Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்-19

வகுப்பு-19  நாள்-13-1-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ்ததைவ பஜாம்யஹம்।

மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த ஸர்வஷ:॥ 4.11 ॥

 

4.11 யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ,அவர்களுக்கு நான் அப்படியே(அவர்கள் விரும்பியபடியே) இருக்கிறேன். பார்த்தா மனிதர்கள் எல்லா இடங்களிலும் என்னுடைய மார்க்கத்தையே(எல்லா மார்க்கமும் இறைவனுடையது) பின்பற்றுகிறார்கள்

 

இந்த உலகத்தில் உள்ள மனிதர்கள் எல்லோரும் இறைவனை வழிபடுகிறார்கள்.ஆனால் எல்லோரும் ஒரே மாதிரியாக வழிபடுவதில்லை.

காட்டில் வேட்டையாடி வாழ்ந்துவரும் மனிதனும் இறைவனை வழிபடுகிறான்.மண்டை ஓடுகளையும் எலும்புகளையும் வைத்து விலங்குகளை பலியிட்டு வழிபடுகிறான்.அவனைப்பொறுத்தவரை அதுதான் தங்கள் இனத்தை காக்கும் தெய்வம்.அது மட்டுமல்ல அந்த தெய்வம்தான் இந்த உலகத்தையே காக்கிறது என்று நினைக்கிறான்.

சமவெளியில் வாழும் மனிதன் கல்லினால் சிறு உருவம் வைத்து வழிபடுகிறான்.தனக்கு எது பிடிக்குமோ அவைகளையெல்லாம் படைத்து வணங்குகிறான்.அவனைப்பொறுத்தவைரை அவன் வழிபடும் தெய்வம்தான் உலகத்திலேயே உயர்ந்த தெய்வம்

இன்னும் சிலர் உருவம் வைத்து வழிபடுவதில்லை.ஆனால் தினமும் பல தடவை மண்டியிட்டு இறைவா! இறைவா என்று பிரார்த்திக்கிறார்கள்.அவர்களைப்பொறுத்தவரை அந்த தெய்வம்தான் உலகத்திலேயே உயர்ந்த தெய்வம்.

 

சிலர் எல்லா உயிர்களிலும் இறைவன்தான் இருக்கிறார் என்ற எண்ணத்தில் எல்லா உயிர்களையும் வழிபடுகிறார்கள்.அவர்களைப்பொறுத்தவரை இறைவன் எல்லா உயிர்களுமாக இருக்கிறார்.

 

இன்னும் சிலர் இறைவன் இந்த உலகத்தில் இல்லை.சொர்க்கத்தில் இருக்கிறார் .அங்கே சென்றால் பார்க்கலாம் என்கிறார்கள்

 

எந்த மனிதனை எடுத்துக்கொண்டாலும் அவன் வழிபடும் தெய்வம் உயர்ந்தது என்றே நினைக்கிறான்.

தான் வழிபடுவது தாழ்ந்தது என்ற எண்ணம் ஏற்படுமானால் பின்னர் அவனால் முழுமனத்துடன் வழிபட முடியாது.

 

யார் எந்த எந்த மனநிலையில் இருக்கிறார்களோ அந்த அந்த மனிநிலைக்கு ஏற்ப தெய்வத்தை உருவாக்கி வழிபடுகிறான்.

 

ஸ்ரீகிருஷ்ணர் என்ன சொல்கிறார்?

 

எல்லோரது மனத்திலும் இருப்பது ஒரே எண்ணம்தான். தான் வழிபடும் இறைவனே இந்த உலகத்தை படைத்து.காத்து.அழித்து வருகிறார். அந்த இறைவனே மழையை பெய்விக்கிறார்.மனிதர்களையும் விலங்குகளையும் படைத்துள்ளார் என்பதாகும்.

ஒரு காட்டுவாசியைக்கேட்டாலும் இதைத்தான் சொல்வான்,நகர வாசியைக் கேட்டாலும் இதைத்தான் சொல்வான்.

 

மனிதன் வளர்ச்சி அடைய அடைய அவனது வழிபாடுகளும் வளர்ச்சி அடைகிறது.ஆனால் இந்த உலகத்தை படைத்தது கடவுள்தான் என்ற கருத்து மாறுவதில்லை.

 

ஸ்ரீகிருஷ்ணர் உலகத்தில் உள்ள மார்க்கங்கள் எல்லாம் என்னுடைய மார்க்கமே என்று கூறுகிறார்.மனிதர்கள் எல்லா இடங்களிலும் என்னையே வெவ்வேறு விதமாக வழிபடுகிறார்கள் என்கிறார்.

 

வீதராகபயக்ரோதா மந்மயா மாமுபாஷ்ரிதா:।

பஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்பாவமாகதா:॥ 4.10 ॥

 

4.10 ஆசை, அச்சம், கோபம் நீங்கியவனாய் என்மயமாய் , என்னை அடைக்கலம் புகுந்தவர்களாய்,

ஞான தபசால் புனிதர்கனான பலர் என் இயல்பை அடைந்தார்கள் .

