Friday, 29 May 2020

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள் 48

வகுப்பு-48  நாள்-2-3-2020

-

ஸ்ரீமத்பகவத்கீதை-வாழ்க்கைக்கான பாடங்கள்

-

நான்குவிதமான வழிபாடுகளைப்பற்றி ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். 9.25

-

என்னை வழிபடுபவர்கள் என்னை அடைகிறார்கள்.

இதில் என்னை என்பதன் அர்த்தம் என்ன?

-

யோக மார்க்கத்தில் செல்பவர்களின் மனம் புருவமத்தியை அடையும்போது,

இந்த உலகத்தில் உள்ள எல்லாம் இறைவனே என்பதை அனுபவப்பூர்வமாக அறிகிறார்கள்.

இறைவனே மனிதர்களாகவும்,மிருகங்களாகவும்.தேவர்களாகவும், செடி கொடிகளாகவும், அசைவன,அசையாதவை,உடல்கள்,மனம்.புத்தி, அனைத்து கிரகங்கள்,சூரியர்கள் உட்பட இந்த உலகத்தில் தூறநிலையில் இருப்பவை, சூட்சும நிலையில் உள்ளவை. பல்வேறு உலகங்களில் வாழும் தேவர்கள் உட்பட அனைவரும் இறைவனின் வெளிப்பாடுகளாகவே தெரிகிறது.

 

 

அந்த உயர்ந்த நிலையை அடைந்த பின்,இன்னும் மேலே சென்று உச்சந்தலையில் உள்ள சகஸ்ராரத்தை அடையும்போது உருவமற்ற பிரம்மத்தின் காட்சி கிடைக்கிறது.அதில் ஒன்றுகலக்கும்போது  உடல் செயலற்றுவிடுகிறது.

-

சிலர் பிரம்மத்துடன் ஒன்று கலப்பதில்லை.ஆனால் மீண்டும் உடலுக்குள் வருவதில்லை.

அப்படிப்பட்டவர்கள் மிகவும் சூட்சுமமான ஒளி உடலில் மிகஉயர்ந்த லோகத்தில் பிரம்ம தியானத்தில் ஆழந்திருக்கிறார்கள்.பல கோடி ஆண்டுகள் அந்த நிலையிலேயே இருக்கிறார்கள்.

அவர்களுக்கு ஒரு உடல் இருக்கிறது. அது மிக உயர்ந்த ஒளியுடன் கூடியது.

இந்த உலகம் பலகோடி ஆண்டுகளுக்கு பிறகு எப்போது மீண்டும் பிரகிருதியில் ஒடுங்கும்போது,அவர்களது உடலும் பிரகிருதியில் ஒடுங்குகிறது. அப்போது அவர்கள் பிரம்மத்தில் ஒன்றுபடுகிறார்கள்.

ஒவ்வொரு நூற்றாண்டிலும் பல மகான்கள் இந்த உயர்ந்த உலகத்தில்  தியானத்தில் மூழ்கிக்கிடக்கிறார்கள்.

-

சிலர் பிரம்மத்துடன் ஒன்று கலக்காமல். அங்கிருந்து மீண்டும் உடல் உணர்வுக்கு வருகிறார்கள்.

இந்த உலகத்திற்கு வருகிறார்கள்.

பிரம்மஞானம் பெற்ற ஒருவர் மக்களுக்கு உதவுவதற்காக அதிலிருந்து கீழிறங்கி சாதாரண மனிதனாக வருகிறார்.

இந்த உலகத்தில் பல்வேறு செயல்களை செய்த பிறகு.மீண்டும் பிரம்மத்தில் ஒன்று கலப்பதில்லை.

அவரது செயல்கள் இன்னும் நிறைவுபெறவில்லை.

இந்த உலகத்தில் வாழும் மனிதர்களுக்கு முக்திகொடுக்கவேண்டிய பொறுப்பை எடுத்துக்கொள்கிறார்.

அவர் மேலான உலகத்தில் ரிஷிகள் ஆழந்த தியானத்தில் மூழ்கிருப்பது போல இருப்பதில்லை.

அதைவிட சற்று கீழ்நிலையில் புதிய உலகம் ஒன்றை உருவாக்குகிறார்.அங்கே தனது தேவியுடன் வசிக்கிறார்.

அவருக்கும் அவரது மனைவிக்கும் அழகான ஒளி உடல் ஒன்று இருக்கிறது.

அந்த உருவங்களை பக்தர்கள் தியானம் செய்கிறார்கள்.

பக்தர்களின் பக்திக்கு கட்டுப்பட்டு இறைவன் காட்சி கொடுகிக்கிறார்.

