வகுப்பு-15 நாள்-5-1-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
மனிதன் விருப்பம் இல்லாவிட்டால்கூட ஏன் பாவத்தை செய்கிறான்?
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோகுணஸமுத்பவ:।
மஹாஷநோ மஹாபாப்மா வித்த்யேநமிஹ வைரிணம்॥ 3.37
3.37 ரஜோகுணத்தில் உதித்த இந்த காமமும்,கோபமும் எதையும் உண்ணவல்லது.
பெரும்பாபமுடையது. இதை விரோதி என்று தெரிந்துகொள்
காமமும் கோபமும் ரஜோ குணத்திலிருந்து உருவாகிறது.
ரஜோ குணம் என்பது தீவிரமான செயலைக் குறிக்கிறது.
ஒரு மனிதன் சமுதாயத்தில் வெற்றிபெற வேண்டுமானால் ரஜோகுணம் தேவை.
ஆனால் அந்த குணத்தின் இயல்பு காமமும்,கோபமும்.
காமத்தையும்,கோபத்தையும் ஒருவன் கடந்து செல்ல வேண்டுமானால் ரஜோகுணத்தை கடந்து சத்வ முணத்தில் நிலைபெற வேண்டும்.
தினசரி வேலை செய்து தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக் கொண்டிருக்கும் ஒருவன் சத்வகுணத்தில் நிலைபெறுவது என்பது இயலாத ஒன்று.
அனைத்து தேவைகளும் நிறைவேறியபின் அனைத்து ஆசைகளும் நிறைவேறியபின்,மனம் அமைதி அடைந்தபிறகு தான் சத்வகுணம் வருகிறது.
சத்வகுணத்தில் ஒருவன் நிலைபெற்ற பிறகுதான் காமத்தையும்.கோபத்தையும் கடந்துசெல்ல முடியும்.
காமமும் கோபமும் விரோதி என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
தூமேநாவ்ரியதே வஹ்நிர்யதாதர்ஷோ மலேந ச।
யதோல்பேநாவ்ருதோ கர்பஸ்ததா தேநேதமாவ்ருதம்॥ 3.38
3.38 எப்படி நெருப்பானது புகையினால் மூடப்பட்டிருக்கிறதோ,
கண்ணாடி அழுக்கினாலும், கர்பத்தில் இருக்கும் குழந்தை கர்ப்பபையினாலும் மூடப்பட்டிருக்கிறதோ,
அப்படியே காமம், குரோதத்தினால் ஞானம் மூடப்பட்டிருக்கிறது
ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா।
காமரூபேண கௌந்தேய துஷ்பூரேணாநலேந ச॥ 3.39
3.39 குந்தியின் மைந்தா, ஞானியின் நித்திய எதிரியும்,
காமமே வடிவெடுத்த, நிரப்ப முடியாத, திருப்தியடையாத இதனால்(காமம்,குரோதம்) ஞானமானது மூடப்பட்டிருக்கிறது
ஒரு இடத்தில் புகை சூழ்ந்துள்ளது என்றால் அதற்குள் நெருப்பு இருக்கிறது என்று அர்த்தம்.
ஆனால் நெருப்பை எரியவிடாமல் புகை சூழந்துள்ளது.
நெருப்பு எரிய என்ன செய்ய வேண்டும்?
புகையை நீக்கிவிட்டால் நெருப்பு தானாக எரியத்தொடங்கும்.
அதேபோல ஞானம் நமக்குள்ளே இருக்கிறது.ஆனால் அதை காமமும்,கோபமும் மூடியுள்ளது.
ஞானம் வரவேண்டுமானால் காமத்தையும்,கோபத்தையும் நீக்கினாலே போதும்.
கண்ணாடியில் முகம் பார்க்க வேண்டுமானால் கண்ணாடி தெளிவாக இருக்க வேண்டும்.
அழுக்கு மூடியிருந்தால் முகம் பார்க்க முடியாது.
இதின் இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும்.
மகாபாரத காலத்தில் மக்கள் பரவலாக முகம் பார்ப்பதற்கு கண்ணாடியை பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது. கண்ணாடியை வெளிநாட்டினர் கண்டுபிடித்ததாக சிலர் கூறுகிறார்கள்.அது தவறு.
-
இந்த்ரியாணி மநோ புத்திரஸ்யாதிஷ்டாநமுச்யதே।
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தேஹிநம்॥ 3.40
3.40 இந்திரியங்கள், மனம், புத்தி ஆகியவை அதற்கு(காமம்,குரோதம்) இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது. இவைகளால் ஞானத்தை மறைத்து தேகத்தில் இருப்பவனை மயக்குகிறது.
தஸ்மாத்த்வமிந்த்ரியாண்யாதௌ நியம்ய பரதர்ஷப।
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஷநம்॥ 3.41
3.41 ஆகையால் அர்ஜுனா, நீ முதலில் இந்திரியங்களை அடக்கி, ஞானத்தையும், ஞான விக்ஞானத்தையும் அழிக்கின்ற பாபவடிவமுள்ள இந்த (காமம்,குரோதத்தை) உறுதியுடன் ஒழித்துவிடு
-
காமம்,கோபம் இவற்றிற்கு இருப்பிடம் எது?
கண்,காது, போன்ற இந்திரியங்கள்.
பலவற்றை சிந்தித்துக்கொண்டிருக்கும் மனம்.
