வகுப்பு-18 நாள்-9-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
கிம் கர்ம கிமகர்மேதி கவயோ அப்யத்ர மோஹிதா:।
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸே அஷுபாத்॥ 4.16 ॥
4.16 கர்மம் எது, செய்யக்கூடாத கர்மம் எது என்றும், இன்னும் இதுகுறித்து ஞானிகள்கூட குழப்பமடைகிறார்கள்.
எதை அறிந்து கேடுகளிலிருந்து விடுபடுகிறாயோ அந்த கர்மத்தை உனக்கு சொல்கிறேன்.
கர்மணோ ஹ்யபி போத்தவ்யம் போத்தவ்யம் ச விகர்மண:।
அகர்மணஷ்ச போத்தவ்யம் கஹநா கர்மணோ கதி:॥ 4.17 ॥
4.17 ஏனென்றால் கர்மத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்,
விலக்கப்பட்ட கர்மத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
செய்யக்கூடாத கர்மத்தைப்பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.
கர்மத்தின்போக்கை அறிவது கடினம்
-
கர்மம் என்றால் செயல் என்று அர்த்தம்.
எல்லா செயல்களும் கர்மம்தான்.இதில் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது?
இதை எப்படி அறிந்துகொள்ளவது?
தன்னுடைய மதத்தை சாராதவர்களை கொல்லலாம் என்று ஒரு நூல் கூறுகிறது.
அந்த மதத்தில் நம்பிக்கை உள்ளவன் அதேபோல செய்கிறான்.அவனைப்பொறுத்தவரை இது செய்ய வேண்டிய கர்மம் என்று நினைக்கிறான்.இதனால் சொர்க்கம் கிடைக்கும் என்று நம்புகிறான்.
இன்னொரு மதத்தை பின்பற்றுபவனைப் பொறுத்தவரை இது மகாபாவம்.
இப்படியே ஒவ்வொருவரும் தாங்கள் எதை நம்புகிறார்களோ அதன்படியே செய்யலாமா?
இதில் செய்ய வேண்டிய கர்மம் எது? செய்யக்கூடாத கர்மம் எது என்பதை எப்படி அறிவது?
-
மிருகங்களின் வசிப்பிடங்களை மனிதர்கள் கைப்பற்றிக்கொண்டே வருகிறார்கள்.
சில வேளைகளில் மிருகங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதிக்கு வந்து மனிதர்களை கொல்கிறது.
இதனால் மனிதன் மிருகங்களைக் கொல்கிறான்.
இதில் எது கர்மம்? எது அகர்மம்?
மிருகங்களின் நோக்கத்தில் பார்த்தால் மனிதர்கள் செய்வது அகர்மம்
மனிதர்களின் பார்வையில் மிருகங்கள் செய்வது அகர்மம்
-
மனிதர்கள் காய் கனிகளை பயிரிடுகிறார்கள்.நன்றாக வளர்க்கிறார்கள். குறிப்பிட்ட காலம் வந்ததும் அவைகளை அறுவடை செய்கிறார்கள்.இதனால் மனிதர்களுக்கு நன்மை ஏற்படுகிறது.ஆனால் அந்த தாவரங்களுக்கும் உயிர் உள்ளதே! அதனுடைய பார்வையில் இது சரியா?
இதில் கர்மம் எது? அகர்மம் எது?
-
ஒரு ஊரில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டது.மனிதர்கள் உணவின்றி சாகும் நிலைக்கு சென்றார்கள்.
அந்த ஊரில் ஒரு கோவில் இருந்தது.சாமிக்கு படைப்பதற்காக தானிய தானிய கிடங்கு ஒன்று இருந்தது.
அதில் ஒரு வருடத்திற்கு தேவையான தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.
உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சிலர் அந்த கோவில் உணவுக்கிடங்கிலிருந்து திருட்டுத்தனமாக தானியங்களை கொண்டு வந்து தங்கள் ஊரில் உள்ள எல்லோருக்கும் கொடுத்தார்கள்.இதனால் ஊரில் உள்ளவர்கள் காப்பாற்றப்பட்டார்கள்.
இந்த விசயம் அரசனுக்கு தெரிய வந்தது. கோவில் பண்டக சாலையிலிருந்து உணவை திருடியவர்களை பிடித்து மரண தண்டனை விதித்தார் அரசர்.
திருடர்களுக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்பது அரச நீதி.
அதை நிறை வேற்றாவிட்டால் மக்கள் அவரை நீதிதவறியவர் என்பார்கள்.
இதை உதாரணமாக வைத்து பலர் திருட முற்படுவார்கள்
திருடாமல் இருந்திருந்தால் பல உயிர்கள் இறந்துபோயிருக்கும்.உயிர்களை காப்பதற்கு அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை
இதில் செய்ய வேண்டிய கர்மம் எது? செய்யக்கூடாத கர்மம் எது?
