வகுப்பு-28 நாள்-30-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
யோகீ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தித:।
ஏகாகீ யதசித்தாத்மா நிராஷீரபரிக்ரஹ:॥ 6.10
॥
6.10 யோகி, யாருக்கும் தெரியாதவனாக தன்னந்தனியாக
இருந்துகொண்டு சித்தத்தையும்,
தன்னையும் அடக்கிக்கொண்டு, ஆசையற்றவனாய், பொருட்கள்
எதுவும் இல்லாதவனாய்,
எப்பொழுதும் தன்னை ஒன்றுபடுத்த வேண்டும் (தன்னில்
நிலைபெற்றிருக்க வேண்டும்)
-
யோகி என்றால் யார்?
செய்ய வேண்டிய கடமைகளை எல்லாம் செய்து முடித்து,புலன்களை
அடக்கியவன்.
அவன் யாருக்கும் தெரியாமல் தன்னந்தனியாக இருக்கவேண்டும்.
பலரது முன்னிலையில் தியானிக்க முடியாது. ஒவ்வொரு
மனிதனிடமிருந்தும் ஒவ்வொரு எண்ணம் புறப்படுகிறது.
இவர் உண்மையிலேயே தியானம் செய்கிறாரா அல்லது
தியானிப்பவர்போல நடிக்கிறாரா என்று ஒருவர் நினைப்பார்.
இன்னொருவர் ஆகா! இவர் பெரிய யோகி என்று நினைப்பார்.
இன்னொருவர் பணம் சம்பாதிப்பதற்காக நடிக்கிறார்
என்று நினைப்பார்.
இப்படி ஒவ்வொரு மனிதனிடமிருந்தும் ஒவ்வொரு
எண்ணம் வெளிப்படும்.இவைகள் தியானிப்பவரை சென்றடைகிறது. அவரது மனத்தை கட்டுப்படுத்த
முடியாத சூழல் ஏற்படும்.
ஆனால் சமாதி நிலையில் நிலைபெற்றிருப்பவர்களை
இப்படிப்பட்ட எண்ணங்கள் தாக்காது
-
பக்கத்தில் எந்த பொருட்களும் இருக்கக்கூடாது.அப்படி
இருந்தால் அந்த பொருட்கள் தொடர்பான எண்ணங்கள் உருவாகும். பக்கத்தில் ஒரு பாத்திரம்
இருப்பதாக வைத்துக்கொள்வோம். தியானத்தில் ஆழ்ந்திருக்கும்போது அந்த பாத்திரத்தை யாராவது
எடுத்து சென்றுவிட்டால் என்ன செய்வது? அந்த பாத்திரம் இல்லாவிட்டால், தண்ணீர் பிடித்து
வைப்பதற்கு வேறு பாத்திரம் இல்லையே என்றெல்லாம் சிந்தனை தோன்றும்
-
மனத்தை தனது ஆத்மாவில் நிலை நிறுத்தவேண்டும்.
வெளியே ஒரு பொருளை வைத்துக்கொண்டு அதில் மனத்தை நிலைநிறுத்தக்கூடாது.அப்படி செய்தால்
மனம் வெளி முகமாக செல்லும். அவ்வப்போது அந்த பொருள் இருக்கிறதா என்று கண்ணை திறந்து
பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கும்.
-
ஷுசௌ தேஷே ப்ரதிஷ்டாப்ய ஸ்திரமாஸநமாத்மந:।
நாத்யுச்ச்ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஷோத்தரம்॥
6.11 ॥
6.11 சுத்தமான இடத்தில், உறுதியானதும், அதிக
உயரமில்லாததும்(உயரமான இடத்தில் அமர்ந்தால் கீழே விழலாம்), மிக தாழ்வல்லாத (தாழ்வான
இடத்தில் அமர்ந்தால் பூச்சிகள் தொந்தரவு செய்யலாம்),
துணி,தோல், தர்ப்பை இலைகளை மேலே விரித்து அமர்ந்து, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும்.
-
சுத்தமான இடமாக இருக்க வேண்டும். உறுதியான
இடமாக இருக்க வேண்டும். அதிக உயரம் இருக்கக்கூடாது. தாழ்வான இடமாக இருக்ககூடாது.துணி
அல்லது மான்தோல் அல்லது புலித்தோல் அல்லது தர்ப்பை இலைகளை விரித்து அதில் அமர்ந்துகொள்ளலாம்.