சில பக்தர்கள் அந்தபுதிய உலகத்தில் சென்று நீண்ட நாட்கள் வாழவேண்டும்.தெய்வீக உருவத்துடன்கூடிய இறைவனை எப்போதும் கண்டுகொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

-

இப்படிப்பட்ட உலகங்கள் பல இருக்கின்றன. இவைகள் அனைத்திற்கும் பிரம்மலோகம் என்று பெயர்.

சிவனை வழிபடுபவர்கள் கைலாயம் என்கிறார்கள். விஷ்ணுவை வழிபடுபவர்கள் வைகுண்டம் என்கிறார்கள்.

இரண்டும் இரண்டு உலகங்கள். இரண்டும் தனித்தனியானவை.

இந்த இரண்டுதான் உள்ளன.வேறு இல்லை என்று நினைக்கக்கூடாது. பல உலகங்கள் இதேபோல இருக்கின்றன. இவைகள் தற்காலிகமானவை.

இந்த உலகத்தில் வசிப்பவர்கள்கூட மறுபடி பிறக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

-

அர்ஜுனா, பிரம்மலோகம் வரை எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன.

குந்தி மகனே! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை 8.16

-

 

இந்த அனுபவத்தில் நாம் மூன்று நிலைகளை கவனிக்கிறோம்.

 

1.புருவமத்தியில் இருக்கும்போது. இந்த உலகத்தில் உள்ள அனைத்துமே இறைவனால் சூழப்பட்டுள்ளதன் காட்சி கிடைக்கிறது

2.உச்சந்தலையில் இருக்கும்போது மேலே கண்ட காட்சிகள் எல்லாம் மறைந்துவிடுகிறது. அப்போது  உலகமே ஒடுங்கிவிடுகிறது. உலகத்திலுள்ள உயிர்கள்,கிரகங்கள் உட்பட  ஒட்டுமொத்தமும் பிரகிருதியில் ஒடுங்கிவிடுகிறது.அந்த நிலையில் உருவமற்ற பிரம்மத்தின் காட்சி கிடைக்கிறது. தானும் பிரம்மமும் ஒன்று என்ற ஞானம் ஏற்படுகிறது.

3.மேல் உலகத்தில் தேவதேவியாக பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும்நிலை.பக்தர்களுக்கு முக்தி கொடுக்கும் நிலை.

-

சிலர் இந்த மூன்று அனுபவங்களையும் சேர்த்து கூறுகிறார்கள்.

அதாவது இறைவனே உலகத்தில் உள்ள அனைத்துமாக ஆகியிருக்கிறார்.அதற்கு அப்பாலும் பிரம்மமாக அவரே இருக்கிறார்.பக்தர்களின் பக்திக்கு கட்டுப்பட்டு காட்சிகொடுக்கிறார்...

 

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது.

இறைவனே இந்த உலகமாக ஆகியிருக்கிறார் என்ற காட்சி கிடைக்கும்போது பிரம்மத்தின் காட்சி கிடைப்பதில்லை.

பிரம்மத்தின் காட்சி கிடைக்கும்போது. இறைவனே இந்த உலகத்திலுள்ள அனைத்துமாக ஆகியிருக்கிறார் என்ற காட்சி கிடைப்பதில்லை.

-

பிரம்மத்தின் காட்சி கிடைக்கும்போது  பிரபஞ்சம் ஒடுங்கிவிடுகிறது.

இறைவனே பிரபஞ்சமாக இருக்கும் காட்சி கிடைக்கும்போது பிரம்மத்தின் காட்சி கிடைப்பதில்லை.

-

சிலர் புருவமத்தி மற்றும் உச்சந்தலை இரண்டு நிலைகளிலும் மாறிமாறி சஞ்சரிக்கிறார்கள்

அவர்களுக்கு இந்த இரண்டு காட்சிகளும் அவ்வப்போது கிடைத்துக்கொண்டே இருக்கிறது.இருந்தாலும் இரண்டும் வேறு வேறு அனுபவங்கள்.

 

இறைவனே உலகமாக ஆகியிருக்கிறார் என்ற காட்சி கிடைக்கும்போது,அந்த யோகிக்கு ஒரு உடல் இருக்கும்.

உச்சந்தலையை அடையும்போது. யோகிக்கு உடல் இருக்காது.உடல் ஒடுங்கிவிடும்

-

ஸ்ரீகிருஷ்ணர் இந்த மூன்று நிலைகளையும் பற்றி கூறுகிறார்.

-

10.2 என்னுடைய துவக்கத்தை தேவர் கூட்டங்கள் அறியமாட்டார்கள். ஏனென்றால் நான் தேவர்களுக்கும் மஹரிஷிகளுக்கும் முற்றிலும் முதல்காரணம்.

-

10.3 யார் என்னை துவக்கம் இல்லாதவன் என்றும், பிறவாதவன் என்றும் அறிகிறானோ அவன் மனிதர்களுள் மயக்கமில்லாதவன். அவன் பாபங்களிலிருந்து விடுபடுகிறான்

-

மேலே கூறப்பட்டுள் இரண்டும் பிரபஞ்சத்தை படைப்பதற்கு முன்பு உள்ள நிலை.

