Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-22

வகுப்பு-22  நாள்-19-1-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

நைவ கிம்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்।

பஷ்யஞ்ஷ்ருண்வந்ஸ்ப்ருஷஞ்ஜிக்ரந்நஷ்நம்கச்சந்ஸ்வபந்ஷ்வஸந்॥ 5.8 ॥

 

ப்ரலபந்விஸ்ருஜந்க்ருஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி।

இந்த்ரியாணீந்த்ரியார்தேஷு வர்தந்த இதி தாரயந்॥ 5.9 ॥

 

5.8,9 யுக்தன், தத்துவத்தை அறிந்தவன்

பார்த்தாலும், கேட்டாலும், தீண்டினாலும், நுகர்ந்தாலும், அருந்தினாலும், நடந்தாலும், உறங்கினாலும், சுவாசித்தாலும், பேசினாலும், உபாதைகளை கழித்தாலும், பிடித்தாலும், கண்விழித்தாலும், கண்மூடினாலும் கூட இந்திரியங்கள், இந்திரியார்த்தங்களில் செல்கின்றன என முடிவுசெய்து,

நான் ஒன்றையும் செய்யவில்லை என்று நினைப்பான்

 

யுக்தன் என்பவன் யார்?

யோகத்தை கடைபிடித்து அதில் வெற்றி கண்டவன்.

தான் ஆன்மா என்பது யோகிக்கு தெரியும்.

ஆன்மா செயல்புரிவதில்லை.

இந்த உலகம்  நியதிகளின் படி இயங்குகிறது.எல்லோரது உடலும் அந்த நியதிக்கு கட்டுப்பட்டது.

ஆனால் ஆன்மா உலகத்திற்கு அப்பாற்பட்டது.நியதிகளுக்கு அப்பாற்பட்டது.

கண் வெளி உலகைப்பார்க்கிறது.ஆன்மா பார்ப்பதில்லை.

காது கேட்கிறது. ஆன்மா எதையும் கேட்பதில்லை.

கண்,காது,மூக்கு,நாக்கு,தோல் போன்ற ஐந்து இந்திரியங்களும் அதற்குரிய பார்த்தல்,கேட்டல்,முகர்தல்,சுவைத்தல்,தொடுதல் போன்ற இந்திரியார்த்தங்களில் செல்கின்றன.

ஆன்மா இவைகளிலிருந்து அப்பாற்பட்டது.

-

இந்த உடலை இயக்குவது யார்? கண்கள் மூலம் உலகத்தை பார்ப்பது யார்?

காதுகள் மூலம் ஓசைகளை கேட்பது யார்?

நமது விருப்பம் இன்றி தானாக நிகழ்கின்றனவா?

-

இதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் தத்துவத்தை தெரிந்திருக்க வேண்டும்.

24 தத்துவங்களைப்பற்றி சாங்கியம் கூறுகிறது

 

புருஷன்-பிரகிருதி

-

புருஷன் மாற்றமடையாதது

பிரகிருதி 24 தத்துவங்களாக மாறுகிறது

 

1. அவ்யக்தம்(சத்வம்,ரஜஸ்,தமஸ் இயங்காதநிலை)

2.மஹத்-புத்தி

3.அகங்காரம்-நான் உணர்வு

4.மனம்

5-9. ஞானேந்தரியங்கள்(கண்,காது,மூக்கு,நாக்கு,தோல்)

10-14-கர்மேந்திரியங்கள்(வாக்கு, கைகள், கால்கள், உடற்கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் (குதம் மற்றும் சிறுநீர் குழாய்), மற்றும் ஆண்,பெண் பிறப்புறுப்புக்கள்

15-19  தன்மாத்திரைகள் அல்லது சூட்சும பிரபஞ்சம்

19-24 பஞ்ச பூதங்கள் அல்லது தூல பிரபஞ்சம் (நிலம்,நீர்,காற்று,வெப்பம்,ஆகாயம்)

 -

பிரபஞ்சம் என்றால் என்ன?பஞ்சபூதம் என்பது என்ன?

