வகுப்பு-8 நாள்-26-12-2019
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசந।
மா கர்மபலஹேதுர்பூர்மா தே ஸங்கோ அஸ்த்வகர்மணி॥ 2.47 ॥
உனக்கு விதிக்கப்பட்ட கடமையைச் செய்ய மட்டுமே உனக்குப் பூரண உரிமை உண்டு.
செயல்களின் பலன்களில் உனக்கு அதிகாரமில்லை.
உனது செயல்களின் விளைவுகளுக்கு உன்னையே காரணமாகவும் எண்ணாதே.
செயலற்ற நிலையிலும் விருப்பங் கொள்ளாதே.
யோகஸ்த: குரு கர்மாணி ஸங்கம் த்யக்த்வா தநம்ஜய।
ஸித்த்யஸித்த்யோ: ஸமோ பூத்வா ஸமத்வம் யோக உச்யதே॥ 2.48 ॥
யோகத்தில் உறுதி கொள் அர்ஜுனா!
வெற்றி தோல்வியின் பற்றைத் துறந்து கடமையைச் செய்.
இதுபோன்ற மன ஒருமையே யோகம் என்று அழைக்கப்படுகின்றது.
-
கடமையைச் செய். பலனை எதிர் பாராதே.
வேலையை செய் பலனை எதிர் பார்க்காதே என்று பலர் கூறுகிறார்கள்.
வேலை செய்ய வேண்டும் சம்பளம் எதிர்பார்க்ககூடாதா? என்று கேட்கிறார்கள்
இதன் அர்த்தம் அதுவல்ல
கடமையைச் செய். பிரதிபலனை எதிர்பார்க்காதே என்பதாகும்
நாம் ஒவ்வொருவருக்கும் பல்வேறு கடமைகள் இருக்கின்றன.
பிள்ளைகள் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?
பெற்றோர்களின் வயதான காலத்தில் அவர்களை கண்ணியத்துடன் நடத்துவது.
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?
பிள்ளைகள் உரிய வயது வரும் வரை அவர்களுக்கு தேவையானவற்றை கொடுத்து காப்பது
கணவன் மனைவிக்கு செய்ய வேண்டிய கடமை.மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?
ஒருவருக்கொருவர் நட்பாக,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோடு கடைசிவரை வாழ்வது
தொழிலாளி முதலாளிக்கு செய்ய வேண்டிய கடமை என்ன? நஷ்டம் ஏற்பட அவன் காரணமாக இருக்கக்கூடாது.விசுவாசமாக உழைக்க வேண்டும்.
முதலாளி தொழிலாளிக்கு செய்ய வேண்டிய கடமை என்ன? அவனது உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை உரிய காலத்தில் கொடுப்பது.
ஒரு குடிமகன் நாட்டிற்கு செய்ய வேண்டி கடமை என்ன?
நாட்டின் வளர்ச்சிக்கு தன்னால் இயன்ற அளவு உதவியாக இருப்பது
நாட்டை ஆள்பவர்களின் கடமை என்ன?
குடிமக்களை பாதுகாப்பது
மனிதன் இயற்கைக்கு செய்ய வேண்டிய கடமை என்ன?
நிலம்,நீர்,காற்று போன்றவற்றை மாசுபடுத்தாமல் பாதுகாப்பது.பிற உயிர்களை அழிக்காமல் இருப்பது
இயற்கை மனிதனுக்கு செய்ய வேண்டி கடமை என்ன?
உணவு,நீர்,காற்று,ஒளி,இடம் போன்றவற்றைக் கொடுப்பது
இப்படி எல்லோருக்கும் பல கடமைகள் இருக்கின்றன.சிலவற்றை மட்டுமே இங்கே கொடுத்திருக்கிறேன்.
மனிதன் பிறந்ததிலிருந்து இறப்பது வரை கடமைகளால் கட்டப்பட்டுள்ளான்.
