Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 34

வகுப்பு-34  நாள்-13-2-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

யே சைவ ஸாத்த்விகா பாவா ராஜஸாஸ்தாமஸாஷ்ச யே।

மத்த ஏவேதி தாந்வித்தி ந த்வஹம் தேஷு தே மயி॥ 7.12 ॥

 

7.12   சத்துவகுணத்தில், ரஜோ குணத்தில்,தமோ குணத்தில் உருவான பொருட்கள் அனைத்தும்

என்னிடமிருந்தே தோன்றியவைகள் என்று அறிக.

 ஆனால் நான் அவைகளை சார்ந்து இல்லை. அவைகள் என்னை சார்ந்துள்ளன.

-

சத்வம்,ரஜஸ்,தமஸ் என்று மூன்று குணங்கள் இருக்கின்றன.

 

ரஜஸ் என்பது விலக்குதல்

தமஸ் என்பது கவர்தல்

சத்வம் என்பது சமநிலைப்படுத்துதல்

இந்த உலகத்தில் உள்ள எல்லா பொருட்களிலும், எல்லா மனிதர்களிடமும்,விலங்குகளிடமும் இந்த மூன்றும் செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது.

 

பூமி, சூரியனை சுற்றுவதற்கு காரணம் இந்த ரஜஸ்.

பூமி, சூரியனின் எல்லையைத்தாண்டி செல்லாமல் உள்ளுக்குள்ளே இழுப்பது தமஸ்

இந்த இரண்டையும் சரியான சமநிலையில் வைத்திருப்பது சத்வம்

 

ஒரு அணுவை எடுத்துக்கொண்டால்கூட அதிலும் இந்த மூன்று சக்திகளும் செயல்படுகின்றன.

இவைகள் மனிதர்களிடம் குணங்களாக செயல்படுகின்றன

 

வேலை செய்யும்போது ரஜஸ் செயல்படுகிறது

தூங்கும்போது தமஸ் செயல்படுகிறது

தியானிக்கும்போது சத்வம் செயல்படுகிறது

-

இனி பொருட்களை எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு இயல்பு உள்ளது

 

இயங்கிக்கொண்டே இருக்கும்பொருட்கள் ரஜஸ்

ஜடமாக இருக்கும்பொருட்கள் தமஸ்

ஒளியாக பிரகாசிப்பவை சத்வம்

-

விலங்குகளிடம் தமோ குணம் மேலோங்கியிருக்கிறது

மனிதர்களிடம் ரஜோ குணம் மேலோங்கியிருக்கிறது

தேவர்,தேவிகளிடம் சத்வ குணம் மேலோங்கியிருக்கிறது

இந்த மூன்றையும் கடந்து நிற்பவர் இறைவன்

-

த்ரிபிர்குணமயைர்பாவைரேபி: ஸர்வமிதம் ஜகத்।

மோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய: பரமவ்யயம்॥ 7.13 ॥

 

7.13 இந்த முக்குணங்களால் உருவான (சத்வம்,ரஜஸ்,தமஸ்) பொருட்களால் மயங்கி,

இதற்கு மேலாக இருக்கும் அழிவற்றவனான என்னை அறிவதில்லை.

-

உலகத்தில் உள்ள அனைத்துமே இந்த முக்குணங்களால் ஆனவை.

ஆனால் இறைவன் இந்த முக்குணங்களுக்கு அப்பால் இருக்கிறார்.

இந்த மூன்று குணங்களுக்கு அப்பால் இருக்கும் இறைவனை அறிய வேண்டுமானால் மூன்று குணங்களையும் கடந்துசெல்ல வேண்டும்.

தியானத்தில் ஈடுபட வேண்டும். அப்போது ரஜஸ் மற்றும் தமஸ் அடக்கப்படுகிறது. சத்வ குணம் மேலோங்குகிறது.

பின்பு படிப்படியாக சத்வ குணத்தையும் தாண்டி சென்று இறைவனை அடைய முடிகிறது.

-

தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா।

மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே॥ 7.14 ॥

 

7.14 உண்மையில் குணங்களால் ஆன என்னுடைய இந்த தேவமாயை தாண்டமுடியாதது.

யார் என்னையே சரணடைகிறார்களோ அவர்களே இந்த மாயையை தாண்டுகிறார்கள்.

-

இறைவனை அடைவதற்கு இரண்டு வழிகள் உள்ளன.

நானே இறைவன் என்று தியானிப்பது ஒரு வழி

நான் இறைவனின் பக்தன் என்று தியானிப்பது இன்னொரு வழி.

இறைவனின் பக்தன் என்று கருதிக்கொள்பவன் இறைவனிடம் சரணடைகிறான்.

இதனால் முக்குணங்களையும் கடந்துசெல்கிறான்.

பல்வேறு வேலைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் பக்தி மார்க்கத்தை பின்பற்றுவது நல்லது.

 

தேவ மாயை என்பது என்ன?

இந்த உலகம் ஒரு விளையாட்டு மைதானம்

இதில் விளையாடி யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களே விளையாட்டை விட்டு வெளியே செல்ல முடியும்.

இறைவன் பாரபட்சமற்றவர்.

தகுதியானவர்களே வெற்றி பெறுவார்கள்

மிருகங்கள் இந்த உலகத்தில் வாழவேண்டுமானால் உடல் வலிமை தேவை. எந்த விலங்கு அதிக உடல் வலிமையுடன் திகழ்கிறதோ அவைகள் வாழ்க்கைப்போராட்டத்தில் தொடர்ந்து நீடிக்கும்.

மனிதனைப்பொறுத்தவரை மனவலிமை தேவை. யாருக்கு அதிக மனவலிமை இருக்கிறதோ அவன் இந்த வாழ்க்கை போராட்டத்தில் தொடர்ந்து நீடிக்க முடியும்.

இந்த விளையாட்டை விட்டு வெளியேறுவதற்கு ஆன்ம வலிமை தேவை.

அது எப்படி வரும்?

இந்த உலக விளையாட்டை விளையாடி முடித்தவர்களுக்கு இதைப்பற்றிய பூரணஞானம் ஏற்படுகிறது.

அவர்களால் மட்டுமே இதைவிட்டு வெளியேற முடியும்.

இந்த உலக விளையாட்டாகிய தேவ மாயையை யார் உருவாக்கியது? ஏன் உருவாக்கப்பட்டுள்ளது? போன்ற கேள்விகளுக்கு பதில் எப்போது கிடைக்கும்?

இந்த விளையாட்டை கடந்து செல்லும்போது மட்டுமே கிடைக்கும். இந்த விளையாட்டிற்குள்ளே இருக்கும்போது தெரியாது.

 

பக்தர்கள் வழிபடும் இறைவனும் ஞானிகள் வழிபடும் இறைவனும் வேறு வேறா? இல்லை.

-

ஒரு மனிதன் படிப்படியாக முன்னேறி முடிவில் இறைவனாகிறான்.

இறைவனான பிறகு உருவம் மறைந்துவிடுகிறது.

உருவம் மறைவதற்கு சற்று முன்புவரை,இறைவனுடன் ஒன்று கலப்பதற்கு சற்று முன்புவரை ஒரு உருவம் இருக்கிறது.இந்த உருவம் தெய்வீகமானது.

இந்த தெய்வீக உருவத்தை பக்தர்கள் தியானிக்கிறார்கள்.

தெய்வீக உருவங்களின் எண்ணிக்கை கடக்கில் அடங்காது.

இது பக்தி மார்க்கம்.


No comments:

Post a Comment