சில துணிகள் உடலை சூடாக்கும் இயல்புடையது.அதன்மீது
அமரக்கூடாது.கல்,மண்,பிற உலோகங்கள் உடலை குளிர்விக்கும் தன்மை உடையது.அதன்மீதும் உட்காரக்கூடாது.
உடலின் சூடு அதிகரிக்காமலும், அளவுக்கு அதிகமாக
குறையாமலும் இருக்க வேண்டும்.
-
தத்ரைகாக்ரம் மந: க்ருத்வா யதசித்தேந்த்ரியக்ரியா:।
உபவிஷ்யாஸநே யுஞ்ஜ்யாத்யோகமாத்மவிஷுத்தயே॥
6.12 ॥
6.12 அந்த ஆசனத்தில் அமர்ந்து மனதை ஒருமைப்படுத்தி
சித்தம், இந்திரியம் இவைகளின் செயல்களை அடக்கி, தன்னை தூய்மைப்படுத்துவதற்காக யோகம்
பயிலவேண்டும்.
-
பல்வேறு எண்ணங்கள் தொடந்து எழுந்துகொண்டே இருக்கும்.அவைகளை
ஒருமைப்படுத்தவேண்டும். எண்ணங்களை நீக்குவதற்கு முயற்சித்தால் அதனால் மனம் சோர்வடையும்,தியானிக்க
முடியாது.
அப்படி செய்யமல் மனத்தின் எண்ணங்களை ஒருமைப்படுத்த
வேண்டும்.
அதனாவது அனைத்து எண்ணங்களும் ஒரு இலக்கை நோக்கியதாக
இருக்க வேண்டும்.
வீட்டில் மிக நெருக்கமான ஒருவர் இறந்துவிட்டால்,அந்த
நேரத்தில் வரும் அனைத்து எண்ணங்களும் அவரைப்பற்றியதாக மட்டுமே இருக்கும்.வேறு எண்ணங்களை
நினைக்க முயற்சித்தாலும் முடியாது.
காதலன்-காதலி பிரிந்துவிட்டால் அதன் பிறகு
அவர்களுக்குள் எழும் எண்ணங்கள் அனைத்துடம் அதைப்பற்றியதாகவே இருக்கும்.
இதுதான் மனத்தை ஒருமைப்படுத்துவது.
ஒரே இலக்கை நோக்கி அனைத்து எண்ணங்களையும் திருப்புவது.
பக்தி மார்க்கத்தில் மனத்தை ஒருநிலைப்படுத்துவது
எளிது.இஷ்டதெய்வத்தின்மீது தீவிர அன்பு இருக்க வேண்டும்.ஞான மார்க்கத்தில் சற்று கடினம்.
கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் இவைகள் மூலம்
நடைபெறும் செயல்களை முற்றிலும் நிறுத்தவேண்டும்.
கண்களால் வெளி உலகைப்பார்க்கக்கூடாது.காதுகளால்
எதையும் கேட்கக்கூடாது.
யோகம் என்பது என்ன?
ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றிணைவது
-
ஒருமித்த எண்ணங்கள் படிப்படியாக சமநிலையை அடைகின்றன.
மிக ஆழந்த வேதனை வரும்போது சில நொடிகள் அப்படியே
மனம் எதையும் சிந்திக்காமல் நிற்கிறது.
அந்த வேளையில் ஒரு பேரமைதியை உணர்கிறோம்.
உயிரின் அருகில் சென்றதுபோன்ற நிலை ஏற்படுகிறது.
சிலருக்கு இதயத்துடிப்பு நின்று மரணம் ஏற்படுகிறது.
யோகிகள் இதயத்துடிப்பை நிறுத்துகிறார்கள்.ஆனால்
மரணம் நேர்வதில்லை.
முறையான பயிற்சியினால் மட்டுமே இதை அடைய முடியும்.