தெளிவாக முடிவெடுக்கும் புத்தி இவைகள்
இவைகள் எல்லாமே ஞானத்தை மறைத்திருக்கின்றன.
தேகத்திற்குள் இருப்பது யார்?ஆத்மா.
அதாவது நாம்தான்
நமது சுய ஸ்வரூபம் எல்லையற்றது
அதை உணராமல் இருப்பதற்கு காரணம் நம்மிடம் காமம்,கோபம் இவைகள் இருக்கின்றன.
காமத்தை கட்டுப்படுத்த முயற்சிசெய்தால் கோபம் செயல்பட ஆரம்பிக்கும்
கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்தால் காமமம் தலைதூக்க ஆரம்பிக்கும்
இந்த இரண்டும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கம் போல சேர்ந்தே இருக்கும்
குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இதுபற்றிய நல்ல அனுபவம் இருக்கும்
மனைவி அல்லது கணவன் கோபமாக இருந்தால் அதை நீக்குவதற்கு காம வயப்பட வேண்டியிருக்கும்.
அதேபோல அவர்கள் காமத்தில் ஈடுபாடு இல்லாதவர்களாக இருந்தால் சமுதாயத்தின்மீதோ அல்லது வேறு எதன்மீதோ அடிக்கடி கோபப்படுபவர்களாக இருப்பார்கள்.
ஒன்றை அடக்கும்போது இன்னொன்று தலைதூக்குகிறது
இந்த இரண்டையும் அடக்க வேண்டுமானால் என்ன செய்வது?
ஏவம் புத்தே: பரம் புத்த்வா ஸம்ஸ்தப்யாத்மாநமாத்மநா।
ஜஹி ஷத்ரும் மஹாபாஹோ காமரூபம் துராஸதம்॥ 3.43
3.43 அர்ஜுனா. இங்ஙனம் புத்தியைவிட மேலானதை அறிந்து, தன்னைத்தானே அடக்கி காமவடிவானதும், வெல்வதற்கு கடினமானதுமான எதிரியை அழித்துவிடு.
இந்த்ரியாணி பராண்யாஹுரிந்த்ரியேப்ய: பரம் மந:।
மநஸஸ்து பரா புத்திர்யோ புத்தே: பரதஸ்து ஸ:॥ 3.42
3.42 இந்திரியங்கள் மேலானவை என்று சொல்கிறார்கள்.
இந்திரியங்களைவிட மனம் மேலானது, மனத்தைவிட புத்தி மேலானது.
புத்தியைவிட மேலானது எது? அதை அறிய வேண்டும்.
புத்தியயைவிட மேலானது ஆத்மா. அதாவது நமது உண்மை ஸ்வரூபம்.
அதை அறிய வேண்டும்.
தன்னை அறிந்தால்,நமது உண்மை ஸ்வரூவம் எது என்பதை அறிந்தால்,காமத்தையும்,கோபத்தையும் கடந்து செல்ல முடியும்.
-
காமத்தையும்,கோபத்தையும் அடக்குவது மிகவும் கடினம் என்பது இதிலிருந்து தெரிகிறது
-
இந்த உலகத்தில் வாழும் மனிதர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் சிறிதாவது காமமும் கோபமும் இருக்கும்.
இந்த இரண்டையும் கடந்துவிட்டால் உடல் உணர்வை கடந்துவிடலாம்.
உடல் உணர்வை கடந்த நிலையில் அதிக நாட்கள் உலகத்தில் வாழ முடியாது.
இது பற்றி ஸ்ரீராமகிருஷ்ணர் கூறும்போது. உலகத்தில் வாழவேண்டும் என்ற ஆசை இருப்பவர்கள் காமத்தையும் கோபத்தையும் குறைக்க மட்டுமே முயலவேண்டும்.முழுவதும் நீக்க முயற்சிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
எதுவரை காமமும் கோபமும் இருக்கிறதோ அதுவரை உடல் இயங்கும்
உடல் இயங்குவதற்கு இந்த இரண்டும் அத்தியாவசிய தேவையாகும்.
-
ஸ்ரீகிருஷ்ணர் எப்போதும் காமத்தையும் கோபத்தையும் கடந்த நிலையில் இருக்கவில்லை.
துரியோதனது செல்பாடுகளால் பலமுறை அவர் கோபமடைகிறர்.
சிசுபாலனை கொல்கிறார்,பீஷ்மர்மீது கோபப்படுகிறார்.இன்னும் பல உதாரணங்களை கூற முடியும்.
அதேபோல அவருக்கு பல மனைவிகள் இருந்தார்கள்.பல குழந்தைகள் இருந்தார்கள்.
அதேநேரத்தில் காமத்தையும் கோபத்தையும் கடந்து செல்லவும் அவரால் முடிந்தது.
விஷ்வரூப தரினத்தின் போது தானே இறைவன் என்பதை அர்ஜுனனுக்கு காட்டினார்.
அவரிடம் எல்லாம் இருந்தது.
-
முக்தி அடைய வேண்டுமானால் காமத்தையும் கோபத்தையும் கடந்துசெல்ல வேண்டும்
ரஜோ குணத்தை கடந்து சத்வ குணத்தில் நிலைபெற்றிருக்க வேண்டும்.
ஆன்மாவில் நிலைபெற்றிருக்க வேண்டும்
No comments:
Post a Comment