வகுப்பு-31 நாள்-9-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
அஸம்ஷயம் மஹாபாஹோ மநோ துர்நிக்ரஹம் சலம்।
அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே॥
6.35 ॥
6.35 மனமானது அடக்க முடியாதது. அலைந்து திரிவது.
இதில் சந்தேகமில்லை.
ஆனால் குந்தியின் மைந்தா, தொடர்ந்த பயிற்சியினாலும்,
உலகியல் பற்றின்மையாலும் அடக்கமுடியும்.
-
அஸம்யதாத்மநா யோகோ துஷ்ப்ராப இதி மே மதி:।
வஷ்யாத்மநா து யததா ஷக்யோ அவாப்துமுபாயத:॥
6.36 ॥
-
6.36 மனதை அடக்க முடியாதவனால் யோகமானது அடைய
முடியாதது என்பது என் கருத்து.
தன்னை வசப்படுத்தியவனால், பல வழிகளில் முயற்சி
செய்பவனால், அடக்க இயலும்
-
மனத்தை அடக்குவதற்கு இரண்டு வழிகள் இருக்கின்றன.
-
உலக விவகாரங்களிலிருந்து முற்றிலும் ஒதுங்கியிருப்பவர்கள்,
மனத்தில் எழும் எண்ணங்களை அவ்வப்போது அகற்றி
எண்ணங்கள் அற்ற நிலையில் மனத்தை வைக்கிறார்கள்.
-
உலக விவகாரங்களில் ஈடுபட்டிருப்பவர்கள், இறைசிந்தனையை
மட்டும் வைத்துக்கொண்டு பிற எண்ணங்களை அகற்றி எப்போதும் இறைநினைவில் மூழ்கியிருக்கிறார்கள்
-
தொடர்ந்த பயிற்சியினால் மட்டுமே இந்த நிலையை
அடைய முடியும்.
இறைவன்மீதுகொண்டுள்ள பக்தியால் விரைவில் இந்த
நிலையை அடையலாம்.
மேலும் உலகத்தின்மீது உள்ள பற்றற்ற தன்மையாலும் இந்த நிலையை அடையலாம்.
உலகத்தின்மீது,உலகத்திலுள்ள பொருட்கள்மீது
பற்று இருந்தால் மனம் எப்போதும் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும்.எனவே மனத்தை
அடக்க பற்றற்ற நிலை அவசியம்.
எந்த வழியை பின்பற்றினாலும் சரி, மனத்தை அடக்க
முடியாதவனால் யோகத்தை அடைய முடியாது.
-
மனத்தை அடக்கியவன், யோகத்தை அடைந்தவனது மனநிலை
எப்படி இருக்கும்?
-
ஸர்வபூதஸ்தமாத்மாநம் ஸர்வபூதாநி சாத்மநி।
ஈக்ஷதே யோகயுக்தாத்மா ஸர்வத்ர ஸமதர்ஷந:॥
6.29 ॥
6.29 யோகத்தில் நிலைபெற்றவன் எங்கும் சமமான
பார்வையுடையவன்,
தன்னை எல்லா உயிர்களிடத்திலும், எல்லா உயிர்களையும்
தன்னிடத்திலும் காண்கிறான்.
(தானே எல்லா உயிர்களாகவும் ஆகியிருப்பதை காண்கிறான்)
-
யோகத்தில் நிலைபெற்றவன் ஆத்மாவை நேசிக்கிறான்.
ஆத்மாவே அனைத்து உயிர்களுமாக ஆகியிருக்கிறது என்பதை காண்கிறான். எனவே அனைத்து உயிர்களையும்
நேசிக்கிறான். எல்லா உயிர்களிலும் தன்னைக் காண்பதால் அவன் எப்போதும் அன்பு நிறைந்தவனாகிறான்.
-
ஸ்ரீகிருஷ்ணர் யோக நிலையில் வாழ்ந்தவர். அப்படியானால்
தீயவர்களை ஏன் அழித்தார்? அனைவரிடமும் சமமான அன்பு காட்டுபவர்களால் இப்படிப்பட்ட செயலை
செய்ய முடியுமா?
இதற்கு பதில் நமது வாழ்க்கையிலேயே இருக்கிறது.
தந்தை தன் மகன்மீது அன்பு வைத்திருக்கிறார்.அதேநேரத்தில்
மகன் தவறு செய்தால் தண்டிக்கிறார்.
அப்படி தண்டிப்பது மகனின் நன்மைக்காகவே.
அதேபோல யோகத்தில் நிலைபெற்றவர்கள்கூட தீயவர்களை
நல்வழிக்கு கொண்டுவருவதற்காக அவர்களை தண்டிப்பதுண்டு.
தீயவர்கள்மீதுள்ள அன்பினால்தான் இதை செய்கிறார்களே
தவிர வெறுப்பினால் அல்ல.
No comments:
Post a Comment