-

நிலம்(திடப்பொருட்கள்),நீர்(திரவங்கள்),காற்று(வாயுக்கள்),தீ(வெப்பம்),ஆகாயம்(வெளி)

இந்த ஐந்தும் அடிப்படை மூலங்கள்.சமஸ்கிருதத்தில் பஞ்சபூதம்

-

இந்த ஜந்தும் சேர்ந்து உண்டான கலவையால் இந்த உலகிலுள்ள அனைத்தும் உருவாகியிருக்கிறது அல்லது விரிவடைந்துள்ளது.அதனால் இதற்கு பிரபஞ்சம் என்று பெயர்.

-

ஒவ்வொரு பொருளிலும் இந்த ஐந்தும் கலந்திருக்கும்.எது அதிகமாக உள்ளதோ அதை வைத்து அது.திடம் அல்லது திரவம் என்று கூறுகிறோம்.

-

உதாரணமாக ஒரு கல்லை எடுத்துக்கொள்வோம்

-

கல் திடம் என்பது நமக்குத்தெரியும்.

கல்லை நுண்ணோக்கி மூலம் பார்த்தால் கோடிக்கணக்கான அணுக்கள் அதனுள் சுற்றிக்கொண்டிருப்பது தெரியும்.

இந்த அணுக்களின் இயக்கத்திற்கு காரணம் வாயு.

இந்த கல் ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையுடன் இருக்கும்.

சூடாக இருந்தால் ப்ளஸ் என்றும் குளிராக இருந்தால் மைனஸ் என்றும் கூறுகிறோம்

 

இந்த கல்லின் உள்ளே உள்ள அணுக்களுக்கு இடையே இடைவெளி இருக்கும்.

இது ஆகாசம்

இந்த கல்லை அதிகமாக சூடாக்கினால் அணுக்கள்விரிவடைந்து அது உருகிவிடும்.

அதாவது கல் திரவப்பொருளாக மாறிவிடும். திரவமாக மாறும் தன்மையும் அதனுள் இருக்கிறது.

 

நீரின் வெப்பத்தை குறைத்தால் அது பனிக்கட்டி என்ற திடமாக மாறிவிடும்.அதேபோல திடப்பொருட்களின் வெப்பத்தை கூட்டினால் அது திரவப்பொருளாக மாறிவிடும்.

 

எனவே ஒரு சாதாரண பொருளில் ஐந்து மூலம்பொருட்களும் கலந்துள்ளன.

-

ஒரு கல் எப்படியோ அப்படித்தான் மிகச்சிறிய மணல் துகளும்.அதேபோல்தான் மிகச்சிறிய அணுவும்.

அதேபோல்தான் மிகப்பெரிய கிரகங்களும் அமைந்துள்ளது.

-

பூமி நீர் கிரகம்.நீரின் அளவு அதிகமாக உள்ளது.சூரியன் வெப்ப கிரகம்,சில கிரகங்கள் வாயு கிரகம்.வாயுக்களால் நிறைந்திருக்கும்.

-

இந்த பிரபஞ்சம் மொத்தமும் இந்த ஐந்தின் கலவையால் உருவாக்கப்பட்டுள்ளது.

-

இவைகள் அனைத்தும் ஐடம் என்று அழைக்கப்படுகிறது.

-

திடப்பொருளை திரவப்பொருளாக மாற்றலாம்.திரவப்பொருளை வாயுப்பொருளாக மாற்றலாம்.வாயுப்பொருளை வெப்பஅலைகளாக மாற்றலாம்.வெப்பஅலைகள் ஆகாயத்தில் நிலைகொள்கின்றன.

-

ஆகாயம் என்பது  பொருள்களின் இடைவெளி.அது மட்டும்தான் எந்த அணுக்களாலும் ஆக்கப்படாதது.

-

இந்த ஐடப்பிரபஞ்சத்தை இயக்குவதற்கு சக்தி தேவைப்படுகிறது.

-

காற்று வீச வேண்டுமானால் சக்தி தேவை.நீர் பாய வேண்டுமானால் சக்தி தேவை. பூமி சுற்ற வேண்டுமானால் சக்தி தேவை.சூரியன் ஒளிர வேண்டுமானால் சக்தி தேவை.

