Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 26

வகுப்பு-26  நாள்-27-1-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்

-

அநாஷ்ரித: கர்மபலம் கார்யம் கர்ம கரோதி ய:।

ஸ ஸம்ந்யாஸீ ச யோகீ ச ந நிரக்நிர்ந சாக்ரிய:॥ 6.1 ॥

 

6.1 யார் கர்மபலனை சாராமல் செய்ய வேண்டிய கர்மத்தை செய்கிறானோ அவன் சந்நியாசியும் யோகியும் ஆகிறான். அக்கினியை பயன்படுத்தாதவனும். கர்மத்தை செய்யாதவனும் சந்நியாசி அல்ல.

-

சந்நியாசம் மேற்கொள்பவர்கள் சில விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள்.

-

1.அக்னியை பயன்படுத்தக்கூடாது. உணவை சமைப்பதற்கு அக்னி தேவை. தானே உணவை சமைத்து உண்ணக்கூடாது.பிற வீடுகளில் பிச்சை ஏற்றுத்தான் வாழ வேண்டும்

2. உடலை சூடுபடுத்திக்கொள்வதற்காக அக்னி  ஏற்றக்கூடாது

3.இருள் சூழ்ந்துள்ளபோதும் ஒளிக்காக அக்னி ஏற்றக்கூடாது

4.யாகம் வளர்ப்பதற்காக,இறை வழிபாட்டிற்காக அக்னி ஏற்றக்கூடாது.

-

இரண்டு கைகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடாது என்பற்காக ஒரு கையில் தண்டம் வைத்துக்கொள்வார்கள்.ஒரு கையால் சில வேலைகளை மட்டுமே செய்ய முடியும்.

தண்டத்தை கீழே வைத்துவிட்டு இரண்டு கைகளால் செய்யக்கூடிய வேலைகளை செய்யக்கூடாது.

-

கூரையுடன்கூடிய வீடுகளில் தங்கக்கூடாது.

ஒரு ஊரில் மூன்று நாட்களுக்குமேல் தங்கக்கூடாது.

ஒரு வீட்டில் ஒரு கைப்பிடி அன்னம் மட்டுமே பிச்சை ஏற்கவேண்டும்.

முடி வெட்டிக்கொள்ளக்கூடாது.

மடங்களை உருவாக்கக்கூடாது

-

சந்நியாசிகளுக்கு எந்த கடமையும் இல்லை. எனவே அவர்கள் எதுகுறித்தும் கவலைப்படக்கூடாது.

இயற்கை சீற்றத்தால் மக்கள் மடிந்துபோகிறார்களா? கவலைப்படக்கூடாது

எதிரே ஒரு சிங்கம் வந்து சிறிதுநேரத்தில் தனது உடலை சுக்குநூறாக்கப்போகிறதா? கவலைப்படக்கூடாது

உணவு கிடைக்காமல் பட்டினியால் சிறது நேரத்தில் இறந்துவிடும் சூழ்நிலை வரப்போகிறதா? கவலைப்படக்கூடாது.

தனக்காகவும் பிறருக்காகவும் இறைவனிடம் பிரார்த்திக்ககூடாது.ஏனென்றால் எல்லாம் அவரவர் விதிப்படி நடக்கிறது.அதை தடுக்க முயற்சிக்ககூடாது

சிலர் இல்லறத்தில் இருந்துகொண்டே இப்படிப்பட்ட மனநிலையில் வாழ்வார்கள்.

-

இன்னும் பல விதிமுறைகள் முற்காலத்தில் பின்பற்றப்பட்டன.

தற்காலத்தில் மடத்தில் வாழும் துறவிகள் முற்காலத்தைப்போல வாழும் சந்நியாசிகள் அல்ல.

அதேபோல தற்காலத்தில் வாழும் இல்லறத்தார்கள் முற்காலத்தைப்போன்றவர்கள் அல்ல.

-

இப்படிப்பட்ட சந்நியாசத்தை ஸ்ரீகிருஷ்ணர் ஏற்றுக்கொள்ளவில்லை.

-

நாம் முக்தி பெற வேண்டும் பிறரும் முக்தி பெற வேண்டும்.

ஒருவனுக்கு ஞானம் வந்தவுடன் செயல்களை விட்டுவிடுவதால் அவனுக்கு முக்தி கிடைக்கலாம்.ஆனால் பிறருக்கு ஒரு பயனும் இல்லை.

