Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

வகுப்பு-10  நாள்-29-12-2019

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

யஜ்ஞார்தாத்கர்மணோ அந்யத்ர லோகோ அயம் கர்மபந்தந:

ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க: ஸமாசர॥ 3.9

 

3.9 யக்ஞத்திற்கான கர்மத்தை தவிர மற்ற கர்மத்தினால் இந்த உலகம் கட்டுப்பட்டிருக்கிறது.

குந்தியின் மைந்தா, அதனால் பற்றற்று கர்மத்தை நன்கு செய்

 

கர்மம் மூன்றுவகை 1.பறித்தல் 2. பங்கிடுதல் 3. படைத்தல்.

 

மிருகங்கள் உணவு உண்ணும்போது ஒன்றுக்கொன்று அடித்துக்கொள்ளும்.சகவிலங்குகளை உணவு உண்ண அனுமதிக்காது.தனது வயிறு நிறைந்தபிறகுதான் மற்றவைகள் உண்ண முடியும்.வலிமையான விலங்கிற்கு எல்லாம் கிடைக்கும்.வலிமையில்லாத உயிர் உணவின்றி சாக வேண்டியதுதான்.இங்கே உயிர் வாழ்வதற்கு உடல் வலிமை முக்கியம்

இந்த உலகத்தில் சில மனிதர்கள் இதேபோல இருக்கிறார்கள்.அனைத்தும் தனக்குத்தான் வேண்டும் என்று நினைக்கிறார்கள்.வலிமையில்லாதவர்களிடமிருந்து முடிந்தவரை பிடிங்கிக்கொள்கிறார்கள்.

 

பெரும்பாலான மனிதர்கள் பங்கிட்டு வாழும் இயல்புடையவர்கள்.

கூட்டாக சேர்ந்து வாழ்தல்,கிடைப்பதை பங்கிட்டு உண்தல்.

 

இதைவிடவும் உயர்ந்த ஒன்று உண்டு.அது படைத்தல்.

 தனக்கு கிடைப்பதை பிறருக்காக கொடுத்தல்.

இந்த பண்பு தான் யக்ஞம்

தான் துன்பப்பட்டாலும் பரவாயில்லை மற்றவர்கள் சந்தோசமாக வாழட்டும் என்று சிலர் நினைக்கிறார்கள்.

இவர்கள் மனிதர்களில் உயர்ந்தவர்கள்.இவர்கள் செய்யும் செயல் யக்ஞம்

நமது வாழ்க்கையில் ஒவ்வொரு செயலையும் யக்ஞமாக செய்யும்படி ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

இது முடியுமா? முடியும்.

ஒரு மருத்துவர் தன்னலம் கருதாமல் தனது மருத்துவ ஞானத்தை பிறரது நன்மைக்காக முழுமையாக பயன்படுத்தி வாழ்ந்தால் அது யக்ஞம்.

ஒரு வக்கீல் தனது தொழில்ஞானத்தை பிறரது நன்மைக்காக பயன்படுத்தினால் அது யக்ஞம்

ஒரு ஆசிரியர் தன்னலம் கருதாது மாணவனின் நலனில்  அக்கரை செலுத்தினால் அது யக்ஞம்.

ஒவ்வொரு தொழிலையும் யக்ஞமாக மாற்றிக்கொள்ளவேண்டும்.

தான் இறந்தாலும் பரவாயில்லை மற்றவர்கள் வாழட்டும் என்ற பொதுநலம் யக்ஞம்

உலக மக்கள் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒருவன் கோவிலுக்குசென்று வழிபாடு செய்தால் அது யக்ஞம்.தனக்காக வழிபாடு செய்தால் அது யக்ஞம் அல்ல.

உலக நன்மைக்காக யாகம் செய்தால் அது யக்ஞம்.

எங்கெல்லாம் தன்னத்தை துறக்கும் செயல் நிகழ்கிறதோ அதெல்லாம் யக்ஞம்

-

எனவே யக்ஞம் மேற்கொள்ளும் ஒருவனை உலகம் கட்டுப்படுத்தாது. அவன் விரைவில் யோகநிலையை அடைகிறான்.

-

அந்நாத்பவந்தி பூதாநி பர்ஜந்யாதந்நஸம்பவ:

யஜ்ஞாத்பவதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்பவ: 3.14

 

3.14 உணவிலிருந்து உயிர்கள் உண்டாகின்றன.

மழையிலிருந்து உணவு உண்டாகிறது.

யக்ஞத்திலிருந்து மழை உண்டாகிறது.

யக்ஞம் கர்மத்திலிருந்து உண்டாகிறது.