-

இந்த சக்தியின் ஆதாரம் எது?

-

அது பிராணன்.

-

இந்த பிராணன் பல்வேறு சக்திகளாக மாறுகிறது.

-

கவரும் சக்தி,விலக்கும் சக்தி,சமன்படுத்தும் சக்தி என்ற மூன்று சக்திகள் பல்வேறு விதங்களில் கலந்து

-

காந்த சக்தி,மின்சக்தி,ஈர்ப்பு சக்தி,சுழலும் சக்தி என்று பல்வேறு சக்திகளாக இயங்குகிறது.

-

எங்கெல்லாம் இயக்கம் இருக்கிறதோ அவைகள் அனைத்தும் பிராணிலிருந்து வெளிப்பட்டவை

-

இப்போது ஒரு முடிவுக்கு வருவோம்.

-

பிரபஞ்சம் முடியும்போது திடப்பொருட்கள் எல்லாம் கடைசியில் ஆகாயத்தில் முடிகிறது. அதேபோல சக்திகள் அனைத்தும் பிராணனில் முடிகிறது.

-

பிரபஞ்சம் விரிவடையும்போது ஆகாயத்தில் நிலைபெற்றவைகள் மீண்டும் விரிவடைகின்றன.பிராணனிலிருந்து அனைத்து சக்திகளும் வெளிப்படுகின்றன.

-

இந்த ஆகாயம்,பிராணன் இந்த இரண்டும் தனித்தனியாக இருப்பதில்லை.இரண்டும் சேர்ந்தே இருக்கிறது.

-

ஒரு ஜடப்பொருளிலிருந்து அனைத்து சக்திகளையும் பிரிக்க முடியாது.சக்தியிலிருந்து ஜடப்பொருளை தனியாக பிரிக்க முடியாது.இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்தே இருக்கும்.

-

ஒவ்வொரு அணுவும் இயங்கிக்கொண்டிருக்கிறது.அதை இயங்காமல் யாராலும் நிறுத்திவைக்க முடியாது.

அதேபோல இயங்கிக்கொண்டிருக்கும் அணுவின் இயக்கத்திற்கு காரணமான சக்தியை யாராலும் தனியாக பிரிக்க முடியாது.

-

சரி இந்த ஆகாயம்,பிராணன் இவைகள் எங்கிருந்து வந்தன?

இந்த உலகத்தில் உள்ள பொருட்கள் எதுவும் சுயமாக இயங்காது.

அதை இயக்குவதற்கு ஒரு சக்தி தேவை.

-

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு உருவம் உண்டு.

காற்றிற்கு உருவம் உண்டா? ஒளிக்கு ஒருவம் உண்டா? என்று கேட்கலாம்

-

காற்று என்பது என்ன?

-

மின்விசிறி வேகமாக சுழலுகிறது.அப்போது அதன் அருகில் உள்ள அணுக்கள் வேகமாக தள்ளப்படுகிறது.

அவ்வாறு தள்ளப்படும் அணுக்கள் நம்மீது படுகிறது.அதை காற்று என்கிறோம்.

-

காற்றில் என்ன உள்ளது? வேகமாக இயங்கும் அணுக்கள்.

இந்த அணுக்களுக்கு உருவம் உண்டா? உண்டு.

-

அதேபோல பல்ப் எரிகிறது.

அதன் ஒளி பக்த்தில் உள்ள அணுக்களை ஒளிரச்செய்கிறது.

அணுக்களே இல்லை என்றால் ஒளி ஊடுருவ முடியாது.

-

எனவே ஒளியில் உள்ளதும் அணுக்கள்தான்.

இந்த அணுக்களுக்கு உருவம் உண்டு.

-

நமது கண்ணுக்கு தெரியாத பல உருவங்கள் இந்த உலகத்தில் உண்டு.

ஆனால் அவைகளுக்கும் உருவம் உண்டு

-

மிகப்பெரிய நட்சத்திரங்கள் முதல் மிகச்சிறிய அணுக்கள் வரை அனைத்திற்கும் உருவம் உண்டு.

