Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 30

வகுப்பு-30  நாள்-2-2-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

யதோ யதோ நிஷ்சரதி மநஷ்சம்சலமஸ்திரம்।

ததஸ்ததோ நியம்யைததாத்மந்யேவ வஷம் நயேத்॥ 6.26 ॥

 

6.26 சஞ்சலமானதும், அசையக்கூடியதான மனமானது எக்காரணத்தினால் அலைகிறதோ,

அதை அதிலிருந்து எடுத்து,  தன்வசத்தில்(ஆத்மாவிடம்) கொண்டுவர வேண்டும்.

 

தியானத்தின்போது உடலை அசையாமல் சிலைபோல வைக்கவேண்டும்.

ஆத்மாவின் இயல்புகள் குறித்து சிந்திக்க வேண்டும்.

நான் ஆத்மா.நான் பிறப்பற்றவன்.நான் மரணமற்றவன்.நான் எங்கும் நிறைந்தவன் என்று சிந்திக்க வேண்டும்.

 

சிறிது நேரத்தில் மனத்தில் பல எண்ணங்கள் தோன்றும்

மனம் என்பது அலைபாயும் எண்ணங்களையுடையது.

மனத்திற்கு மேலே இருப்பது புத்தி.புத்தியின் இயல்பு சாட்சி.

அனைத்து செயல்களையும் சாட்சிபோல நின்று கவனிப்பது புத்தியின் செயல்.

புத்தி எப்போதும் விழிப்பாக இருக்கும்..புத்தியில் நின்று அலைபாயும் எண்ணங்களை கவனிக்க வேண்டும்

-

மனத்தில் பல்வேறு எண்ணங்கள் எழுந்துகொண்டே இருக்கும்,சிறிது நேரத்தில் மனத்தை கவனிப்பதை மறந்துவிட்டு,அந்த எண்ணத்தின்போக்கிலேயே சென்றுவிடுவதை காண்போம்.

அப்போது நாம் புத்தியில் இல்லை.

சிறிது நேரத்திற்கு பிறகு சற்று விழிப்புற்று, மீண்டும் மனத்தை கவனிக்க தொடங்குகிறோம், மீண்டும் மனத்தின்போக்கில் சென்றுவிடுகிறோம்.

 

புத்தியில் நிற்பதற்கு எப்படிப்பட்ட பயிற்சி செய்ய வேண்டும்?

 

நாம் தியானம் செய்ய அமர்ந்தபோது ஒரு எண்ணம் தோன்றும் சிறிது நேரத்தில் அது மறைந்து இன்னொன்று தோன்றும் பின்பு அது மறைந்து இன்னொன்று தோன்றும் இவ்வாறு சில நிமிடங்கள் தொடர்ந்து பல எண்ணங்கள் தோன்றியிருக்கும்..

திடீரென்று விழிப்புநிலைக்கு மீண்டும் வருவோம்.அப்போது இதுவரை எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் மறந்துவிடும்.

நாம் செய்ய வேண்டியது என்னவென்றால்.

கடைசியாக எதை எண்ணினோம்,அதற்கு முன்பு எதை எண்ணினோம்,அதற்கு முன்பு எது என்று ஒவ்வொன்றாக நியாபகப்படுத்திக்கொண்டே வரவேண்டும்.

 

மீண்டும் ஆத்மாவைக்குறித்து சிந்திக்க வேண்டும். ஆத்மாவை தியானிக்க வேண்டும்.

என்ற முடிவுடன் இருப்போம்.

மீண்டும் மனத்தில் பல்வேறு எண்ணங்கள் எழும்.

மீண்டும் எண்ணங்களை பின்னோக்கி கவனித்து வரவேண்டும்

இவ்வாறு பல வருடங்கள் தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்.

சிலருக்கு மிக விரைவில் இந்த நிலை கைக்கூடும்.

 

புத்தியில் நின்று மனத்தை கவனிப்பவன் புத்தன்.

புத்தியில் நிலைபெற்ற பிறகு நமது விருப்பம் இல்லாமல் எந்த எண்ணங்களும் வராது.

நாம் எதை குறித்து சிந்திக்க வேண்டும் என நினைக்கிறோமோ அதுகுறித்த எண்ணங்கள் மட்டுமே வரும்.

-

யுஞ்ஜந்நேவம் ஸதாத்மாநம் யோகீ விகதகல்மஷ:।

ஸுகேந ப்ரஹ்மஸம்ஸ்பர்ஷமத்யந்தம் ஸுகமஷ்நுதே॥ 6.28 ॥

 

6.28 இவ்விதம் எப்பொழுதும் மனதை தன்னிடமே நிலைநிறுத்திய பாபம் நீங்கப்பெற்ற யோகியானவன், எளிதில் பிரம்மத்தை அடைவதால்வரும் பேரானந்தத்தை அடைகிறான்

 

முழுவதும் பாபம் நீங்கிய பிறகே எண்ணங்கள் அற்ற நிலையை அடைய முடியும்

எண்ணங்கள் இல்லாமல் விழிப்புற்ற நிலையில் இருக்கும்போது உள்ளுக்குள் இருந்து ஆனந்தம் சுரக்கிறது

இந்த நிலையில் தொடர்ந்து இருந்தால் முடிவில் பிரம்மஞானம் ஏற்படும்.


No comments:

Post a Comment