இந்த உலகத்தில் வாழவேண்டும் என்ற எண்ணம் உள்ள எல்லோருக்கும் கடமைகள் உண்டு.
எப்போதாவது ஒரு காலத்தில் கடமைகள் எல்லாம் முடிந்துவிடும் என்று நினைத்தால் அது தவறு.
தனிமையான இடத்திற்கு சென்று தவம் செய்யும் யோகிகளுக்கும் கடமைகள் உண்டு.
தான் பெற்ற ஞானத்தை பிறருடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய கடமை அவனுக்கு உண்டு.
இந்த வாழ்க்கையே வேண்டாம்.வாழ்ந்தது போதும் இனி முக்தி அடைவது மட்டுமே எஞ்சியுள்ளது என்று யார் நினைக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே கடமை இல்லை.
இந்த உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒருவன் தனது கடமைகளை முறையாகச் செய்ய வேண்டும்.
ஆனால் அதனால் கிடைக்கும் பலனில் ஆசைப்படக்கூடாது
உதாரணமாக
பெற்றோர்கள் பிள்ளைகளை கவனிப்பது அவர்களது கடமை.ஆனால் பிள்ளைகள் வயதான காலத்தில் தங்களை கவனிக்க வேண்டும்,பாதுகாக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.
அப்படி பிரதிபலனை எதிர்பார்த்து வளர்க்ககூடாது.
அதை செய்யாதே என்று கிருஷ்ணர் கூறுகிறார்.
உனது கடமையை முறையாக செய். அத்துடன் விட்டுவிடு. எதிர்காலத்தில் கவனிக்க வேண்டும் என்று கணக்குப்போட்டுக்கொண்டிருந்தால் நீ ஒருநாளும் யோகியாக முடியாது.
நாளை நடப்பதையே எண்ணிக்கொண்டிருந்தால் இன்றைய வாழ்க்கையை வாழமுடியாது
மக்கள் பொதுவாக எதிர்காலத்தை நினைத்து கவலையில் மூழ்கிக்கொண்டிருக்கிறார்கள்.
எதிர்காலத்தில் என் பிள்ளையின் கதி என்னவாகுமோ தெரியவில்லையே!
அல்லது எங்கள் கதி என்வாகுமோ தெரியவில்லையே! என்ற எண்ணத்தில் ஒவ்வொரு நாளையும் சோகத்தில் கழித்துக்கொண்டிருக்கிறார்கள்
அப்படியே பல ஆண்டுகள் கழிந்த பிறகு அவர்கள் நினைத்ததுபோல மோசமாக அமையவில்லை என்று வைத்துக்கொள்வோம் இப்போது இத்தனை ஆண்டுகள் வீணாக கவலைப்பட்டு கழிந்துவிட்டே.அந்த ஆண்டுகள் இனி மீண்டும் கிடைக்குமா? கிடைக்காது.
இனி கவலைப்பட எதுவும் இல்லை என்ற நிலையை அடையும்போது வாழ்க்கை முடியும் கட்டத்திற்கு வந்துவிடுகிறது.
அதன்பிறகுதான் மரணத்திற்குபின் என்னவாகுமோ என்ற கவலை வரத்தொடங்குகிறது.
-
எல்லா சந்தேகங்களும் நீங்கியபின்,எல்லா கவலைகளும் நீங்கியபின் யார் உடலை விடுகிறார்களோ அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.
பெரும்பாலான மக்களின் கடைசி கால வாழ்க்கை மிக மோசமாக இருக்கிறது. இதற்கு காரணம் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பிரதிபலனை எதிர்பார்த்தே வாழ்ந்து வந்தார்கள். இப்போது அவைகள் எதுவும் நிறைவேறவில்லை. நிறைவேறாத ஆசைகளால் மனம் சஞ்சலப்பட்டு வேதனையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.வாழும்போதே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்ந்திருந்தால் இந்த நிலையை அடைந்திருக்கமாட்டார்கள்.
