வகுப்பு-43 நாள்-25-2-2020
-
ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான
பாடங்கள்
ஒளி, இருள் என இரண்டு வழிகள் இருக்கின்றன.
ஒளி பிறவாமைக்கு அழைத்து செல்கிறது
இருள் மறுபிறப்புக்கு அழைத்து செல்கிறது.
-
பூமியில் பகல்,இரவு என்பது மாறிமாறிவருகிறது.
பூமி சூரியனைச்சுற்றுவதால் இந்த நிகழ்வு நடைபெறுகிறது.
பல்வேறு சூரியர்களையும்,சந்திரர்களையும்,கிரகங்களையும்
உள்ளடக்கிய உலகத்தை மொத்தமாக எடுத்துக்கொண்டால் அதற்கு ஒளி கொடுப்பது எது? இருளை உருவாக்குவது
எது?
-
மேல்நோக்கிய பயணம், கீழ் நோக்கிய பயணம் என்று
இரண்டு இருக்கிறது.
மனிதன் ஆன்மீக ரீதியான மேல்நோக்கி செல்லும்போது
அவனது சூட்சும சரீரம் ஒளி பொருந்தியதாக மாறுகிறது.
எந்த அளவுக்கு அதிக புண்ணியமும், அதிக ஆன்மீகமும்
நிறைந்தவனாக மாறுகிறானோ அந்த அளவுக்கு அதிகமான ஒளி பொருந்தியவனாக மாறுகிறான்.
அதேபோல ஒருவன் தீயவனாக,கொடியவனாக மாறும்போது
அவனது சூட்சும சரீரம் இருள் பொருந்தியதாக அழகற்றதாக மாறுகிறது
மனிதனின் அழகு என்பது அவனுக்குள் இருக்கும்
புண்ணிய பலனைப்பொறுத்து அமைகிறது. அதிக புண்ணிய கர்மங்களை செய்பவன் அழகு கூடிக்கொண்டே
செல்கிறது. மக்கள் அவனிடம் கவரப்படுகிறார்கள்.
சிலர் பிறக்கும்போதே அழகுடன் பிறக்கிறார்கள்.
அதற்கு காரணம் முற்பிறவியில் செய்த புண்ணிய பலன்.
முற்பிறவியில் செய்த புண்ணிய பலனின் காரணமாக
பெண்களுக்கு அழகும், ஆண்களுக்கு அறிவும் பிறக்கும்போதே ஏற்படுகிறது.
சிலர் சிறுவயதில் அழகாக இருப்பார்கள்.வயது
ஏற ஏற அழகு குறைந்துவிடும். புண்ணிய பலனை இழந்துவிட்டதே அதற்கு காரணம். கற்பு மிக்க
ஆணுக்கு அறிவும். கற்பு மிக்க பெண்ணுக்கு அழகும் அதிகரிக்கிறது.
சூட்சும சரீரம் ஒளி பொருந்தியதாக மாறமாற மக்களை
கவரும் சக்தியும் அதிகரிக்கிறது.
-
இந்த உலகத்தில் பல்வேறு உலகங்கள் இருக்கின்றன.
மனிதர்கள் வாழும் உலகத்தில் இருளும் ஒளியும்
மாறி மாறி வருகிறது.
மனிதன் இறந்த பிறகு தீயவர்கள் இருள் நிறைந்த
வாழ்க்கைக்கு செல்கிறார்கள். அவர்களது உடல் இருள் நிறைந்த உடலாக இருக்கிறது. ஒளியை
அவர்களால் காண முடிவதில்லை.
ஒரு மனிதனை முற்றிலும் இருள் நிறைந்த அறையில்
பல நாட்கள் அடைத்து வைத்தால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்டது அந்த வாழ்க்கை.
இதை பாதாள உலகம், கீழ் உள்ள நோக்கிய உலகம்,இருள்
உலகம், நரகம் என்று பல பெயர்களில் அழைக்கிறார்கள்.
சில வருடங்கள் ஆவிகள் இந்த இருளில் வாழ்ந்து
மிகப்பெரும் துன்பத்தை அனுபவித்துவிட்டு மறுபடி மிருகங்களாகவோ அல்லது மனிதனாகவோ பிறக்கிறது.
-
நல்லவன் இறந்த பிறகு ஒளி நிறைந்த உலகத்திற்கு
செல்கிறான். அவன் செய்த புண்ணியத்திற்கு ஏற்ப மேலும் மேலும் உயர்ந்த உலகங்கள் கிடைக்கின்றன.
அங்கே இருள் என்பதே இல்லை.எங்கும் ஒளிவெள்ளாமாக
இருக்கிறது.
அவ்வாறு மேல் உலகங்களுக்கு செல்பவர்கள் படிப்படியாக
முன்னேறி ஒளிக்கெல்லாம் ஒளியாகிய இறைவனை அடைந்து முக்தி பெறுகிறார்கள்.
-
ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வாறு கூறுகிறார்
-
ஷுக்லக்ருஷ்ணே கதீ ஹ்யேதே ஜகத: ஷாஷ்வதே மதே।
ஏகயா யாத்யநாவ்ருத்திமந்யயாவர்ததே புந:॥
8.26 ॥
8.26 ஒளியும் இருளும் ஆகிய இவ்விரண்டு வழிகள்
இயற்கையில் என்றென்றும் உள்ளன. ஒன்று மீண்டும் பிறவாமைக்கு அழைத்து செல்கிறது. மற்றொன்று
மறுபிறப்பைத் தருகிறது.
