Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

வகுப்பு-12  நாள்-31-12-2019

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

ஷ்ருதிவிப்ரதிபந்நா தே யதா ஸ்தாஸ்யதி நிஷ்சலா।

ஸமாதாவசலா புத்திஸ்ததா யோகமவாப்ஸ்யஸி॥ 2.53

 

2.53 எப்பொழுது பலவற்றை கேட்டு கலக்கமடைந்துள்ள உன்னுடைய புத்தியானது,

சமாதியில் அசைவற்றதாய், உறுதியாக, நிற்குமோ அப்பொழுது யோகத்தை அடைவாய்

 

காலையில் எழுந்து அமைதியான உட்காரலாம் என்று நினைத்தால் முடிவதில்லை.

சமுதாய பிரச்சினை, நாட்டு பிரச்சினை,உலகப்பிரச்சினை என்று எல்லா செய்திகளும் நம்மை தேடி வருகிறது.

இவைகளையெல்லாம் கேட்டு மனம் இன்னும் கலக்கமடைகிறது.

ஏற்கனவே குடும்பபிரச்சினை,நமக்குள்ளே நடக்கும் பிரச்சினைகள் என்று ஏராளம் இருக்கின்றது.

இதில் வெளியில் நடக்கும் பிரச்சினைகளை கேட்டு மனம் கலங்குகிறது.

இப்படியே காலையிலிருந்து இரவு வரை பல்வேறு பிரச்சினைகளைப்பற்றி நினைத்துக்கொண்டும்,பேசிக்கொண்டும் இருந்தால் மனநிலை பாதிக்கப்படுவது நிச்சயம்

 

நாம் முதலில் அமைதியான இருக்க வேண்டும்.அப்போதுான் குடும்பம் அமைதியாக இருக்கும்.

இப்போது என்ன செய்வது?

உலக பிரச்சினைகளைப்பற்றி சிந்திக்காமல் நமது வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருக்கவேண்டுமா?

அது சுயநலம் ஆகாதா?

 

நமது கடமை என்னவோ அதை முறையாக செய்துவிட வேண்டும்.இன்னொருவரின் செயல்களைப்பற்றி விவாதித்முதுக்கொண்டிருப்பது நமது வேலையல்ல.

 

நான் ஒரு கம்பெனியில் வேலை செய்துகொண்டிருப்பவனாக இருந்தால்,அந்த வேலையைப்பற்றி நினைப்பதும்,பேசுவதும் நல்லது. ஆனால் ரானுவத்தில் உள்ள ஒருவர் என்ன செய்கிறார்? நாட்டின் பிரதமர் என்ன செய்கிறார்? அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விவாதித்துக்கொண்டிருப்பது வீணான வேலை.

அது நமது கடமை அல்ல.

நான் ஒரு எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் ஆளும் கட்சியை விமர்சிக்கும் கடமை உண்டு.

ஆனால் தினசரி கூலி வேலைசெய்யும் ஒருவன் முதல்வரைப்பற்றி விமர்சிப்பது அவனது கடமை அல்ல.

அது கடமையை மீறிய செயல்

யாருக்கு என்ன கடமை கொடுக்கப்பட்டுள்ளதோ,அதை மட்டுமே செய்ய வேண்டும்.

அதையும் ஒழுங்காக திறமையாக செய்ய வேண்டும்.

 

சமாதி என்பது மனத்தின் சமநிலை.

ஸ்ரீகிருஷ்ணர் ஒரு யோகி.அதேநேரம் அவர் ஒரு அரசர்.

எதிரிகளை எதிர்த்து போரிட்டு பல முறை வெற்றி பெற்றவர்

தன்னை சுற்றி நடக்கும் எல்லாவற்றையும்  எப்போதும் விழிப்புடன் கவனித்துக்கொண்டிருப்பது ஒரு அரசனின் முக்கிய வேலை.அப்படி இருக்கும்போது ஸ்ரீகிருஷ்ணரால் எப்படி யோகியாக முடிந்தது?

 

கர்மயோகம் போதிப்பது அதுதான். செயல்களை செய்துகொண்டிருக்கும்போதே நீ யோகியாக முடியும்.

ஒவ்வொரு செயலையும் எப்படி செய்ய வேண்டும் என்ற நுணுக்கத்தை தெரிந்துகொள்ள வேண்டும்

 

புத்தியுக்தோ ஜஹாதீஹ உபே ஸுக்ருததுஷ்க்ருதே।

தஸ்மாத்யோகாய யுஜ்யஸ்வ யோக: கர்மஸு கௌஷலம்॥ 2.50

 

2.50 புத்தியுள்ளவன், இவ்வுலகில் நன்மை தீமை இரண்டையும் கடக்கிறான்.