எனவே அறிஞர்கள்கூட எது செய்ய வேண்டிய கர்மம்? எது செய்யக்கூடாத கர்மம்? என்று தெரியாமல் குழம்பிப்போகிறார்கள்.
-
கர்மத்தின் போக்கை அறிவது கடினம்.
-
ஒரு காலத்தில் கணவன் இறந்த உடன் மனைவி உயிரைவிட்டுவிடுவாள்,அல்லது கணவனுடன் உடன்கட்டை ஏறி உயிரைவிடுவாள்.இது நல்ல கர்மம் என்று மக்கள் நினைத்தார்கள்.
ஆனால் காலம் செல்ல செல்ல கணவன் இறந்த உடன் மனைவி கண்டிப்பாக உடன்கட்டை ஏற வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. கணவன் எழுவது வயதை உடைய கிழவனாக இருப்பான்.மனைவி இருபது வயதை உடைய இளம் பெண்ணாக இருப்பாள். கணவன் இறந்த உடன் இவள் வலுக்கட்டாயமாக உடன் கட்டை ஏற வைக்கப்பட்டாள்.இவைகள் நமது சமுதாயத்தில் நடந்தன.
கணவன் இறந்தஉடன் மனைவி உடன்கட்டை ஏறுவது நல்ல கர்மம் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது.
பிற்காலத்தில் அதுவே தீய கர்மம் என்று ஒதுக்கும்படியாக ஆகிவிட்டது.
ஒரு காலத்தில் நல்லதாக தெரிவது இன்னொரு காலத்தில் தீயதாக மாறிவிடுகிறது.
-
கொல்லாமை என்பது உயர்ந்த பண்பு. எந்த உயிர்களையும் கொல்லக்கூடாது.
ஒரு ஊரில் உள்ள மக்கள் கொல்லாமையை தீவிரமாக பின்பற்றினார்கள்.
அவர்கள் யாரையும் எதற்காகவும் துன்புறுத்த விரும்புவதில்லை.
இன்னொரு கிராமத்தில் தீயவர்கள் பலர் இருந்தார்கள்.
அவர்கள் இந்த நல்ல கிராமத்திற்குள் புகுந்து அங்குள்ளவர்களை அடித்து,துன்புறுத்தி,கொலை செய்து,அந்த கிராமத்திலுள்ள பொருட்களை களவாடி,பெண்களை அடிமைகளாக இழுத்து சென்றார்கள்.
-
கொல்லாமை என்பது செய்ய வேண்டிய கர்மம் தான்.
அந்த கிராமத்தினர் அதைத்தான் பின்பற்றினார்கள்.ஆனால் அவர்களுக்கு ஏன் இந்த தண்டனை?
-
காலம்,இடம்,காரணம் இவைகளுக்கு ஏற்ப அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கிறது.
இன்று ஒரு செயல் செய்ய வேண்டிய செயலாக இருக்கும்.நாளை அது செய்யக்கூடாத செயலாக மாறிவிடும்.
ஒரு இடத்தில் ஒரு செயல் நல்ல வரவேற்றை பெறும்.அதே செயல் இன்னொரு இடத்தில் பலத்த எதிர்ப்பை கொடுக்கும்.
-
இதற்கு ஸ்ரீகிருஷ்ணர் கூறும் முடிவு என்ன?
-
கர்மண்யகர்ம ய: பஷ்யேதகர்மணி ச கர்ம ய:।
ஸ புத்திமாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத்॥ 4.18 ॥
4.18 யார் செய்யவேண்டிய கர்மத்தில், செய்யக்கூடாத கர்மத்தையும்(அகர்மம்), செய்யக்கூடாத கர்மத்தில் செய்யவேண்டிய கர்மத்தையும் (நன்மையில் தீமையையும், தீமையில் நன்மையையும்) காண்கிறானோ அவன், மனிதர்களுள் புத்திமான். அவன் யுக்தன் ஏற்கனவே எல்லா கர்மங்களையும் செய்தவன்.
-
எந்த செயலாக இருந்தாலும் அதில் நன்மையும் தீமையும் கலந்தே இருக்கும்.
ஒரு செயலில் நன்மை அதிகமாகவும் தீமை குறைவாகவும் இருந்தால் அது நல்ல செயல் அதைச்செய்யலாம்.
அதே வேளையில் தீமை அதிகமாகவும் நன்மை குறைவாகவும் இருந்தால் அதைச் செய்யக்கூடாது.அது அகர்மம்.
-
எந்த செயலைச் செய்தால் புண்ணியம் அதிகமாகவும் பாவம் குறைவாகவும் வருமோ அந்த செயல் நல்ல செயல் அது செய்ய வேண்டிய செயல்.
No comments:
Post a Comment