ஞானம் ஏற்பட்டபிறகு செயல்களில் ஈடுபட்டால் பிறருக்கும் ஞானம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்

-

எனவே கடமையை செய்ய வேண்டும். பலனை எதிர்பார்க்க கூடாது.

இந்த மனநிலையில் ஞானி செயல்புரியும்போது,அது மற்றவர்களுக்கும் ஊக்கத்தைக்கொடுக்கிறது.

-

முற்காலத்தில் இருந்த சந்நியாச முறைகளுக்கு மாற்றாக ஒரு புதியசந்நியாச முறையை ஸ்ரீகிருஷ்ணர் இங்கே அறிமுகம் செய்து வைக்கிறார்.

பலனை எதிர்பார்க்காமல் யாரால் வேலை செய்ய முடியும்?

ஞானிகளால் மட்டுமே முடியும்.

 

பலனை எதிர்பார்க்காமல் யார் வேலை செய்கிறானோ அவனும் சந்நியாசிதான்.

அப்படிப்பட்டவன் அக்னியை பயன்படுத்தலாம்.தனது உடலை காப்பாற்றுவதற்காக உணவை சமைத்து உண்ணலாம்

கூரையுள்ள வீட்டில் தங்கலாம். ஒரே இடத்தில் வசிக்கலாம்.பிறருக்கு ஞான உபதேசங்கள் வழங்கலாம்.பிறரின் துன்பத்தில் பங்குகொண்டு துன்பப்படலாம். கொடிய மிருகங்கள் வரும்போது உடலை காப்பாற்றிக்கொள்ளலாம். பிறருக்காக பிரார்த்தனை செயல்லாம். உலக நன்மைக்காக உழைக்கலாம்.

உடலை பாதுகாப்பாகவும்,ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதற்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யலாம்.

இந்த உடல் பலமாகவும்,ஆராக்கியமாகவும் இருந்தால் அதனால் பிறருக்கு நன்மை செய்ய முடியும்.

-

யம் ஸம்ந்யாஸமிதி ப்ராஹுர்யோகம் தம் வித்தி பாண்டவ।

ந ஹ்யஸம்ந்யஸ்தஸங்கல்போ யோகீ பவதி கஷ்சந॥ 6.2 ॥

 

6.2 பாண்டவா, எதை சந்நியாசம் என்று சொல்கிறார்களோ, அதையே யோகம் என்று அறிந்துகொள். ஏனெனில் சங்கல்பத்தை  துறக்காதவன் யோகியாவதில்லை

-

சங்கல்பம் என்பது ஒரு செயலை செய்ய வேண்டும் என்ற ஆசையால்,  எழும் உறுதியான எண்ணம்.

யோகம் என்பது ஜீவத்மா பரமாத்மாவுடன் இணைவது

-

சந்நியாசி இந்த உலகத்தில் பல்வேறு வேலைகளைச் செய்தாலும் அவனிடம் சங்கல்பம் இருக்கக்கூடாது.

சில துறவிகள் இந்த நாட்டில் உள்ள துன்பங்கள் அனைத்தையும் நீங்குவேன் என்று சங்கல்பம் மேற்கொள்வார்கள்.

இன்னும் சிலர் வேறு சங்கல்பங்களை வைத்துக்கொள்வார்கள்.

-

சந்நியாசி இப்படிப்பட்ட சங்கல்பங்களை வைத்துக்கொள்ளக்கூடாது.

-

சதாரண மக்கள் ஒரு சங்கல்பத்தை ஏற்று வேலை செய்வது நல்லது.

எல்லாம் இறைவனது விருப்படி நடக்கிறது நான் வெறும் கருவி மட்டுமே என்ற எண்ணம் துறவியின் மனத்தில் எப்போதும் இருக்க வேண்டும்.

தனது உடலைக்கொண்டு இறைவன் சில வேலைகளை செய்யலாம்.அந்த வேலை என்னுடையது அல்ல அது இறைவனுடையது என்ற எண்ணம் துறவிடம் இருக்கும்.

-

ஸ்ரீகிருஷ்ணர் போன்ற அவதாரபுருஷர்களிடம் சங்கல்பம் இருக்குமா?

இருக்கும்.

இறைவனது சங்கல்பத்தால்தான் இந்த உலகமே இயங்குகிறது.

சங்கல்பம் இருந்தால் மீண்டும் மீண்டும் இந்த உலகத்தில் பிறக்க வேண்டும்


No comments:

Post a Comment