-

சில உருவங்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருப்பதால் நம்மால் அதை ஒரு வரையறைக்குள் கொண்டுவர முடிவதில்லை.நம் கண்ணால் காண முடியவில்லை என்பதற்காக உருவம் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

-

இந்த உலகத்தில் உருவம் இல்லாத எதுமே இல்லை.

இந்த உருவங்கள் ஒவ்வொன்றும் ஏதோ ஒரு சக்தியினால் இயக்கப்படுகிறது.

அது ஈர்ப்பு சக்தியாக இருக்கலாம்,மின்சக்தியாக இருக்கலாம்,காந்த சக்தியாக இருக்கலாம் அல்லது வேறு பல சக்திகளாகவும் இருக்கலாம்

-

இந்த சக்திகள் எதுவும் தனியாக இயங்காது.

ஏதாவது ஒரு உருவம் இருந்தால்தான் அதனால் இயங்க முடியும்.

-

எனவே சக்தி,ஜடம் இரண்டும் சேர்ந்தது உருவம்

-

இந்த சக்தி எப்போதும் ஒரேபோல இயங்காது.

சில சேரம் அதிக சக்தி வெளிப்படும்,சில நேரம் குறைந்த சக்தி வெளிப்படும்.

இதனால் உருவங்கள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கின்றன.

-

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது.

-

நமது உடல் குழந்தையாக இருக்கும்போது ஒரு உருவத்திலும் இப்போது வளர்ந்து வேறு உருவத்திலும் உள்ளது.

-

இவ்வாறு தொடர்ந்து மாற்றங்கள் எங்கெல்லாம் உள்ளதோ,அங்கெல்லாம் அழிவு உள்ளது

-

எந்த உருவமும் நித்தியமாக அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது என்று சொல்ல முடியாது

-

மனித உடலாக இருந்தாலும்சரி, தேவ உடலாக இருந்தாலும் சரி,தெய்வ உடலாக இருந்தாலும் சரி. உடல் என்ற ஒன்று எங்கு இருக்கிறதோ அங்கே மாற்றம் இருந்துகொண்டே இருக்கும்

 

இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் ஜடம் மற்றும் சக்தியின் சேர்க்கையால் உருவானது என்று பார்த்தோம்.

-

இந்த இரண்டும் எங்கிருந்து வந்தது?

-

ஒரு அணுவை ஆராய்நதால் பிரபஞ்சம் முழுவதையும் பற்றி அறியலாம்

-

ஆனால் ஒரு அணுவைப்பற்றிய முழு அறிவு நம்மிடம் உள்ளதா?

-

என்றாவது ஒரு நாள் முழுவதுமாக நம்மால் அறிந்துகொள்ள முடியுமா?

-

முடியாது...

-

ஒரு சாதாரண அணுவைக்கூட எந்த காலத்திலும் முழுமையாக அறிய முடியாது

-

ஏன்?

-

ஏனென்றால் அதன் தொடக்கம் தெரியாது. முடிவு தெரியாது.அதை தெரிந்துகொள்ளும் ஆற்றல் நம்மிடம் இல்லை.ஏன் இல்லை என்பதை பிறகு பார்க்கலாம்

-

ஒரு அணு எங்கிருங்து வந்தது என்று ஆராயத்தொடங்கினால்,முடிவில் தெரியாது என்ற பதில்தான் வரும்.

-

ஒரு அணு கடைசியில் முடியும் இடம் எது என்று ஆராயத் தொடங்கினால், முடிவு தெரியாது என்ற பதில்தான் வரும்

-

-

ஒரு அணுவைக்கூட இந்த உலகிலிருந்து அழிக்க முடியாது. ஒரு அணு இன்னொரு அணுவாக பரிணாமம் பெறுமே தவிர அதை இல்லாமல் செய்ய முடியாது.

-

இந்த பிரபஞ்சத்தில் ஏற்கனவே என்ன உள்ளதோ அதிலிருந்து ஒன்றை கூட்டவோ ஒன்றை குறைக்கவோ யாராலும் முடியாது.

