருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.எதையும்
பிரார்த்திப்பதில்லை.
ஏனென்றால்
இறைவனின் இயல்புகளைப்பற்றி அவருக்கு தெரியும்.
இந்த உலகத்திலுள்ள எதுவும் தனக்கு தேவையில்லை
என்ற நிறைவை அவர் அடைந்துவிட்டார். எனவே தனக்காக எதையும் பிரார்த்திப்பதில்லை.
மற்றவர்களுக்கு எது தேவை என்பது இறைவனுக்கு
தெரியும் எனவே மற்றவர்களுக்காகவும் பிராத்திக்க வேண்டியதில்லை.
முக்தி வேண்டும் என்ற ஒரு பிராத்தனை மட்டுமே
அவர்களிடம் எஞ்சியிருக்கும்
ஒருவேளை ஞானி, பிறருக்காக பிரார்திக்க ஆரம்பித்தால்
என்னவாகும்?
மாயையின் வலைக்குள் அகப்பட்டுக்கொள்வார்.மறுபடியும்
பிறக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
சில மகான்கள் மறுபடி பிறப்பதற்கு கவலைப்படுவதில்லை.
பிறருடைய துன்பங்களை போக்குவதற்காக இறைவனிடம் பிரார்திக்கிறார்கள்.
இவர்கள்தான் நடமாடும் தெய்வங்கள். பிறருடைய
பாவங்களை ஏற்றுக்கொண்டு அதற்காக துன்பப்படுகிறார்கள்.
பிறருடைய துன்பங்களை நீக்குவதற்காக பலமுறை
பிறக்க வேண்டிய நிலை வந்தாலும் பரவாயில்லை என்ற பரந்த மனம் கொண்டவர்கள் இவர்கள்.
இப்படிப்பட்டவர்கள் அன்புக்கு எல்லேயே இல்லை.
-
இந்த நான்குவிதமான மனிதர்களும் நல்லவர்கள்தான்.ஆனால்
இதில் யாரை இறைவனுக்கு பிடிக்கும்?
தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகபக்திர்விஷிஷ்யதே।
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோ அத்யர்தமஹம் ஸ ச மம ப்ரிய:॥
7.17 ॥
7.17 அவர்களுள் நித்தியயுக்தனான. மாறாத பக்தியுள்ள,ஞானி
மேலானவன். ஏனெனில் நான் ஞானிக்கு மிகப்பிரியமானவன் அவனும் எனக்கு பிரியமானவன்.
-
உதாரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்।
ஆஸ்தித: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் கதிம்॥
7.18 ॥
7.18 இவர்கள் எல்லோரும் நல்லவர்களே ஆயினும்
ஞானி என் சொரூபமோனவன் என்பது என் கருத்து.
ஏனென்றால் யோகத்தில் நிலைபெற்றிருக்கும் அவன், மிகஉயர்ந்த நிலையில் இருக்கும் என்னில்
நிலைபெற்றிருக்கிறான்.
-
ஞானி எப்படிப்பட்ட மனநிலையில் வாழ்கிறான்?
பஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்யதே।
வாஸுதேவ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுதுர்லப:॥
7.19 ॥
7.19 பல பிறவிகளின் இறுதியில் ஞானி எல்லாம்
இறைவனே என்று உணர்ந்து என்னை வந்தடைகிறான்.
அந்த மகாத்மா கிடைப்பதற்கு அரியவன்.
-
எல்லாம் இறைவன். இந்த உலகத்தில் உள்ள எல்லாம்
இறைவன்.
இறைவனே மனிதர்களாகவும்,விலங்குகளாகவும்,மரம்,செடி,கொடிகளாகவும்,சந்திர,சூரியர்களாகவும்
ஆகியிருக்கிறார் என்ற ஞானம் ஏற்பட்ட பிறகு, ஞானி அனைத்திடமும் அன்பு செலுத்துகிறார்.
இறைவன் உருவம் உள்ளவராகவும், உருவம் அற்றவராகவும், அனைத்துமாகவும் ஆகியிருக்கிறார்
என்பதை ஞானி உணர்ந்ததனால்
அவரது அன்பு எல்லையற்றதாகிறது.
அந்த நிலையை அடைந்தபிறகு ஞானி இறைவனுடன் ஒன்றுகலந்துவிடுகிறான்.
சிலர் இந்த நிலையை அடைந்திருந்தாலும் மக்களுக்கு
வழிகாட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
No comments:
Post a Comment