கீழே உள்ள இரண்டு ஸ்லோகங்களும் பிரபஞ்சத்தை படைத்தபிறகு ஏற்படும் நிலை

-

10.4,5 புத்தி, ஞானம், மோஹமின்மை, பொறுமை, உண்மை, தமம் (உடலை அடக்குதல்) சமம் (மனதை அடக்குதல்) சுகம், துக்கம், பயம், பயமின்மை, அபயம், பிறப்பு. இறப்பு, அஹிம்சை, ஸமதா,திருப்தி, தபம், தானம், புகழ், இகழ், இப்படி பலவிதமான தன்மைகள் உயிர்களுக்கு என்னிடமிருந்தே உண்டாகின்றன

-

10.6 ஏழு மஹரிஷிகள், அப்படியே மனுக்கள் நால்வரும் என் பிரபாவத்தையுடையவர்கள். என்னுடைய மனதில் பிறந்தார்கள். இவ்வுலகில் உள்ள உயிர்கள் யாவும் அவர்களிடமிருந்தே உண்டாயின.

-

கீழே உள்ள இரண்டு ஸ்லோகங்களிலும் தன்னை தெய்வீகஉருவத்துடன் வழிபடும்படி கூறுகிறார்

-

9.26 யார் எனக்கு பக்தியோடு இலை, மலர், கனி, நீர் அளிக்கிறானோ,அவன் பக்தியுடன் தரும் அன்பளிப்பை நான் பிரத்யாத்மனாக (அவன் அகத்துள் இருந்துகொண்டு)  ஏற்றுக்கொள்கிறேன்

-

9.27 குந்தியின் புதல்வா, எதைச் செய்யினும்,எதை புசிக்கினும், எதை ஹோமம் செய்தாலும், எதைக் கொடுத்தாலும், எந்த தவத்தை செய்தாலும் அதை எனக்கு அர்ப்பணமாக செய்

-

இறைவனை வெளியே வழிபடும் பழக்கம் பழைய காலத்தில் இல்லை.

அகத்திற்குள் இருப்பதாக வழிபடும் பழக்கம் இருந்திருக்கிறது.

 

இதிலிருந்து மூன்று தத்துவங்கள் உருவானது.

-

1.இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார். எல்லா இடங்களிலும் அவரே இருக்கிறார். எல்லா உயிர்களுக்கு உள்ளேயும் வெளியேயும் அவரே நிறைந்திருக்கிறார்.இந்த பிரபஞ்சத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அவரே இருக்கிறார் என்று ஒரு தத்துவம் கூறுகிறது.

இந்த நிலையில் இறைவனுக்கு தனி உடல் இருக்கிறது.

தேவன்தேவி என்ற இரண்டு இல்லை.ஒன்று மட்டுமே உள்ளது

யோகி புருவமத்தியை அடையும்போது ஒளிஉடல் ஒன்று இருப்பதைப்போல.

 

2.இறைவன் உலகத்துடன் தொடர்பில்லாதவர். அவருக்கு உருவம் இல்லை.

இந்த உலகம்,உலகப்பொருட்கள் போன்ற அனைத்தும் உண்மையில் இல்லை. அவைகள் மனத்தின் கற்பனையில் உதித்தவை.அவைகள் மறையவேண்டும்.

அவைகள் மறைந்துவிட்டால் நானும் இறைவனும் ஒன்று என்ற ஞானம் ஏற்படுகிறது என்று இன்னொரு தத்துவம் கூறுகிறது.

அஹம் பிரம்மம்.-நானே பிரம்மம்

அஹம் ஆத்மா-நானே ஆத்மா

சிவோஹம்-நானே சிவன்

-

3.உயர்ந்த உலகத்தில் இறைவன் தேவன்-தேவியாக இரண்டு உருவங்களில் காட்சி கொடுக்கிறார்.

பக்தர்களுக்கு குருவாக இருக்கிறார். பக்தர்கள் கொடுக்கும் உணவுகளை அவர்களது வழிபாடுகளை ஏற்றுக்கொள்கிறார்.

-

இந்த மூன்றுமே உண்மை.

-

சிவன்,விஷ்ணு.காளி,முருகன்,விநாயகர் என்று பல உருவங்களில் இறைவனை வழிபடுகிறோமே இவர்கள் அனைவரும் ஒன்றா? அல்லது தனித்தனியா?

-

இதற்கு பதில்-- மேலே உள்ள தத்துவங்களை படித்தவர்களுக்கு எளிதில் புரிந்துவிடும்

-

இன்னொருநாள் இதைப்பற்றி விரிவாகப்பார்க்கலாம்


No comments:

Post a Comment