 

கர்ம ப்ரஹ்மோத்பவம் வித்தி ப்ரஹ்மாக்ஷரஸமுத்பவம்।

தஸ்மாத்ஸர்வகதம் ப்ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டிதம்॥ 3.15

 

3.15 கர்மம் வேதத்திலிருந்து உண்டாகிறது. வேதம்(அறிவு) ப்ரம்மத்திலிருந்து உண்டாகிறது என்று அறிந்துகொள். ஆகையால் எங்கும் நிறைந்துள்ள வேதம்,எப்பொழுதும் யக்ஞத்தில் நிலைபெறுகிறது

-

உயிர்கள் எப்படி உண்டாகின்றன?

உணவிலிருந்து.உணவு இல்லாவிட்டால் உயிர்களால் வாழ முடியாது

உணவு எங்கிருந்து உருவாகிறது? மழையிலிருந்து

மழை பெய்யாவிட்டால் கடல்வாழ் உயிரினங்கள்கூட வாழ முடியாது

 

மழை எப்படி உண்டாகிறது யக்ஞத்திலிருந்து

கடல்நீர் ஆவியாகி,மேகமாகி மழையாகப்பெய்கிறது.இந்த நிகழ்வு ஒரு யக்ஞம்.

யக்ஞம் என்பதன் அர்த்தம் என்ன? தனக்காக செய்யாமல் பிறருக்காக செய்தல்.

நீர் ஆவியாகி,மேகமாகி,மழையாகப் பெய்கிறதே! இந்த நிகழ்வு முழுவதும் பிறரது நன்மைக்காக நடக்கிறது.

 

சூரியன் வெப்பத்தையும் ஒளியையும் தருகிறது.இது ஒரு யக்ஞம். இப்படி வெப்பத்தையும் ஒளிமையும் தருவதால் உயிர்கள் வாழ்கின்றன.இதனால் சூரியனுக்கு ஏதாவது லாபம் ஏற்படுகிறதா?இல்லை

பிரதிபலன் கருதாமல் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் யக்ஞம்

 

யக்ஞம் எதிலிருந்து உருவாகிறது?

கர்மத்திலிருந்து(செயலிலிருந்து)

பிறருக்கு நன்மை நிகழவேண்டுமானால் செயல்புரியவேண்டும். ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டு பிறருக்கு நன்மை நடக்கட்டும் நன்மை நடக்கட்டும் என்று வெறுமனே சொல்லிக்கொண்டிருந்தால் நன்மை நடக்காது.

நன்மை தரக்கூடிய செயல்களை செய்யவேண்டும்

எனவே யக்ஞம் கர்மத்திலிருந்து உருவாகிறது.

கர்மம்(செயல்) எங்கிருந்து உருவாகிறது?

வேதத்திலிருந்து

வேதம் என்பது என்ன?

பிரபஞ்ச அறிவு.

பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் அறிவுதான் வேதம்.

இந்த பிரபஞ்ச அறிவிலிருந்துதான் செயல்கள் யாவும் நடைபெறுகின்றன.

ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் அறிவு இருக்கிறது.இந்த அறிவு அனைத்தின் ஒட்டுமொத்தம் வேதம்

வேதம் எதிலிருந்து வந்தது?

பிரம்மத்திலிருந்து

பிரம்மம் எங்கும் நிறைந்திருக்கிறது

பிரம்மம் அழிவில்லாதது

வேதம் எதில் நிலைபெற்றுள்ளது யக்ஞத்தில்

எப்படி?

வேதத்திலிருந்து  பிரபஞ்சம் அல்லது இயற்கை உருவானது

இயற்கை சக்திகள் பிரதிபலனை எதிர்பார்த்தா இயங்குகிறது?

காற்று ஏதாவது பலன் கருதியா வீசுகிறது?

சூரியன் உட்பட பிற கிரகங்கள் பிரதிபலன் கருதியா இயங்குகின்றன

இந்த பூமி பிரதிபலன் கருதியா இயங்குகிறது,

இல்லை. இந்த இயற்றை முழுவதுமே யக்ஞம் செய்துகொண்டிருக்கிறது

-

ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ :

அகாயுரிந்த்ரியாராமோ மோகம் பார்த ஜீவதி॥ 3.16

 

3.16 பார்த்தா,யார்  இவ்வுலகில் இவ்விதம் இயங்கிக்கொண்டிருக்கும் சக்கரத்தை பின்பற்றுவதில்லையோ அவன் பாபவாழ்க்கை வாழ்பவன். அவன் இந்திரியங்களில் பொருந்தியவனாய் வீணே வாழ்கிறான்.

-

இயற்கை முழுவதும் எப்படி பிறருக்காக தியாகம் செய்யும் நிலையில் இயங்குகிறதோ.அதேபோல மனிதனும் தியாக உணர்வுடன் செயல்களைச்செய்ய வேண்டும்.அப்படி செய்தால் அவனிடம் பாபம் வருவதில்லை.தனது சுயநலனுக்காக வேலை செய்தால் பாவம் வருகிறது.


No comments:

Post a Comment