-

ஒன்று இன்னொன்றாக மாறுமே தவிர,ஒரு நாளும் இல்லாமல் போகாது.

-

ஒரு நாற்காலியை எடுத்துக்கொள்ளுங்கள்.

-

நாற்காலி என்பது பல அணுக்களின் சேர்க்கை.

நாற்காலியை அரைத்து பொடிப்பொடியாக்கினால் நாற்காலி என்ற அமைப்பு அழிந்துவிடும்,

ஆனால் அணுக்கள் இருக்கும்.

-

நாற்காலியை தீயிலிட்டு எரித்தால்கூட அதன் அணுக்கள் நுண்மையான அணுக்களாக மாறுமே தவிர முற்றிலும் இல்லாமல் போகாது.

-

பருமனாக சேர்க்கைகள் நுண்மையான சேர்க்கையாக மாறும்.நுண்மையான சேர்க்கைகள் பருமனான சேர்க்கையாக மாறும்.இது தான் பிரபஞ்சம்

-

இந்த உலகத்தில் உள்ள ஜடப்பொருட்கள் ஒரு நாளும் அழியாது.ஒன்று இன்னொன்றாக மாறும்.

-

அதேபோல இந்த உலகத்திலுள்ள சக்திகள் எதுவும் அழியாது. ஒன்று இன்னொன்றாக மாறும்

-

இந்த சக்தியும்,ஜடப்பொருட்களும் எங்கிருந்து வந்தன?

இதற்கு முன்பு ஏதாவது உண்டா?

 

இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜடப்பொருளுக்கும் ஒரு உருவம் உண்டு என்று பார்த்தோம்

-

இந்த உருவங்கள் ஒன்வொன்றிற்கும் ஒரு அடையாளம் உண்டு.அதை பெயர் என்று குறிப்பிடுகிறோம்.

-

பத்து மனிதர்கள் கூட்டமாக நடந்துசெல்லும்போது கந்தா என்று ஒருவர் தூரத்திலிருந்து அழைக்கும்போது கந்தன் என்ற பெயர் உள்ளவன் திரும்பிப் பார்ப்பான்.அது அவனுக்கான பெயர்.அவனது அடையாளம்

-

ஒரு வேளை அந்த பத்துபேரில் ஒருன் மட்டும் சிவப்பு கலர் சட்டை அணிந்திருக்கிறான்.தூரத்தில் ஒருவர் சிவப்பு கலர் சட்டை போட்டவரே என்று அழைத்தால்,அவன் மட்டும் திரும்பிப் பார்ப்பான் அதுவும் அவனுக்கான ஒரு அடையாளம்

-

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் உண்டு.அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். புதிதாக ஊருக்குள் வந்த ஒருவர் ,அந்த ஊரிலுள்ளவர்களை முதலில் அடையாளம் காணும்போது பெரிய உருவம்.சிறிய உருவம்,கறுப்பானவன்,வெள்ளையானவன் என்ற ரீதியில் மனதில் நியாபகம் வைத்திருப்பார்.படிப்படியாக பெயர் மனதில் நிற்கும்

-

எனவே மனிதர்களைப்பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாளம் உண்டு.இது ஒரு மனிதனிலிருந்து இன்னொருவனை வேறுபடுத்துகிறது. தத்துவவாதிகள் இதை நாமம்(பெயர்) என்று அழைக்கிறார்கள்.

-

பல நாட்டுக்காரர்கள் செல்லும் ஒரு கூட்டத்தில் பத்து இந்தியர்கள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஹே இன்டியன்ஸ் என்று ஒருவர் அழைத்தால் பத்துபேரும் திரும்பிப் பார்ப்பார்கள்.இதுவும் அவர்களுக்கான ஒரு அடையாளம்.

-

ஒரு கூட்டத்தில் மனிதர்கள்,ஆடு,மாடு எல்லாம் செல்வதாக வைத்துக்கொள்வோம். மே..மே.. என்று ஆடுபோல் கத்தினால் ஆடுகள் திரும்பிப் பார்க்கும்.இது ஒரு குறிப்பிட்ட விலங்கிற்கான அடையாளம்.