பயிற்சி இல்லாதவர்களுக்கு மரணம் ஏற்படும்
-
ஸமம் காயஷிரோக்ரீவம் தாரயந்நசலம் ஸ்திர:।
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்ரம் ஸ்வம் திஷஷ்சாநவலோகயந்॥
6.13 ॥
-
6.13
உடல், தலை, கழுத்து இவைகளை நேராகவும் அசையாமலும் வைத்துக்கொண்டு உறுதியாய் இருந்துகொண்டு,
தன்னுடைய மூக்குநுனியை பார்த்துக்கொண்டு,வெளிஉலகை பாராமல் இருக்க வேண்டும்.
-
தியானிக்கும்போது பலர் கண்களை மூடிக்கொள்கிறார்கள்.அப்படி
செய்தால் மனம் கனவுலகை நோக்கி சென்றுவிடும். விழித்திருந்தால் நாம் காண்பது நனவுலகம்.
கண்களை மூடியபின் வருவது கனவுலகம்.
இந்த இரண்டிற்கும் இடையில் கண்களை முழுவதும்
திறக்காமலும்.கண்களை முழுவதும் மூடாமலும் இருக்க வேண்டும்.
அதேபோல அதிக வெளிச்சம்,முழு இருட்டு இரண்டையும்
தவிரக்கவேண்டும். மிகமிக லேசான வெளிச்சம் இருக்க வேண்டும்.
உடல்,தலை,கழுத்து இவைகளை நேராக வைத்துக்கொள்ள
வேண்டும்.
தியானிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில்கூட
இதேபோல அமர்வதற்கு பழகவேண்டும்.
சமமாக நாற்காலியில் உட்காரவேண்டும்.தற்காலத்தில்
எந்த அலுவலகத்திலும் அப்படிப்பட்ட நாற்காலிகள் வைப்பதில்லை.
மரத்தினால் ஆன சமதளத்துடன்கூடிய நாற்காலியில்
அமர வேண்டும்.அந்த நாற்காலியின்மேல் பஞ்சுபோன்ற அமைப்புகள் எதுவும் இருக்கக்கூடாது.
நேராக அமரும்போது மூச்சு மிக இயல்பாக வருகிறது.
மனத்தில் தேவையற்ற எண்ணங்கள் வருவதில்லை.
உடலில் இரத்த ஓட்டம்,இதயத்துடிப்பு போன்றவை
இயல்பாக இருக்கும்.
உடல் குறைபாடுகள் நீங்குகின்றன.ஜீரண சக்தி
அதிகரிக்கிறது.
-
ப்ரஷாந்தாத்மா விகதபீர்ப்ரஹ்மசாரிவ்ரதே ஸ்தித:।
மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர:॥
6.14 ॥
-
6.14 அமைதியான உள்ளத்தையுடையவன், பயம் நீங்கியவன்,
பிரம்மச்சர்யத்தில் நிலைபெற்றவன். மனதை அடக்கி, சித்தத்தை என்பால் வைத்தவன், என்னையே
குறிக்கோளாக கொண்டு, யுக்தனான(ஏற்கனவே கர்மயோகத்தை நிறைவுசெய்தவனாக) அமர்ந்திருக்க
வேண்டும்.
-
பயம் இருக்கக்கூடாது. தனிமையான இடத்தில் சென்று
தியானிக்கும்போது, ஒருவேளை மிருகங்கள் ஏதாவது வந்துவிட்டால் என்ன செய்வது? தீயவர்கள்
வந்துவிட்டால் என்ன செய்வது? அல்லது பூச்சிகள் ஏதாவது கடித்துவிட்டால் என்ன செய்வது?
இப்படிப்பட்ட பயம் இருக்கக்கூடாது.
யார் மூலமாகவோ.எந்த மனிதர்கள் மூலமாகவோ,எந்த
விலங்குள் மூலமாகவோ, எந்த பூச்சிகள் மூலமாகவோ பாதிப்பு ஏற்படாத இடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ள
வேண்டும்.
கொசு கடிக்காமல் இருக்க கொசு வலையை பயன்படுத்தலாம்.
-
பிரம்மச்சர்யம் மிக முக்கியம். இது அவ்வளவு
எளிதில் அமையாது.
பெண் அருகில் இருந்தாலும் யார் அதனால் பாதிக்கப்படாமல்
இருக்கிறானோ அவனே பிரம்மச்சர்யத்தில் நிலைபெற்றவன்.
