வகுப்பு-16 நாள்-6-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்திம் யஜந்த இஹ தேவதா:।
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்திர்பவதி கர்மஜா॥ 4.12 ॥
4.12 கர்மங்களுடைய பலனை விரும்புபவர்கள் இங்கே தேவதைகளை(ஒளியுடலில் வாழும் முன்னோர்கள்) வணங்குகிறார்கள். ஏனென்றால் இவ்வுலகில் கர்மபலன் விரைவில் கிடைக்கிறது
இறைவனை வழிபடும் மனிதர்கள் எல்லோரும் ஒரே நோக்கத்தில் வழிபடுவதில்லை.பல்வேறு பலன்களைக்கருதி பல வழிபாடுகள் செய்யப்படுகிறது.
கர்ம பலன்கள் நான்கு வகைப்படும்.
1.மற்றவர்களுக்கு தீங்கு நேரவேண்டும் என்று வழிபாடு செய்வது(கீழ்நிலை)
2. எனக்கும்,என்னை சார்ந்தவர்களுக்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழிபாடு செய்வது(இடைநிலை)
3.எனக்கும் நன்மை ஏற்பட வேண்டும் உலகத்தில் உள்ள எல்லோருக்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழிபாடு செய்வது(உயர்நிலை)
4. எனக்கு நன்மை ஏற்படவேண்டும் என்ற அவசியம் இல்லை. பிறருக்கு நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழிபாடு செய்வது(தெய்வநிலை)
-
இந்த நான்கு வழிபாடு செய்பவர்களும் உலகத்தில் எல்லா காலத்திலும் இருக்கிறார்கள்.
இவர்கள் வழிபடும் தெய்வங்கள் வேறுபடுகின்றன.
இந்த உலகத்தை படைத்து,காத்து,அழிக்கும் ஈஸ்வரனிடம் பிறருக்கு தீங்குநேரவேண்டும் என்ற நோக்கத்தில் யாராவது வழிபாடு செய்தால்,அப்படி வழிபடுபவர்களுக்குத்தான் தீங்கு நேரும்.எனவே ஈஸ்வரிடனிடம் அந்த நோக்கத்தில் யாரும் வழிபட முடியாது.
பிறருக்கு தீமை மட்டுமே செய்யக்கூடிய ஆவிகள் இந்த உலகத்தில் இருக்கின்றன.சிலர் வாழும்போது தீயவர்களாக வாழ்ந்து அகால மரணம் அடைந்திருப்பார்கள். அந்த ஆவிகளை மந்திரவாதிகள் வசியப்படுத்தி தீய செயல்களை செய்ய பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
இந்த ஆவிகளை சிலர் வழிபடுகிறார்கள். மிருகபலி கொடுத்து பூஜிக்கிறார்கள்.மிகவும் கீழ்த்தரமான மக்கள் இந்த வேலையை செய்கிறார்கள்.இதனால் அவர்களும் அவர்களை சார்ந்தவர்களும் ஒரு காலத்திற்கு பிறகு அழிந்துபோவார்கள்.
-
சிலர் குலதெய்வம் ஊர்காவல் தெய்வம் போன்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள்.இந்த தெய்வங்கள் யார்?
முற்காலத்தில் வீரத்துடன் வாழ்ந்தவர்கள்,உதாரணமாக வாழ்ந்தவர்கள்,தலைவர்களாக வாழ்ந்தவர்கள்.
இவர்கள் இறந்த பிறகு அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்லது அந்த இனத்தை சார்ந்தவர்கள் வழிபடுகிறார்கள்.
அந்த குறிப்பிட்ட இனத்தை சார்ந்தவர்கள் நன்மை அடைய வேண்டும் என்பதற்காக வழிபாடு செய்கிறார்கள்.
தற்காலத்தில் மக்கள் வழிபடும் ஜாதி தலைவர்கள்,கட்சி தலைவர்கள்,இனத்தலைவர்கள் போன்றவர்கள்.
-
சில ரிஷிகள் அல்லது மகான்கள் உடலைவிட்டு சென்றபிறகு உலக நன்மைக்காக சூட்சும உடலில் வாழ்கிறார்கள்.இந்த மகான்களை வழிபடுவது சற்று உயர்ந்த நிலை வழிபாடு.இந்த மகான்களை மையமாக வைத்து சில மதப்பிரிவுகள்கூட உருவாகியிருக்கும். இந்த மகான்களை வழிபடுபவர்கள் சற்று உயர்ந்த மனநிலை உடையவர்களாக இருப்பார்கள்.உலக நன்மைக்காக வழிபடும் இயல்பு அவர்களிடம் இருக்கும்.