-

இதேபோல ஒவ்வொரு விலங்கும் தங்களுக்குண்டான ஒரு அடையாளத்தை வைத்துள்ளது.இது மனிதர்களுக்கு புரியாமல் இருக்கலாம்.ஆனால் அதை சுற்றியுள்ள அந்த இனத்தைசேர்ந்த விலங்குகளுக்கு புரியும்.

-

அபோல ஒவ்வொரு மரங்களும் தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை வைத்துள்ளது.

-

ஒவ்வொரு சிறிய அணுக்களும்கூட தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை வைத்துள்ளது.

-

அடையாளம் இல்லாத உருவம் எதுவும் இல்லை.இதை தத்துவமொழியில் சொன்னால் ஒவ்வொரு உருவத்திற்கும் ஒன்றோ அல்லது பலவோ நாமங்கள்(பெயர்கள்) உள்ளன.

-

தத்துமொழியில் உருவத்திற்கு ரூபம் என்று பெயர்.அடையாளத்திற்கு நாமம் என்று பெயர்.

-

நாம் தத்துவமொழியை பற்றி குழப்பிக்கொள்ள வேண்டாம். எளிய தமிழ்மொழியையே பயன்படுத்துவோம்

-

எனவே ஒவ்வொரு உருவமும் ஒரு அடையாளத்தை வைத்துள்ளது. இது மற்ற உருவத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக்காட்டுகிறது.தன்னை ஒத்த அன்னொரு உருவத்துடன் இணைவதற்கும் இந்த அடையாளம் பயன்படுகிறது.

-

இந்த பெயர் மற்றும் உருவம் உடைய அனைத்தும் சுதந்திரமானது அல்ல..இவைகள் இதைவிட பெரிய உருவம் உடையவைகளால் கட்டுப்படுத்தப்படுகிறது.

-

சுதந்திரமான உருவம் என்ற ஒன்று இந்த உலத்தில் இல்லை. பெயரில்லாத உருவம் என்ற ஒன்று இந்த உலத்தில் இல்லை

இந்த உலகத்தில் உள்ள அனைத்திற்கும் உருவம் உண்டு என்று பார்த்தோம்.இவைகளை இரண்டாக பிரிக்கலாம்.

 

1.உணர்ச்சி உள்ளவை.2.உணர்ச்சியற்றவை

-

மனிதனுக்கு உணர்ச்சி உள்ளது.மிருகங்களுக்கும்,புழு,பறவைகள் அனைத்திற்கும் உணர்ச்சி உண்டு,தாவரங்களுக்குகூட உணர்ச்சி உள்ளது.

-

ஒரு மனிதனின் காலில் தொட்டாலும்,கையில் தொட்டாலும், தன்னை தொட்டதாகவே உணர்வான்.இதற்கு தன் உணர்ச்சி அல்லது நான்-உணர்ச்சி என்று பெயர்.தத்துவமொழியில் அகங்காரம்.

இந்த உணரச்சி உடல் முழுவதும் பரவியிருக்கிறது.

-

ஒரு உடலை ஒன்றாக இணைத்து வைப்பது,இந்த தன்-உணர்ச்சி

-

கல்,மண்,இரும்பு போன்ற உலோகங்களுக்கு உணர்ச்சி இல்லை.

-

இந்த உலகில் உள்ள அனைத்து பொருட்களும்,உயிரினங்களும் காலம்,இடம்,காரணம் என்ற மூன்றினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

-

உலகிலுள்ள ஒவ்வொரு பொருளும் இயங்குகிறது.ஆனால் தானாக இயங்குவதில்லை.அதற்குமேல் உள்ள ஏதோ ஒன்று அதன் இயக்கத்திற்கு காரணமாக இருக்கிறது

-

உலகிலுள்ள பொருட்கள் அனைத்தும் பஞ்சபூதம் எனப்படும்.ஐந்தின் கலவை என்பதை பார்த்தோம்

-

ஜடப்பொருள் சக்தி இந்த இரண்டும் சேர்ந்தே இருக்கும். சக்தியில்லாத ஜடப்பொருள் என்ற ஒன்று உலகில் இல்லை.அதேபோல ஜடப்பொருள் இல்லாமல் சக்தியால் இயங்க முடியாது என்பதையும் பார்த்தோம்

-

எதற்கும் அழிவில்லை.ஒன்று இன்னொன்றாக மாறுமே தவிர இல்லாமல் போகாது என்பதை பார்த்தோம்.