காமத்திற்கு
காரணம் என்ன?
ஆணுக்கு பெண்மீதும், பெண்ணுக்கு ஆண்மீதும்
ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கும்.
ஆண் பெண்ணைப்பற்றி முழுவதும் தெரிந்துகொண்டால்
அந்த ஈர்ப்பு மறைந்துவிடும்.அதேபோலவே பெண்ணிற்கும்.
ஆண்,பெண் இந்த இரண்டு உடல்களையும்,அதற்கு பின்னால்
உள்ள மனத்தையும் சேர்த்து வைத்தால்
-அது அம்சப் பிரபஞ்சம்.
முழு பிரபஞ்சம் எப்படி அமைக்கப்பட்டுள்ளதோ
அதே போல அம்சப்பிரபஞ்சமும் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டு உடல்களையும் பற்றி முழுமையாகத் தெரிந்தவன்
பிரபஞ்சத்தைப்பற்றி தெரிந்தவனாகிறான்.
இரண்டு உடல்களைப்பற்றிய பூரண ஞானம் யாருக்கு
ஏற்படுகிறதோ அவர்களால் மட்டுமே பிரம்மச்சர்யத்தில் நிலைபெற முடியும்.
பிரம்ம+ச்சர்யம் என்றால் பிரம்மத்தை நோக்கி
செல்வது.
பிரம்மச்சர்யத்தில் நிலைபெற்றவனால் மட்டுமே
பிரம்மத்தில் நிலைபெற முடியும்.
மற்றவர்களால் அந்த அளவு உயரத்தை அடைய முடியாது.
-
ஆன்மீக பயிற்சிகளில் ஈடுபடும் சிலர் ஓரளவு
உயர்ந்த நிலையை அடைகிறார்கள்.
அதற்கு மேல் அவர்களால் செல்ல முடிவதில்லை.அதற்கு
காரணங்களில் முக்கியமானது,
ஆண்,பெண் இரண்டு உடல்கள்.இரண்டு மனங்கள் பற்றிய
பூரண ஞானம் ஏற்படாததே.
-
பக்தி மார்க்கத்தில் செல்பவர்கள் ஏதாவது ஒரு
பெண் தெய்வத்தை தியானிப்பார்கள்.படிப்படியாக அந்த தெய்வமும் தானும் ஒன்நே என்ற நிலையை
அடைவார்கள்.இவ்வாறு பெண் இயல்புகள் அவர்களிடம் முழுமையடையும்.
அதேபோல பெண் பக்தைகள் ஆண் தெய்வத்தை தியானிப்பதன்
மூலம் ஆண்மையில் முழுமையடைய முடியும்.
-
இல்லறத்தில் கணவனை மனைவி தெய்வமாகவும், அதேபோல
மனைவியை கணவன் தெய்வமாகவும் பாவித்து வாழ்ந்து வந்தால் இரண்டு உடல்களைப்பற்றிய ஞானம் பெற்று முழுமையடைய
முடியும்.முற்காலத்தில் ரிஷிகள் இந்த மனநிலையில் வாழ்ந்து வந்தார்கள்.
-
யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ நியதமாநஸ:।
ஷாந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தாமதிகச்சதி॥
6.15 ॥
6.15 இவ்விதம் எப்பொழுதும் மனதை தியானத்தில்
நிறுத்தி உள்ளத்தையடக்கிய யோகியானவன், என்மேலான நிலையான, நிர்வாணத்தை பெற்று சாந்தியை
அடைகிறான்
-
இதில் வெற்றிபெற்றவன் இறைவனது மேலான நிலையை
அடைகிறான்.
இறைவனுக்கு பல நிலைகள் உள்ளன.
அதில் மிக மேலான நிலை எது?
பிரம்மம்.
உருவமற்ற நிலையை அடைவது.
நிர்வாணம் என்பது இன்னொரு பெயர்.
புத்தமதத்தினர் குறிப்பிடும் நிர்வாண நிலையும்
இதுதான்.
இந்த மேலான நிலையை அடைந்தவன் மறுபடி பிறப்பதில்லை.
அவன் அழிந்துபோவதில்லை, எல்லையற்ற நிலையை அடைந்து
எப்போதும் இருக்கிறான்.
No comments:
Post a Comment