-
உலக நன்மைக்காக தன்னையே தியாகம் செய்யும் இயல்புள்ள மகான்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களும் வழிபாடு செய்கிறார்கள். அவர்கள் இறைவனுக்காக தன்னிடமுள்ள அனைத்தையும் இழக்கும் இயல்புள்ளவர்களாக இருக்கிறார்கள்.இறைவனை உண்மையில் உணர்ந்து வழிபடுபவர்கள் இவர்கள்தான்.
தனக்காக ஒருபோதும் எதையும் பிரார்த்திப்பதில்லை.
-
இங்கே வழிபடுபவர்கள் எந்த இயல்புள்ளவர்களாக இருக்கிறார்களோ அவர்களைப்பொறுத்து வழிபாடும் வேறுபடுகிறது.
தனக்கும் தன் குடும்பத்திற்கும் நன்மை ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் வழிபாடு செய்பவர்கள் அதற்குரிய தெய்வத்திடம் வழிபாடு செய்ய வேண்டும்.அப்போது அது பலன் கொடுக்கும்.
இந்த பிரபஞ்சத்தை படைத்து,காத்து,அழிக்கும் இறைவனிடம் அந்த நோக்கத்தில் வழிபாடு செய்ய முடியாது.
இறைவனை வழிபடும் துகுதி யாருக்கு உண்டு என்றால் இறைவனுக்காக தன்னிடம் உள்ள அனைத்தையும் இழக்கும் மனநிலை யாரிடம் உள்ளதோ அவர்கள் தான் இறைவனை வழிபடும் தகுதி உள்ளவர்கள்.
-
சுயநல நோக்கம் உள்ளவர்கள் அதற்குரிய தெய்வத்தை வழிபடலாம்.
ஒவ்வொரு குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் குடும்பதெய்வம் உள்ளது.இதைத்தவிர ஊர்க்காவல் தெய்வம்,ஏரி காவல் தெய்வம், இனத்தின் தெய்வம்,கட்சியின் காவல் தெய்வம் என்று பல தெய்வங்கள் இருக்கின்றன.
ஒவ்வொரு ஊரிலும் பல கோவில்கள் உள்ளன.அங்கெல்லாம் தனித்தனி தெய்வங்கள் இருக்கின்றன.
இயற்கையின் ஒவ்வொரு சக்தியையும் தெய்வமாக வழிபடும் மனிதர்கள் இருக்கிறார்கள் ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு தெய்வம்.
ஒவ்வொரு மகான்களையும் தெய்வமாக வழிபடுகிறார்கள்.
இப்படி கோடனகோடி தெய்வங்கள் இந்தியாவில் இருக்கின்றன.
இந்த தெய்வங்கள் நிரந்தரமானவர்கள் அல்ல. அவர்களது புண்ணிய பலனுக்கு ஏற்ப சில நூறு ஆண்டுகள் சூட்சும உடலில் வாழ்ந்து பிறகு மனிதர்களாக மீண்டும் பிறக்கிறார்கள்.
-
சில நாடுகளில் ஒரு தெய்வ வழிபாடு இருக்கிறது.
இந்தியா ஒட்டு மொத்தத்தையும் எடுத்துப்பார்த்தால் இந்தியாவில் இருப்பது பல தெய்வ வழிபாடு.
இந்துக்களின் வழிபாடு பல தெய்வ வழிபாடாகும்.
பிரபஞ்சத்தை படைத்து,காத்து.அழிக்கும் ஈஸ்வரனையும் வழிபடுவார்கள், சிறுசிறு காவல் தெய்வங்களையும் வழிபடுவார்கள்.
இந்துக்கள் இப்படித்தான் வழிபாடு செய்ய வேண்டும் என்று யாரும் கட்டளையிடுவதில்லை.எனவே ஒவ்வொரு இயல்பு உள்ளவர்களும் தங்களது இயல்புக்கு ஏற்றபடி வழிபாடு செய்கிறார்கள்.
மனிதன் முன்னேற முன்னேற அவனது வழிபாடும் முன்னேறுகிறது.
முடிவில் நானே கடவுள். அஹம் பிரம்மாஸ்மி,சிவோஹம்.நானே சிவன்
இந்த உலகத்தை படைத்து.காத்து.அழிக்கும் இறைவன் நானே என்பதை மனிதன் உணர்கிறான்.
No comments:
Post a Comment