-

ஒவ்வொரு உருவத்திற்கும் உரு அடையாளம் உண்டு என்பதை பார்த்தோம்

-

இனி உயிர்களுக்கு உண்டான இந்த உணர்ச்சி எங்கிருந்து வந்தது என்பதை பார்க்கப்போகிறோம்....

 

நான்-உணர்வு எங்கிருந்து வருகிறது?

-

மனம்

-

மனம் என்ற வார்த்தைக்கு (mind) என்று பொருள் கொள்ளக்கூடாது.

மனம் என்பது மூளை அல்ல..மூளைக்கு சித்தம் என்று பெயர்.அது மனத்தின் ஒரு பகுதி.

மனம் என்பது உடல் முழுவதும் பரவியிருக்கிறது.

-

மனம் மூன்று நிலைகளை உடையது.

-

விலங்குகளிடம் உள்ள மனத்திற்கு இயல்புணர்ச்சி அல்லது ஆழ்மனம் என்று பெயர்

-

சிந்திக்கும் மனிதனிடம் செயல்படுவது பகுத்தறிவு.அல்லது உணர்வுள்ள மனம்

-

தியானத்தில் மூழ்கியுள்ள யோகியிடம் செயல்படுவது புத்தி, அல்லது உணர்வு கடந்த மனம்.

-

புத்தியின் இருப்பிடம் புருவமத்தி.யாரிடம் புத்தி விழிப்படைந்துள்ளதோ  அவன் யோகி,ஞானி

-

ஓர் உயிர் முதல் ஆறறிவு உள்ள மனிதன் மேலும்,தேவர்கள்,ஆவிகள் உட்பட அனைவரின் மனமும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒட்டுமொத்த மனமும் சேர்ந்து பிரபஞ்ச மனம் அல்லது மஹத் என்று பெயர்.

-

மஹத்தின் என்பது ஒரு சர்வர்போல் உள்ளது.

இந்த உலககின் துவக்க காலம் முதல் கடைசி காலம் வரை உள்ள அனைத்து பதிவுகளும் அங்கே உள்ளது.

மஹத் என்பது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்துள்ளது.

-

ஆயிரம் வருடங்களுக்கு பின் என்ன நடக்கும் என்று பார்க்க வேண்டுமா?

பிரபஞ்ச மனத்தை ஆராய்ந்தால் போதும்.

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்தவைகளும் அங்கே பதியப்பட்டுள்ளது.

மஹத்தைப்பற்றிய ஒட்டுமொத்த அறிவையும் யாராலும் பெற முடியாது

-

பல கோடி ஆண்டுளுக்கு முன் பின் உள்ள அனைத்து பதிவுகளும் ஏற்கனவே மஹத்தில் சேர்த்து வைக்கப்பட்டுள்ளது.அதில் இருப்பதுபோல்தான் உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது.

 

படைப்பிற்கு காரணம் பிரபஞ்ச மனம் அல்லது வேதம் என்று பார்த்தோம்

-

பிரபஞ்சமனம் எங்கிருந்து வந்தது?

-

முழுமையான வளர்ச்சியடைந்த ஒரு தென்னை மரம் காய்கிறது.

பழுத்துவிழும் காயை உரிய முறையில் பத்திரப்படுத்தி வைத்து.பல  ஆண்டுகளுக்கு பின் முளைக்க வைத்தால் முளைவிடும்.

சில விதைகளை பல ஆயிரம் ஆண்டுகள் பத்திரப்படுத்தி பின் முளைக்க வைத்தால் முளைவிடும் என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

-

இந்த விதை என்பது பெரிய மரத்தின் ஒடுங்கிய அம்சம்.பெரிய மரத்தின் அத்தனை பண்புகளும் அதில் ஒடுங்கியிருக்கிறது.