ஆகையால் யோகத்தில் நிலைபெற்றிரு. 

திறமையாக கர்மம் செய்தல் யோகம் எனப்படுகிறது

 

திறமையாக செயல்புரிவதே யோகம்.

யோகம் என்பது எல்லா செயல்களையும் விட்டுவிட்டு இந்த உலகத்தைவிட்டே அகன்றுவிடுவதல்ல

திறமையாக செயல்புரிவதால் யோகம் அடையப்படுகிறது

 

நாம் பொதுவாக வேலை செய்யும்போது என்ன செய்கிறோம்?நமது மனம் என்ன செய்துகொண்டிருக்கிறது?

நமது மனம் அந்த வேலையில் முழு ஈடுபாட்டோடு செய்கிறதா? இதை கவனித்திருக்கிறோமா?

சிலர் வேலை செய்துகொண்டிருக்கும்போதே எதையாவது பேசிக்கொண்டிருப்பார்கள்.

சிலர் வேலை செய்யும்போது எதையாவது சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்

 

நாம் முதன்முதலில் காரை சாலையில் ஓட்டும்போது எவ்வளவு கனவமாக கார் ஓட்டியிருப்போம்.

அந்த நேரத்தில் மனம் முழுவதும்  ரோட்டின்மீதே இருக்கும். படிப்படியாக அந்த செயல் அனிச்சை செயலாக மாறியிருக்கும்.அதன்பிறகு கார் ஓட்டும்போது எதையெதையோ சிந்தித்துக்கொண்டே காரை ஓட்டிக்கொண்டிருப்போம்.

இதனால் என்ன ஆகிறது?

 

கார் ஓட்டும்போது கிடைத்திருக்கவேண்டிய அமைதியை,ஓய்வை இழந்துவிட்டோம்

கார் ஓட்டும்போது எதையும் சிந்திக்காமல் மனத்தை சமநிலையில் வைத்து ஓட்டிப்பாருங்கள்

ஒருவித அமைதியும்,ஓய்வும் கிடைப்பதை உணர்வீர்கள்.இதுதான் யோகம்

 

நாம் புதிதாக ஒரு வேலையை செய்ய துவங்கும்போது மனத்தின் பெரும்பகுதி அந்த வேலையில் சென்றுவிடும்.ஆனால் படிப்படியாக அதை நன்கு பழகியபின்னர் மனம் ஓய்வாகிவிடும்.

அந்த நேரத்தில் மனத்தை ஓய்வாக இருக்கவிடுங்கள்

 

யார் எந்த வேலையை செய்தாலும் சரி.சமையல் வேலை செய்யும் பெண்கள் டி.வி. பார்த்துக்கொண்டே அந்த வேலையை செய்கிறார்கள்.இது சரியல்ல. இதனால் மனத்தில் சஞ்சலம் அதிகமாகிறது

டி.வி பார்க்க வேண்டுமானால் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு முழு மனத்தையும் அதில் செலுத்தி பாருங்கள்.

 

எந்த வேலையைாக இருந்தாலும் சரி.அந்த வேலையோடு நம்மை முழுமையாக ஒன்றிணைத்துவிட்டால் அது யோகம்

அந்த நேரத்தில் மனத்தில் எண்ணங்கள் எதுவும் எழுவதில்லை.

கர்மயோகத்தின் ரகசியம் இதுதான். வேலைசெய்துகொண்டிருக்கும்போதே யோகத்தை அடைவது

 

இந்த உலகத்தில் இறைவன் அப்படித்தான் செயல்புரிந்துகொண்டிருக்கிறார்.

அவர் தொடர்ந்து செயல்புரிந்துகொண்டே இருக்கிறார்.அதேநேரத்தில் யோகத்திலும் இருக்கிறார்.

-

மே பார்தாஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிம்சந।

நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ கர்மணி॥ 3.22

 

3.22. பார்த்தா, எனக்கு செய்யவேண்டிய கடமை எதுவும் இல்லை.

மூன்று உலகங்களிலும், இன்னும் அடையாத ஒன்றை இனி அடையவேண்டும் என்ற அவசியம் கொஞ்சமும் இல்லை.ஆயினும் கர்மம் செய்துகொண்டேயிருக்கிறேன்.


No comments:

Post a Comment