-
நைதே ஸ்ருதீ பார்த ஜாநந்யோகீ முஹ்யதி கஷ்சந।
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோகயுக்தோ பவார்ஜுந॥
8.27 ॥
8.27 பார்த்தா, இவ்விரண்டு வழிகளையும் அறிகின்ற
எந்த யோகியும், மோகத்தை அடைவதில்லை. ஆகையால் எப்பொழுதும் யோகத்தில் நிலைத்திருப்பவனாக
இரு
-
பாவம் செய்தால் இருள் நிறைந்த உலகத்திற்கு
செல்லவேண்டும் என்பதை யோகி நன்கு அறிந்துகொள்கிறான்.
எவ்வளவுதான் ஆசை காட்டினாலும் அவனால் பாவம்
நிறைந்த செயல்களைச் செய்ய முடியாது.
அவன் உலக ஆசைகளால் மயக்கம் அடைவதில்லை.
-
மக்கள் ஏன் பாவத்தை கொடுக்கும் செயல்களைச்செய்கிறார்கள்?
மக்களில் சிலர் உடனடி பலனை எதிர்பார்க்கிறார்கள்.
கொள்ளையடித்தால் உடனே பணம் கிடைக்கிறது.கொலை செய்தால் உடனே லாபம் கிடைக்கிறது.
உலகத்தின் இன்பங்களை எல்லாம் தாங்கள் விரைவில்
அனுபவிக்க நினைக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இன்பமாக இருந்தாலும், படிப்படியாக
மிகப்பெரிய துன்பத்திற்குள் அவர்களை தள்ளிவிடுகிறது.
-
வேதேஷு யஜ்ஞேஷு தப:ஸு சைவ தாநேஷு யத்புண்யபலம்
ப்ரதிஷ்டம்।
அத்யேதி தத்ஸர்வமிதம் விதித்வா யோகீ பரம் ஸ்தாநமுபைதி
சாத்யம்॥ 8.28 ॥
8.28 வேதங்களை ஓதுவதிலும், யக்ஞம் செய்வதிலும்,
தவம் செய்வதிலும், தானங்கள் கொடுப்பதிலும்கூட எந்த புண்ணியபலனாது சொல்லப்பட்டிருக்கிறதோ,
அதை அறிந்து யோகியானவன் அதையெல்லாம் கடந்து செல்கிறான் (புண்ணியபலன்களை துறந்துவிடுகிறான்)
ஆதிநிலையை (பிரம்மத்தை) அடைகிறான்.
-
வேதம் ஓதுவதால் புண்ணியம் கிடைக்கிறது. வேதத்தை
பிறருக்கு சொல்லிக்கொடுப்பதால் புண்ணியம் கிடைக்கிறது.
யக்ஞம் என்பது தியாகம் செய்வது. பிறருக்காக
தன்னிடம் உள்ளவற்றை தியாகம் செய்வதால் புண்ணியம் கிடைக்கிறது
தவம் செய்வதால் தன்னிடம் உள்ள பாவங்கள் எரிக்கப்படுகின்றன.உலக
நன்மைக்காக தவம் செய்தால் புண்ணியம் கிடைக்கிறது.
பல்வேறு விதமான தானங்கள் இருக்கின்றன. எல்லா
தானங்களாலும் புண்ணியம் கிடைக்கிறது.
இப்படி கிடைக்கக்கூடிய பல்வேறு புண்ணிய பலன்களை
யோகியானவன் தனது கடைசி காலத்தில் இறைவனிடம் கொடுத்துவிடுகிறான்.
அந்த புண்ணிய பலனை கொடுக்காமல் இருந்தால் என்னவாகும்?
அந்த புண்ணிய பலனினால் அவனுக்கு உயர்ந்த உலகங்களில்
உயர்ந்த பதவி கிடைக்கும்.
சில
லட்சம் ஆண்டுகள் அங்கே வாழ்ந்துவிட்டு, புண்ணிய பலன்கள் அனைத்தும் தீர்ந்த பிறகு மீண்டும்
மனிதனாகப் பிறக்கவேண்டிய சூழல் ஏற்படும்.
எனவே முக்தியைநோக்கி, பிறவாமையை நோக்கி செல்லும்
யோகி. தான் சேர்த்துவைத்துள்ள எல்லா புண்ணிய பலன்களையும் மக்களிடம் கொடுத்துவிட்டு
ஒளி நிறைந்த பாதையில் சென்று ஆதிநிலையான பிரம்மத்தில் ஒன்று கலக்கிறான்.
-
சில யோகிகள் புதிய மதங்களை உருவாக்குகிறார்கள்.
மக்களை புதிய பாதை வழியாக முக்திக்கு அழைத்து
செல்ல விரும்புகிறார்கள்.
அந்த யோகிகள் அவர்கள் முக்தி அடைவதில்லை.
சூட்சும உடலில் நெடுங்காலம் வாழ்கிறார்கள்.
மடங்கள்,ஆசிரமங்கள்,அமைப்புகளை நிறுவுகிறார்கள்.
சீடர் பரம்பரையை உருவாக்குகிறார்கள்.
ஒவ்வொரு நூற்றாண்டிலும் இப்படி பல புதிய மதங்கள்
உருவாகுகின்றன.
No comments:
Post a Comment