 

ஆசை,அச்சம்,கோபம் நீங்கியவர்கள் என் இயல்பை அடைகிறார்கள் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

அவரது இயல்பு என்ன?

 

இறைவனுக்கு இரண்டு நிலைகள் உண்டு என்று பார்த்தோம். ஒன்று செயல்படாத நிலை. இதற்கு பிரம்மம் என்று பெயர் .

இன்னொன்று பிரபஞ்சத்தை தனது உடலாகவும்,பிரபஞ்ச மனத்தை தனது மனமாகவும் கொண்டுள்ள பரமாத்மா

இந்த நிலைக்கு வேதாந்தத்தில் ஈஸ்வரன் என்று பெயர்.

 

ஈஸ்வரனது உடலை யாராலும் பார்க்க முடியாது.கோடான கோடி அண்டஙகளையும்.சந்திர சூரியர்களையும் தனக்குள்ளே கொண்டிருக்கும் அந்த உடலை அறியும் வல்லமை யாருக்கும் இல்லை.

அதேபோல ஈஸ்வரனின் மனத்தையும் யாராலும் அறிய முடியாது.உலகிலுள்ள மனிதர்கள்,விலங்குகள்,செடி.கொடிகள்,தேவர்கள் உட்பட இயங்கும்,இயங்காத அனைத்தையும் பற்றிய அறிவு பிரபஞ்ச அறிவு.இந்த அறிவை தன்னிடம் கொண்டுள்ளவரைப்பற்றி யாராலும் அறிந்துகொள்ள முடியாது.

-

இந்த மிக உயர்ந்த நிலையை அடைய முடியுமா என்றால் முடியும் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

ஆசை,அச்சம்,கோபம் நீங்கி  பிரபஞ்ச இயல்பை நோக்கி செல்ல வேண்டும்.அத்துடன் இறைவனை சரணடைய வேண்டும்.அகங்காரம் உடையவர்களால் உயர்ந்த நிலையை நோக்கி செல்ல முடியாது.ஞானத்தால் தன்னை புனிதமாக்கிக்கொண்டவர்கள் ஈஸ்வர இயல்பை அடைகிறார்கள்.

-

இறைவனை நோக்கி செல்லும் பாதை இரண்டு என்று பார்த்தோம்.

 

1.ஒன்று உடல் மற்றும் மனத்தை விட்டுவிட்டு ஆத்மாவை நோக்கி செல்லும் பாதை.இதைப்பற்றி சாங்கிய யோகம் என்ற அத்தியாயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கூறினார்

 

2.இன்னொன்று நமது சிறிய உடலை பிரபஞ்ச உடல் அளவுக்கு விரிவுபடுத்தி, நமது மனத்தை பிரபஞ்ச மனத்தின் அளவு விரிவுபடுத்தி பரமாத்மாவை நோக்கி செல்லும் பாதை.இதை அவர் யோகம் என்கிறார்.இதைப்பற்றி இன்னும் விரிவாக கூற இருக்கிறார்.

 

-

ஜந்ம கர்ம ச மே திவ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:।

த்யக்த்வா தேஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோ அர்ஜுந॥ 4.9 ॥

 

4.9 அர்ஜுனா,இவ்வாறு  யார் என்னுடைய இந்த திவ்யமான பிறப்பையும்

செயலையும் உள்ளபடி அறிகிறானோ அவன்

உடலைவிட்டு மறுபடியும் பிறப்பை அடைவதில்லை.

என்னையே அடைகிறான்.

 

இறைவனைப்பற்றியும்,இறைவனது செயல்களைப்பற்றியும் அறிய வேண்டுமானால் இறைவனைக்குறித்து தவம் செய்ய வேண்டும்.இறைவனை சரணடைய வேண்டும்.அப்படிப்பட்ட புனிதவான் உடலை விட்ட பிறகு இறைவனையே அடைகிறான்.அவன் இறைவனுடன் ஒன்றாகிவிடுகிறான். மறுபடி பிறப்பதில்லை.

-

சாங்கிய மார்க்கத்தில் செல்பவனும் மறுபடி பிறப்பதில்லை. யோக மார்க்கத்தில் செல்பவனும் மறுபடி பிறப்பதில்லை.

சாங்கிய மார்க்கத்தில் செல்பவன் பிரம்மத்துடன் ஒன்றாகிவிடுகிறான்.

யோக மார்க்கத்தில் செல்பவன் பரமாத்மாவுடன் ஒன்றாகிவிடுகிறான்.

-

இப்போது இவர்கள் இரண்டுபேரும் அடையும் நிலை வேறா? இடம் வேறா?

இல்லை. பிரம்மமும்,பரமாத்மாவும் ஒன்று தான்.


No comments:

Post a Comment