ஸ்ரீகிருஷ்ணர் சொல்வது என்ன?
உனக்கு கொடுக்கப்பட்டுள்ள கடமையைச்செய்.
அதன் பிரதிபலனை எதிர் பார்க்காதே.
ஒருவேளை அதன்பிரதி பலன் நல்லதாக இருக்கலாம் அல்லது தீயதாக இருக்கலாம்
ஒருவேளை நான் செய்யும் செயல் எதிர்காலத்தில் தீமையைக்கொண்டுவந்தால் என்ன செய்வது?
ஒரு மனிதனுக்கு உதவுகிறோம். இதற்கு பதிலாக எதிர்காலத்தில் இவன் நமக்கு உதவுவானா? அல்லது நமக்கு தீங்கு செய்வானா?
ஒருவேளை தீங்கு செய்தால் என்ன செய்வது?
எனவே அந்த மனிதனுக்கு எந்த உதவியும்செய்யாமல் இருப்பதே நல்லது என்று நினைத்து கடமையைச் செய்வதிலிருந்து பின்வாங்காதே
செயல்களை செய்வதிலிருந்து உன்னை விடுவித்துக்கொள்ளாதே
செயல்களை செய்யாமல் இருக்காதே.
அப்படி இருந்தால் கடமையை செய்யாமல் இருப்பதால் விளையும் குற்றம் உன்னை வந்தடையும்.
ஒரு பெண்ணை சில ரவுடிகள் துரத்திச் செல்கிறார்கள். அந்த பெண் உன்னிடம் பாதுகாப்பு கேட்டு உன்னை அடைக்கலம் தேடி வந்துள்ளது. ரவுடிகள் உன்னை சூழ்ந்துள்ளார்கள்.இப்போது என்ன செய்வது?
அந்த ரவுடிகளை எதிர்த்தால் மரணம் நிச்சயம் என்பது உனக்குத்தெரியும்.
ஆனால் அந்த பெண்ணை பாதுகாக்க ரவுடிகளை எதிர்ப்பது ஒன்றே இப்போது உனது கடமை.
நீ என்ன செய்யப்போகிறாய்?
கடமையிலிருந்து விடுபட்டு உன்னை பாதுகாத்துக்கொள்ளப்போகிறாயா ?
அல்லது கடமையைச் செய்து உயிரை மாய்க்கப்போகிறாயா?
உயிர்போய்விடும் என்ற பயத்தினால் அதை செய்யாமல் விட்டால்,அந்த பெண்ணை ரவுடிகள் கொன்றுவிடலாம். அதனால் வரும் பாவத்தின் பெரும்பகுதி உன்னை வந்து சேரும்.
ஒருவேளை நீ ரவுடிகளை எதிர்த்து வீரமரணம் அடைந்தால் பெரிய புண்ணியம் உன்னை வந்துசேரும்.
எதிர்காலத்தில் உயர்ந்த பிறவி கிடைக்கலாம். மக்கள் தெய்வமாக வணங்குவார்கள்.
எப்படியும் அந்த பெண் ரவுடிகளால் இறக்கத்தான் போகிறாள் எனவே நமது உயிரையாவது காப்பாற்றிக்கொள்வோம் என்றுமட்டும் நினைக்காதே.
எனவே எதிர்காலத்தில் என்னநடக்கும் என்பதை நினைத்து உன்னை நியே குழப்பிக்கொள்ளாதே. இப்போது உனது கடமை என்ன? அதில் மட்டும் கவனம் செலுத்து அதை செய். கடமையிலிருந்து விலகி ஓடாதே
இப்படி கடமையை மட்டுமே செய்துகொண்டிருந்தால் கிடைக்கும் பலன் என்ன?
யோகம் கிடைக்கும்.
யோகம் என்றால் என்ன என்பதை இனி வரும் நாட்களில் பார்க்கலாம்...
No comments:
Post a Comment