-

இந்த ஒடுக்க நிலையில் அது காலம் என்ற தன்மையை கடந்துநிற்கிறது.

முளைவிட்ட பின்புதான் அதன் காலம் செயல்பட ஆரம்பிக்கிறது.

அதுவரை காலத்தை கடந்து இருக்கிறது

-

ஒரு மரத்திற்கு எப்படி விதை உள்ளதோ அதேபோல பிரபஞ்சத்திற்கும் ஒரு விதை உள்ளது.

-

அதை ஆதிமூலம் என்று அழைக்கிறார்கள்.

தத்துவத்தில் அவ்யக்தம் என்று பெயர்.இன்னும் பல பெயர்கள் உள்ளன.

-

இந்த ஆதிமூலம் என்பது ஒடுங்கியநிலையில் உள்ள பிரபஞ்சம்.

காலத்தை கடந்து நிற்கும் நிலை.

-

இந்தநிலையைக் கடந்து ஏதாவது உண்டா என்று நாம் கேள்வி கேட்க முடியாது.

ஏனென்றால் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒடுங்கிய பிறகு என்பதை ஏற்றுக்கொண்டால்,அதற்கு வெளியே என்ன என்று சிந்திக்க முடியாது.அப்படி சிந்தித்தால் அனைத்தும் ஒடுங்கியது என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாகிறது.

ஒரு அணுவை ஆராய்ந்தால் அது எல்லையற்றநிலையை அடைந்துவிடும்  பிரபஞ்சத்தின் எல்லையை நோக்கி சென்றால் அதுவும் எல்லையற்ற நிலையை அடைந்துவிடும் என்று பார்த்தோம்.

-

அணுவை துளைத்து செல்லும்போது கிடைக்கும் எல்லையற்றநிலையும் பிரபஞ்சத்தின் எல்லையை கடந்துசெல்லும்போது கிடைக்கும் எல்லையற்ற நிலையும் வேறு வேறா?

-

இல்லை... இரண்டு எல்லையற்றது என்று கிடையாது. எல்லையற்றது எப்போதுமே ஒன்றுதான்.

-

இந்த எல்லையற்ற நிலைக்கு பிரம்மம் என்று தத்துவத்தில் பெயர்.

-

ஒரு அணுவை ஆராய்தால் அது பிரம்மமாகிவிடுகிறது(எல்லையற்றதாகிறது) பிரபஞ்சத்தை கடந்தால் அது பிரம்மமாகிவிடுகிறது(எல்லையற்றது)

-

ஒவ்வொரு அணுவிற்கும் ஒரு மையப்புள்ளி இருக்கும்.ஒரு மனித உடலை எடுத்துக்கொள்வோம்.அதற்கும் ஒரு மையப்புள்ளி உண்டு.

-

மனிதனின் அமையப்புள்ளி எங்கே இருக்கிறது? உடலின் மையத்தில் இருக்கிறது.

-

அந்த மையத்தை ஆராந்தால் அது எல்லையற்றதை(பிரம்மத்தை) நோக்கி அழைத்துசெல்கிறது.

-

மனிதனுக்கு ஒரு வெளி எல்லை இருக்கிறது.அது எங்கே இருக்கிறது? பிரபஞ்சத்தின் வெளி எல்லைதான் மனிதனுக்கும் வெளி எல்லை.

-

பிரம்மம் என்றால் ப்ர+அஹம் . அஹம் என்றால் தன்உணர்வு அல்லது நான் உணர்வு. ப்ர என்றால் எல்லையற்ற. நான் உணர்வு எல்லையற்ற நிலையை அடைந்தால் பிரம்மம்

-

ஆத்மா என்றால் அஹம்+மா. அஹம் என்றால் நான உணர்வு .மா என்றால் மிகப்பெரிய. நான் உணர்வு மிகப்பெரிய அளவு எல்லையற்றதாக விரிவடையும்போது அது ஆத்மா

-

எனவே ஆத்மா,பிரம்மம் இரண்டும் ஒரே பொருள்தான்.பகவத்கீதையில் இரண்டு வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment