வகுப்பு-27 நாள்-28-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
உத்தரேதாத்மநாத்மாநம் நாத்மாநமவஸாதயேத்।
ஆத்மைவ ஹ்யாத்மநோ பந்துராத்மைவ ரிபுராத்மந:॥
6.5 ॥
6.5 தன்னைத்தானே உயர்த்திக்கொள். தன்னை தாழ்த்திக்கொள்ளக்கூடாது.
ஏனென்றால் தனக்கு தானே நண்பன், தனக்கு தானே
பகைவன்
-
நமக்கு உதவி வேண்டி தெய்வத்திடம் பிரார்த்திக்கிறோம்.
எல்லோரும் பிரார்த்திக்கிறார்கள்.அனைவரது பிரார்த்தனைகளும் நிறைவேறியிருந்தால்,யாருக்கும்
எந்த தேவையும் இல்லாமல் போயிருக்கும்.
எல்லோருடைய பிரச்சினைகளும் தீர்ந்திருக்கும்.
ஆனால் அப்படி நடப்பதில்லை.
வெளியிலிருந்து யாரோ ஒருவர் அல்லது ஏதோ ஒரு
தெய்வம் உதவிசெய்ய வேண்டும் என்று காத்துக்கிடக்கிறோம்.
இவ்வாறு காத்திருந்து காத்திருந்து காலம் கடந்ததுதான்
மிச்சம்.
இவ்வாறு பிறரது உதவியை நாடி அலைவதைவிட, தன்னைதானே
உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்.
பலவீனமானவர்கள்தான் பிறரது உதவியை நாடி ஓடுகிறார்கள்.
முதலில் நம்மை பலசாலிகளாக்கிக்கொள்ள வேண்டும்.
இந்த உலகத்தில் எதுவும் இலவசமாக கிடைப்பதில்லை.
ஒரு மனிதரிடமிருந்து உதவியை பெறும்போது அதற்கு
சமமான ஏதோ ஒன்று நம்மிடமிருந்து அவருக்கு செல்கிறது.
உதவியை கொடுப்பவர் புண்ணியத்தை பெறுகிறார்.
உதவி பெறுபவர் பாவத்தை பெறுகிறார்.
பாவிகளுக்கு தெய்வங்கள்கூட உதவுவதில்லை.புண்ணியவான்களுக்கு
எல்லா தெய்வங்களும் உதவ தயாராக இருக்கிறது.
நம்மிடம் ஏராளம் செல்வம் இருந்தால் எல்லோரும்
நம்மைத்தேடி வருவார்கள்.
ஒன்றும் இல்லாதவனைத்தேடி சொந்தங்கள்கூட வருவதில்லை.
நம்மைநாம் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
எப்படி?
உழைக்காமல் எதையும் பெற முடியாது. தெய்வத்தின்
அருளால் அனைத்தும் எளிதில் கிடைத்துவிடும் என்று நினைத்தால் அது தவறு.
உடலளவில் ,மனதளவில், ஆன்மீகத்தில் அனைத்திலும்
நம்மைநாமேதான் உயர்த்திக்கொள்ள வேண்டும்.
நாம் இப்போது எந்த நிலையில் இருக்கிறோமோ அந்த
நிலையிலிருந்து படிப்படியாக முன்னேற வேண்டும்.
நமக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமைகளை முறையாக
செய்யத்தொடங்கவேண்டும்.படிப்படியாக உயர்ந்த கடமைகள் வரும்.ஒருநாள் இந்த உலகத்தையே ஆளும்
நிலை வரும்.
இவைகள் எல்லாம் நமது உழைப்பினால்தான் வருகிறதே
தவிர, வேறு குறுக்கு வழியில் வருவதில்லை.
அதிர்ஷ்டத்தினால் ஒருவன் திடீரென்று உயர்ந்த
நிலையை அடையலாம்.ஆனால் அந்த உயர்ந்த நிலையில் நிலைத்து நிற்கும் அளவுக்குரிய திறமை
இல்லாவிட்டால்,அதே வேகத்திலேயே தாழ்ந்த நிலையை அடைந்துவிடுவான்.
-
பந்துராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித:।
அநாத்மநஸ்து ஷத்ருத்வே வர்தேதாத்மைவ ஷத்ருவத்॥
6.6 ॥
6.6 யார் தன்னைத்தானே ஜெயித்தவனோ. அவன் தனக்குதானே
உறவினன்.
ஆனால் தன்னை தானே ஜெயிக்காதவன் தனக்குதானே
பகைவன்போல்,
பகைமையை எதிர்கொள்ள வேண்டிவரும்
தன்னை ஜெயிப்பது என்றால் என்ன? நமது மனத்தை
நம் கட்டுப்பாட்டில் கொண்டுவருவது.
நிம்மதியான வாழ்க்கை அல்லது சொர்க்க வாழ்க்கை
என்பது எது?
அதிகசெல்வம்,அதிக புகழ்,அதிக அதிகாரம் கொண்ட
வாழ்க்கையா?
இல்லை.
நமது மனம் நமக்கு கட்டுப்பட்டிருந்தால் அதுதான்
நிம்மதியான வாழ்க்கை.
மனத்தை அடக்கியவனை நாடி பிறர் வருகிறார்கள்
நரக வாழ்க்கை என்பது என்ன?
சிறுவயது வாழ்க்கை,நிறைவேறாத ஆசைகள்,முற்காலத்தில்
செய்த தவறுகள்,பிறர் நமக்கு இழைத்த கொடுமைகள்,உறவினர்கள் செய்த துரோகம் இன்னும் பல்வேறு
நினைவுகளை மனம் மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டே இருப்பது.
அலையாயும் மனத்தை வைத்திருப்பவனிடம் யாரும்
வருவதில்லை.அவன் பேசுவதை யாரும்கேட்க விரும்புவதில்லை
எனவே
மனத்தை அடக்கியவனுக்கு அவனது மனமே நண்பனாக மாறிவிடுகிறது.அடங்கிய மனத்தில் உலகத்தின்
ரகசியங்கள் அனைத்தும் வெளிப்படுகிறது. அந்த மனம் எப்போதும் சரியான வழியை காட்டுகிறது.
-
No comments:
Post a Comment