வகுப்பு-11 நாள்-30-12-2019
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்
-
ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்
-
த்யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்கஸ்தேஷூபஜாயதே।
ஸங்காத்ஸம்ஜாயதே காம: காமாத்க்ரோதோ அபிஜாயதே॥ 2.62 ॥
2.62 இந்திரிய விஷயங்களை நினைக்கின்ற மனிதனுக்கு அவைகளிடமிருந்து பற்று உண்டாகிறது.
பற்றிலிருந்து ஆசை உண்டாகிறது. ஆசை நிறைவேறாவிட்டால் கோபம் வளர்கிறது.
க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்ரம:।
ஸ்ம்ருதிப்ரம்ஷாத் புத்திநாஷோ புத்திநாஷாத்ப்ரணஷ்யதி॥ 2.63 ॥
2.63 கோபத்தால், மனக்குழப்பம் உண்டாகிறது.
குழம்பியபின் சுயநினைவை இழக்கிறான், பின் புத்தி செயல்படுவதில்லை.
புத்தி இல்லாமல் அழிந்துபோகிறான்.
ஒரு மனிதன் ஏன் அழிந்துபோகிறான்?
அவனது புத்தி வேலை செய்யவில்லை.
புத்தி ஏன் வேலைசெய்யவில்லை?
மனக்குழப்பம் உருவாகியதால்
மனக்குழப்பம் ஏன் உருவானது?
கோபம் வந்ததால்
கோபம் ஏன் வந்தது?
ஆசையை நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கத்தால்
ஆசை ஏன் வந்தது?
உலகியல் பொருட்களை நினைத்துக்கொண்டிருந்ததால் அவைகள்மீது ஆசை வந்தது
-
இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொன்றும் இன்னொரு ஜீவனை கவர்ந்துகொண்டே இருக்கிறது
விளம்பரங்களை பார்க்கும்போது அதை வாங்கவேண்டும் என்ற எண்ணம் வருகிறது
இனிப்பு வகைகளை பார்க்கும்போது அதை சுவைக்க வேண்டும் என்ற ஆசை வருகிறது
நல்ல இசையை சிறிது கேட்கும்போது இன்னும் அதிகம் கேட்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.
கண் எப்போதும் எதையாவது பார்த்துக்கொண்டே இருக்க விரும்புகிறது
காது எதையாவது கேட்டுக்கொண்டே இருக்க விரும்புகிறது
ஒவ்வொரு புலன்களும் வெளி உலகத்திலிருந்து எதையாவது பெற வேண்டும் என்ற நோக்கத்திலேயே செயல்படுகிறது.
ஒரு ஆசை பூர்த்தியானபின் இன்னொன்றின்மீது ஆசை எழுகிறது
அது நிறைவேறியபின் இன்னொன்று.
மூன்றுவேளை சாப்பாடு கிடைத்தால் போதும் என்று ஏழை நினைக்கிறான்.
அது நிறைவேறியபின். நல்லவீடு வேண்டும் என்று நினைக்கிறான்.அது நிறைவேறியபின் கார் தேவைப்படுகிறது
பலகோடி சம்பாதித்த மனிதனின் ஆசைகூட அடங்கவில்லை
பெரிய நாடுகள் இன்னும் தங்கள் நாட்டை பெரிதாக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறன்றன.
இதற்கு ஒரு முடிவே இல்லை.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நிறைவேறாத ஆசைகள் கணக்கிலடங்காமல் இருக்கின்றன.
இவைகளில் நிறைவேறுவது கொஞ்சம் மட்டுமே.நிறைவேறாத ஆசைகளுடன் மனிதன் இறந்துபோகிறான்.
பிறகு மீண்டும் பிறக்கிறான்.மீண்டும் ஆசைகளை நிறைவேற்ற துடிக்கிறான்.மீண்டும் இறக்கிறான்
இந்த உலகத்திலுள்ள எல்லாமே எனக்கு சொந்தம் என்ற ஞானம் யாருக்கு வருகிறதோ அவர்கள் எதற்கும் ஆசைப்படுவதில்லை.
இந்த உலகத்திலுள்ள ஒவ்வொன்றும் பிரம்மதின் வெளிப்பாடு
நமது இயல்பு பிரம்மம்
நாமே உலகத்திலுள்ள ஆண்களாகவும்,பெண்களாகவும்,பொருட்களாகவும் ஆயிருக்கிறோம்.
இந்த ஞானம் யாருக்கு வருகிறதோ,அவன் எதற்கும் ஆசைப்படுவதில்லை
ஏனென்றால் அவன் ஆசைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவனே அனைத்துமாக இருக்கிறான்
-
ப்ரஸாதே ஸர்வது:காநாம் ஹாநிரஸ்யோபஜாயதே।
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஷு புத்தி: பர்யவதிஷ்டதே॥ 2.65
2.65 மனம் அமைதியடைந்தவனுக்கு எல்லா துக்கங்களுக்கும் அழிந்துபோகின்றன.
ஏனெனில் மனம் தெளிந்தவனுடைய புத்தி விரைவில் ஆத்மாவில் நிலைபெறுகிறது.
-
நாஸ்தி புத்திரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பாவநா।
ந சாபாவயத: ஷாந்திரஷாந்தஸ்ய குத: ஸுகம்॥ 2.66 ॥
2.66
யோகம் பயிலாதவனுக்கு புத்தி தன் வசம் இருப்பதில்லை.
யோகம் பயிலாதவனால் தியானம் செய்ய முடியாது.
தியானம் இல்லாதவனுக்கு அமைதி கிடைக்காது.
அமைதி இல்லாதவனுக்கு சுகம் எப்படி கிடைக்கும்?
-
துன்பத்தை நீங்ஙவேண்டுமானால் மனம் அமைதியாக வேண்டும்.
பல்வேறு ஆசைகளை நிறைவேற்றிக்கொண்டே வருவதால் துன்பம் போய்விரும் என்று சொல்ல முடியாது
மனம் அமைதி அடைய வேண்டும்.
மனம் அமைதியானபிறகுதான் ஆத்மாவில் நிலைபெற முடியும்
நிலையான இன்பம் என்பது ஆத்மாவிலிருந்து மட்டுமே கிடைக்கும்
அந்த இன்பத்தைப்பெற தியானம் செய்ய வேண்டும்.
தியானம் செய்ய வேண்டுமானால் யோகம் பயிலவேண்டும்
யோகம் பயிலாதவனுக்கு புத்தி தன்வசம் இருக்காது
-
யோகம் என்பது என்ன?
யோக: சித்த சுத்தி நிரோத: என்று பதஞ்சலியோக சாஸ்திரம் கூறுகிறது
சித்தத்தில் உள்ள எண்ணங்களை எல்லாம் நிறுத்துதல்
தியானத்தில் ஆழ்ந்து சென்று எதையும் சிந்திக்காமல் இருத்தல்.
அதை அடைய முதலில் கர்மயோகம் பயில வேண்டும்
நமக்கு விதிக்கப்பட்ட கடமைகளை பிரதிபலன் கருதாமல் செய்வதுதான் கர்மயோகம்
No comments:
Post a Comment